ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 25, 2019

“பிறருக்காக… பிறருக்காக…!” என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தனக்காக என்ன செய்ய வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


நாம் உண்ணும் உணவை எல்லாம் நம் உடல்… உடலுக்கு ஏற்ற சத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவற்றை எல்லாம் கழிவுப் பொருளாக ஆக்கிவிடுகின்றது.

1.நம் உடல் அமைப்பையே ஆண்டவன் இந்நிலையில் அளித்திருக்கும் பொழுது
2.நம் ஆத்மாவிற்கு நாம் இன்னும் எத்தனை பெரும் தெய்வீக நிலையை ஏற்றுத் தர வேண்டுமப்பா..!

நம்மைச் சுற்றிப் பல பல காரியங்களும் நல்லெண்ணம் உடையவர்களும் தீய எண்ணம் உடையவர்களும் எல்லாம் தான் கலந்துள்ளன.

நம்முள் இருக்கும் பல கோடி அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகாமல் நம் சுவாச நிலையில் நம் ஆத்மாவுக்கு வேண்டிய நல்ல நிலையைத்தான் நாம் பெற வேண்டுமப்பா…!

நம் உடல் அமைப்பை ஆண்டவன் இந்நிலையில் அளித்திருக்கும் பொழுது நம் ஆத்மாவிற்கு நாம் தானப்பா பெரும் பொக்கிஷத்தைத் தேடி வைத்திட வேண்டும்.

இன்றைய பெரும் பகுதி மனிதர்கள் உள்ளோன்று வைத்து வெளியிலே ஒன்று பேசுபவர்களாகவும் பிறருக்காக… பிறர் மெச்சத் தான் வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாகவும் தான் நாம் பார்க்கின்றோமப்பா..!
1.பிறருக்காக வாழ்பவரும்
2.பிறர் பார்த்துப் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்பவரும்
3.பிறரைத் துவேஷிப்பவரும்
4.பிறரைப் புகழ்பவரும் எல்லோருமே
5.தன் ஆத்மாவை மறந்துவிடுகின்றார்களப்பா…!

இன்றைய உலகில் உள்ள நற்காரியங்கள் செய்பவர்களும் புகழ்ச்சிக்கு ஏங்கித்தான் செய்கிறார்களப்பா…!
1.புகழ்ச்சிக்கு ஏங்கிச் செய்யும் நற்காரியங்களும்
2.ஆத்மாவிற்கு ஒரு நன்மையும் செய்வதில்லையப்பா…!

பசித்து வருபவனுக்குப் பசி அறிந்து அன்னமிட்டாலும் இந்தக் காலத்தில் அதையும் ஏமாற்றிப் பிழைக்கத்தான் பார்க்கின்றார்களப்பா…! நல்லவர்களையும் நல்லவர்களாக வாழவிடுவதில்லையப்பா இன்றைய உலகம்.

இன்றைய உலகிலிருந்து மீண்டு வருவதுவே நம் ஆத்மாவிற்குத் தேடித் தரும் பொக்கிஷமப்பா…!