ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 16, 2019

வாஸ்து சாஸ்திரம் பலனளிக்குமா...?


வாழ்க்கையில் கஷ்டங்கள் வந்தால் நாம் சாங்கிய சாஸ்திரங்களுக்குப் போக வேண்டியது இல்லை. விநாயகர் தத்துவத்தில் சொல்லப்பட்டது போல
1.நாம் எதை வினையாக்க வேண்டும்...?
2.நாம் எதைக் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்...? என்பதை
3.அந்த அருள் ஞானிகள் காட்டிய வழியில் சென்றால் இன்றைய விஞ்ஞான உலகில் வரும் தீமைகளிலிருந்து மீளலாம்.

இன்று வாஸ்து சாஸ்திரம் என்று சில சாஸ்திரங்கள் எல்லாம் வந்திருக்கின்றது. வாஸ்து என்றால் என்ன செய்கிறார்கள்...? வீட்டில் ஏதாவது கஷ்டங்கள் வந்துவிட்டது என்றால் வீட்டில் உள்ள சில நிலைகளை (வாசலையோ சுவரையோ) மாற்ற வேண்டும் என்று சொல்வார்கள்.

ஆனால் முதலில் அதே வீட்டில் நன்றாகத் தான் வாழ்ந்திருக்கின்றார்கள். இப்பொழுது தான் கஷ்டம் வந்திருக்கிறது.

வீட்டில் இருக்கும் பழைய வாசல்படியை எடுத்து விட்டு அதை வேறு பக்கம் வைத்தால் அந்த வாஸ்து சாஸ்திரப்படி உனக்கு நல்லதாகும்...! என்று இப்படிக் கொண்டு போகின்றார்கள்.

“வாஸ்து சாஸ்திரம் என்பது உண்மை...!” என்ற நினைவில் அதை ஆழமாகப் பதிவாக்கிய பின் வீட்டு வாசலை மாற்றி விட்டால் நமக்கு நல்ல காலம் வரும்..! என்ற இந்த உணர்வைப் பதிவு செய்கிறார்கள். 

அதன்படி வாசலை மாற்றி வைக்கின்றோம்.

அப்படி வளர்ந்து வரப்படும் போது சந்தர்ப்பத்தில் தன் பையன் வெளியிலே ஏதாவது சேட்டை செய்கிறான் அல்லது பக்கத்து வீட்டுக்காரன் நமக்கோ மற்றவர்களுக்கோ ஏதாவது தொல்லை கொடுக்கிறான் என்று வைத்து கொள்வோம்

அதை உற்றுப் பார்த்து... கேட்டு அந்த உணர்வின் தன்மைகளை எடுத்துக் கொண்ட பின்
1.நமக்குத் தொந்தரவு கொடுக்கிறான்...
2.இன்னொருத்தருக்கும் தொல்லை கொடுக்கிறான்...
3.பாவி இப்படிச் செய்கின்றானே.. இப்படி இருக்கின்றானே..! என்ற உணர்வை எடுத்துக் கொள்வோம்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும்
1.நம் உடலிலும் பட்டு... “நம் வீட்டிலும்” பதிவாகி விடுகின்றது.
2.இந்த உணர்வின் தன்மை பதிவான பின் அதே நினைவாகி அதைக் மீண்டும் மீண்டும் கூட்டிக் கொள்கிறோம்.
3.ஒருத்தருக்கு ஒருத்தர் அந்தப் பகைமை உணர்வுகள் வளரத் தொடங்குகிறது.

வாஸ்து சாஸ்திரப்படி வாசலை மாற்றினாலும் கொஞ்ச நாள் நன்றாக இருக்கும். அப்புறம் நாம் எடுக்கும் உணர்வுகள் மாறும் போது அந்தச் சாஸ்திரம் செல்லுமா...? 

வாஸ்து சாஸ்திரத்திப்படி வீட்டையோ வாசலையோ சுவரையோ மாற்றி வைக்கின்றார்கள் அல்லவா...! அந்தக் குடும்பங்கள் எல்லாம் பின்னாடி என்ன ஆகிறது என்று பாருங்கள். பணத்தைச் செலவழித்தது தான் மிச்சம்...!

ஏனென்றால் இது எல்லாம் மனிதனுக்குள் எண்ணும் எண்ணத்தைக் கொண்டு அதைப் பதிவாக்கி அதன் வழி இயக்குவது.

ஆனால் வேதங்கள் கூறியது ரிக்... சாம... அதர்வண... யஜூர்.. மீண்டும் சாம. உடல் ரிக். அதிலிருந்து வரக்கூடிய உணர்வு சாம. 

ஆகவே அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து
1.கஷ்டம் என்ற நிலை போய்...
2.இவர் ஏதோ உயர்ந்ததைச் சொல்கிறார்... என்ற நிலையில்
3.அந்தக் கஷ்டமான உணர்வின் தன்மையை அடக்குகின்றது அதர்வண
4.அப்பொழுது அந்த உணர்வின் எண்ணம் கொண்டு கொஞ்சம் துயரத்தை மறக்கின்றார். அவர் சொல்லும் உணர்வு யஜூர் (யஜூர் என்றால் வித்து) ஆகிறது.
5.பின் மீண்டும் சாம...! அதாவது வாஸ்து சாஸ்திரப்படி சரி செய்து விட்டோம்...! என்று அவரை எண்ணும் போதெல்லாம் சிறிது நாளைக்கு நல்லது வருகிறது.

ஆனால் முதலில் சொன்ன மாதிரி பக்கத்து வீட்டுக்காரன் தொல்லை கொடுக்கின்றான்... பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை... என்ற உணர்வுகளை எடுத்து வேதனைப்பட்டால் அந்த வேதனை என்ன செய்கிறது...?

மீண்டும் இந்த நல்லதை அடக்குகிறது அதர்வண.. பின் மீண்டும் யஜூர்...! கஷ்டப்படும் நிலைக்கே அழைத்துச் செல்கிறது. மீண்டும் தீமைதான் நடக்கும்.

ஆகவே அத்தகைய தீமைகள் நடக்காது நிலைகள் வரவேண்டும் என்றால்
1.அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் கோவிலுக்குச் சென்று
2.அங்கே உணர்த்தப்பட்டுள்ள அந்தத் தெய்வ குணத்தையும் அதை அருளிய மகரிஷிகளின் அருள் உணர்வுகளையும் எடுத்து
3.எந்தப் பகைமை உணர்வுகளும் நமக்குள் உட்புகாது தடுத்துக் கொண்டால் அதற்குப் பெயர் கல்யாண ராமா...!
4.தீமைகள் நம்மை இயக்காது மகிழ்ச்சி (சீதா) என்ற உணர்வை அரவணைக்கும் தன்மையாக நமக்குள் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை நாம் எடுத்தால் வேகா நிலை. இந்த உலகில் துருவ நட்சத்திரத்தை எதுவுமே வேக வைக்க முடியாது.

நீங்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளைப் பெற்று வேகா நிலை பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உங்களுக்குச் சொல்கிறேன் (ஞானகுரு).