ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 18, 2019

மனைவியிடம் கணவன் பெற வேண்டிய அருளாசி (ஆசீர்வாதம்)


புதிதாகத் திருமணமான கணவன் மனைவி உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் சிறு குறைகள் ஏற்பட்டாலும் அடுத்த நிமிடம் ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும்.

திருமண நாளில் உங்களுக்கு ஆசீர்வதித்தார்கள் அல்லவா...!
1.அந்த அனைவரின் ஆசீர்வாதமும் பெற வேண்டும் என்று ஏங்கிவிட்டு
2.கணவனுக்கோ மனைவிக்கோ இந்தக் குறைபாடுகள் வந்தாலும் அந்தக் குறைகளை எண்ணாதபடி
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெறவேண்டும்... நாங்கள் தெளிந்த மணம் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

மனைவி பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் அந்த அருள் ஞானம் பெறவேண்டும் என்று மனைவி பால் உள்ள குறைகளை கணவன் இப்படி எண்ணுதல் வேண்டும்.

அதே போல் கணவன் பால் இத்தகைய குறைகள் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று கணவன் பொருளறிந்து செயல்படும் சக்தியும் மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறவேண்டும் என்று மனைவி எண்ணுதல் வேண்டும்.

என்னை அரவணைக்கும் அந்த அருள் ஞானம் என் கணவர் பெறவேண்டும்... அந்த அருளாசி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மனைவி எண்ணிப் பழகுதல் வேண்டும்.

1.ஏனென்றால் மனிதன் என்ற வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலேயும் சிறு குறைகள் வரத்தான் செய்யும்
2.அந்தக் குறைகளை உடனடியாக நீக்கிப் பழக வேண்டும்.

கணவன் மனைவி இருவருமே எந்தக் குறைகளைக் கண்டாலும் முதலில் தன் தாய் தந்தையரை எண்ணி உங்கள் திருமண நாளை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் என் கணவர்/மனைவி பொருளறிந்து செயல்படும் அருள் சக்தியும் மலரைப் போல் மணம் பெறும் சக்தி பெற்று அருள் ஞானம் பெறும் அந்த அருளாசி எனக்குக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

வெளியிலே எங்கே சென்றாலும் அம்மா அப்பா அருளால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்... “எங்கள் காரியங்கள் எல்லாம் வெற்றி பெறவேண்டும்...” என்று எண்ணித் தியானிக்க வேண்டும்.

கணவன் வெளியிலே எங்கே சென்றாலும் மனைவியிடம் சொல்லி
1.உன்னுடைய அருளாசி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்
2.எல்லோரும் என்னை மதிக்க வேண்டும்
3.அந்த அருள் சக்தி உன்னிடம் தான் இருக்கின்றது...
4.எனக்கு அந்த அருளாசி கொடு...! என்று எண்ணிவிட்டு வெளியிலே செல்ல வேண்டும்.

அதே போல மனைவியும் கணவனை எண்ணி என் அன்னை தந்தையரின் அருளால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கணவர் பெறவேண்டும் அவர் சொல்லும் செயலும் புனிதம் பெறவேண்டும் அவர் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும் அவர் பார்ப்போருக்கெல்லாம் நல்ல நிலை கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

விவசாய நிலங்களுக்குச் செல்லும் பொழுதும் மனைவி தன் கணவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் அவர் பார்வையில் அந்தப் பயிரினங்கள் செழித்து வளர வேண்டும் அந்தச் சக்தி என் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணிச் சொல்லுதல் வேண்டும்.

எங்கே வெளியில் சென்றாலும் கணவன் மனைவியிடம் சொல்லி
1.என் காரியம் சித்தியாக வேண்டும்
2.உன் அருள் வேண்டும் என்று மனைவியிடம் கேட்டுச் செல்ல வேண்டும்.
3.ஏனென்றால் இருவரும் வேறல்ல... சக்தி இல்லையேல் சிவமில்லை... சிவம் இல்லையேல் சக்தியில்லை....!

 ஆகவே இந்த வாழ்க்கையில் எப்பொழுதுமே அன்னை தந்தையரின் அருளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கி வாழ்ந்தால் வாழ்க்கையில் என்றுமே பேரின்பம் கிடைக்கும்.

1.சாதாரணமாக... “மனைவி தான்” என்று எண்ணிவிடக் கூடாது.
2.அருள் தெய்வம் என்ற எண்ணத்திலேயே நாம் வருதல் வேண்டும்.
3.மகாலட்சுமி என்று கூட நீங்கள் எண்ணலாம் - சர்வத்தையும் உருவாக்கும் சக்தி பெற்றது.

பெண்களுடைய வாக்கை என்றுமே ஆண்கள் தொடர்ந்தால் எதை வாழ்த்தி அனுப்புகின்றார்களோ அந்த வாக்கின் பிரகாரம் அந்தக் காரியங்கள் நல்லதாகும்.

கணவன் மனைவி திருமணமாகும் பொழுது இரு மனமும் ஒன்றாக ஆனது போல
1.என்றுமே இந்த வாழ்க்கையில் எண்ணினால்
2.என்றுமே பிரியாத நிலைகள் கொண்டு உங்களுக்கு இனிப் பிறப்பே இல்லை.

இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து இந்த வாழ்க்கையில் எப்பொழுது நீங்கள் பேரின்பம் பெறுகின்றீர்களோ அந்த அருள் வாழ்வு என்றுமே இருக்கும். அடுத்து உடல் இல்லை. இதே உடலின் உணர்வுகள் ஒளியாகிப் பேரின்பமாக வாழ முடியும்.