ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 20, 2019

ஆண்டவனை வணங்கிட யாருக்கும் யாரும் தூது வேண்டியதில்லை...! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


சாமியார்கள் என்றாலே வேஷதாரிகள்... ஏமாற்றுக்காரர்கள்... சூனியக்காரர்கள்... என்றும் தான் வாழும் வழிக்குத் சாமியார் என்ற வேடம் பூண்டு ஊரை ஏமாற்றுகிறார்கள் என்றும் உருவாக்கி விட்டார்கள்.
1.பல மதங்களைப் பரப்பி
2.பகவானைப் பணிவதற்குப் பல நிலைகளை மக்களுக்கு உணர்த்தி
3.பல கோடி ஜெபங்களை ஜெபித்து
4.ஆண்டவனை வணங்குவதையே மக்களின் மனதில் ஒருவித பயம் கலந்த உணர்வாக உண்டு பண்ணிவிட்டார்கள் இந்தப் பல வழிச் சாமியார்கள்.

இவர்களில் சிலர் பல மந்திரங்களை மக்களுக்குப் புரியாத பாஷையில் ஓதி ஒமகுண்டங்களை வளர்த்து அந்த ஓம குண்டத்தில் பொன்.. வஸ்திரம்... பல வகைப் பதார்த்தங்கள்... இன்னும் பலவற்றைப் போட்டு ஓமங்கள் வளர்க்கின்றனர்.

எட்டுத் திக்கிலும் எட்டுப் பூசாரிகளை அமரச் செய்து அவ்வனைவரும் ஒன்று சேர்ந்து அந்த ஆண்டவனைக் கோடியார்ச்சனை என்ற பேரில் புரியாத சமஸ்கிருத மொழியில் ஓதுகிறார்கள்.

இந்த வழியில் யாகக் குண்டத்தை வளர்த்து மந்திரங்களை ஓதும் பொழுது தான்
1.அந்த ஆண்டவன் வருவானா அந்நிலைக்கு...?
2.யாருக்காக...? யாரின் நிலைக்காக...?

அத்தகைய சாமியார்கள் மக்களிடமிருந்து பொருள் பெறுவதற்காக யாகம் வளர்த்து மந்திரங்கள் ஜெபிக்கின்றனர். ஆக
1.பொருள் தருபவனுக்கு (மக்கள்) அந்தச் சாமியார்கள் செய்யும் பூஜையில் ஆண்டவன் வந்து அருள் தருவானாம்...!
2.ஆண்டவனுக்கு இவர்கள் (சாமியார்கள், பூசாரிகள்) தூதுவர்களாம்...!

பல ஆயிரம் செலவு செய்து யாக குண்டம் வளர்த்து அந்தப் பூசாரிகளுக்கு அன்னமளித்து பொருள் தந்து அந்த ஆண்டவனை வணங்கினால் இவன் செய்த பாவங்களும்.. இவன் எண்ணமும் மாறி.. அந்த ஆண்டவன் வந்து அருள் புரிவானாம்..!

1.ஊரை ஏமாற்றி
2.உள்ள நிலையைப் புரிந்திடாமல்
3.தன் புகழைப் பரப்பப் பூஜை செய்பவர்கள் தான் பெரும்பாலனவர்களாக உள்ளார்களப்பா...!
4.இவர்களின் நிலைக்கெல்லாம் இந்தப் பல வழிச் சாமியார்கள் பெரும் தூதுவர்களப்பா...!

செய்த பாவத்தைக் கழித்திட பூஜை செய்துவிட்டால் பாவம் தீர்ந்துவிடுமா...? அவர்கள் தான் அதைப் பாவம் என்றே எண்ணுவதில்லையே...!

புகழுக்காகத் தான் சம்பாதித்த செல்வத்தை “அந்த ஆண்டவன் வந்து காப்பாற்றித் தர வேண்டும்...” என்பதற்காக அந்த ஆண்டவன் பெயரைச் சொல்லிப் பல பூஜை செய்கிறார்கள் இந்தப் பாமர மக்கள். “பெரும்பாலான பூஜை முறையே... இப்படித்தானப்பா உலகெங்கிலும் உள்ளது...!”

இந்த மனிதர்களை மாற்றிடவும் நல்வழியில் அழைத்துச் செல்லவும் நல் வழியில் பல சாமியார்கள் (நல் வழிச் சாமியார்கள்) இன்றும் உள்ளார்கள்... அன்றும் இருந்தார்கள்...!

பல ஜெபங்களை ஜெபிக்கச் சொல்லி மக்களின் மனதினிலே நல்ல உணர்வுகளை ஆழமாகப் பதிய வைக்க நல் வழிச் சாமியார்கள் எல்லாம் நாட்டம் கொண்டு நடந்திட்டார்கள்.

இன்னும் சில இடங்களில் சில சாமியார்கள் அந்த ஆண்டவனின் சக்திக்குப் பல வகை நாமங்களைச் சூட்டி புவனேஸ்வரி பூஜை... சௌண்டேஸ்வரி பூஜை... காமாட்சியம்மன் பூஜை...! என்று இன்னும் பல நாமங்களைச் சூட்டி அந்தச் சக்தியின் நிலைக்கே பல யாகங்களை வளர்த்துப் புகை மண்டலங்களை எழுப்பி
1.தான் வாழ தன்னைச் சார்ந்தவர்கள் வாழ தன்னை நம்பி வருபவர்களை வாழ வைக்க
2.இப்படியும் பல நிலைகளைச் செய்கிறார்கள்.

நல்ல மணத்தைக் கொண்ட புகை மண்டலத்தை எழுப்பி அந்த ஆண்டவனை ஜெபிக்கும் பொழுது எந்நிலையில் நாம் ஜெபிக்கின்றோமோ அந்நிலையில் அவர் அவர்கள் ஜெபிக்கும் நிலைக்கு அந்தச் சக்தி நிலை வருகிறதப்பா...!

1.ஆண்டவனை வணங்கிட யாருக்கும் யாரும் தூது வேண்டாமப்பா...!
2.எல்லோருமே அவரவர்கள் நிலைக்குத் தகுந்தபடி அவன் அருளை எப்படியும் பெறலாமப்பா..!
3.அவனவன் எண்ணத்திலும் சுவாசத்திலும் தான் எல்லாமே இருக்கின்றதப்பா...!

ஓ...ம் என்ற நாதத்தில் உருளுகின்ற உலகினிலே
உதித்துள்ள உயிரணுவாக
உன்னையே... நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா...!
உன்னையே... நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா...!

உன்னை நான் பார்த்திடவே
என்னில் உன்னைக் கண்டிடவே
உன்னையே... நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா...!

உன் வழியில் சத்தியத்தை
உன் வழியில் தர்மத்தை
உன் வழியில் நியாயத்தை
உன்னை எண்ணும் இதயத்தில்
ஊன்றிடுவாய் ஈசனின் சக்தியே

ஓ...ம் என்ற நாதத்தில் உருளுகின்ற உலகினிலே
உதித்துள்ள உயிரணுவாக
உன்னையே... நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா