ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 26, 2019

இராவணனை “தசைப்பிரியன்…!” என்று ஏன் சொல்கிறோம்…?


பிறரைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அந்த வேதனைப்படுவோரின் உணர்வுகளை நுகர்கின்றோம். அந்த உணர்வுகள் நம்மையும் வேதனைப் படச்செய்கிறது.

1.இருந்தாலும் நாம் எல்லோரையும் காப்பாற்றிவிடுகிறோம்.
2.காப்பாற்றிய பின் அவர்களுக்கு வந்த நோய் நமக்கு வந்தவுடனே என்ன நடக்கின்றது…?
3.ஐயோ… அவர்களை எல்லாம் காப்பாற்றினோமே…!  எனக்கு இப்படி நோய் வந்து விட்டதே…! என்று புலம்புகிறோம்.

அப்படி வேதனைப்படும் சமயங்களில் யாராவது சந்தோசமாச் சிரித்து பேசினால் நீங்க பொறுத்து இருப்பீர்களா…? நான் இருக்கும் நிலையைப் பார்த்து உனக்குக் கிண்டலாக இருக்கிறதா என்போம்…! இதே நிலைமை உங்களுக்கும் வந்தால் தான் தெரியும்…! என்று சொல்வோம்.

அதே மாதிரி ஒருவர் திட்டினார்… வேண்டாத பேச்சுகளைப் பேசினார் என்று சொன்ன பிற்பாடு “அட… திட்டி விட்டுப் போகிறார்… விடுங்கள்…!” என்று சொன்னால் நமக்குக் கோபம் வருகிறதா இல்லையா…?  

அப்பொழுது என்ன செய்கிறீர்கள்…? உங்களிடம் சந்தோஷத்தை ஊட்டக் கூடிய நிலையை எதையாவது பாரக்க முடிகிறதா…? ஆக மொத்தம் அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் ஆகும்போது என்ன நடக்கிறது…?

நம் உயிர் பத்தாவது நிலையை அடையக்கூடியது. இந்த மனித உடல்  தசப்பிரியன். சீதா என்பது உடலுக்குள் சந்தோஷத்தை ஊட்டக் கூடிய நிலைகள்.

நீங்கள் கோபமாக இருக்கும் போது மற்றவர்கள் சிரித்துப் பேசினால் சந்தோஷம் வருமா…? கிண்டல் செய்கிறீர்களா…? என்று சொல்லி அவர்களை உதைக்கத் தான் செல்வீர்கள்.

அதே மாதிரி நீங்கள் வேதனைப்படும்போது யாராவது சிரித்தால் என்ன ஆகும்…? நாம் படுவதைப் பார்த்தால் அவர்களுக்குச் சிரிப்பு வருகிறது…! என்று பொறுமுவோம்.

உங்கள் பையனே குறும்புத்தனம் செய்தாலும் அவன் நல்லவனாக  வரவேண்டும் என்று சொல்லி மற்றவர்கள் சிரித்துக் கொண்டு இருந்தால் “அங்கே பார்…! அவன் சேட்டை செய்வதைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்… அறிவு இருக்கிறதா… என்று கேட்போம்…!
1.அந்த நேரத்தில் சந்தோஷம் என்பதே வரவில்லை.
2.அதைக் காட்டுவதற்காகத்தான் பத்துத் தலை இராவணனைத் தசைப்பிரியன் என்று காட்டுகின்றார்கள்.

நாம் எத்தனையோ கோடி உடல்களில் வந்த தீமைகளை எல்லாவற்றையும் நீக்கி மனிதனாக வந்திருக்கின்றோம். ஆனால் இப்பொழுது நம்முடைய சந்தர்ப்பம்
1.நம் பார்வையில் படும் உணர்வுகள் உடலுக்குள் வந்தவுடன்
2.அந்த அரக்க உணர்வுகள் இந்த மனித உடலையே அழித்துக் கொன்று தின்கிறது என்று காட்டுகிறார்கள்

மற்ற உயிரினங்கள் எப்படி ஒன்றை ஒன்று கொன்று தின்றதோ அதே மாதிரி நம் உடலுக்குள்ளும் பல பல குணங்களின் உணர்வுகள் வந்து மனித உடலை உருவாக்கிய அணுக்களைக் கொன்று தின்கிறது.

உதாரணமாக கோபம் என்ற அந்தக் காரமான உணர்ச்சி வந்தால் நமக்குள் உள்ள நல்ல சாந்தமான அணுக்களைக் கொன்று திங்க ஆரம்பிக்கிறது. அப்பொழுது சரியானதைக்  கேட்க வேண்டும் என்றால் கேட்க முடியாது.

அதே சமயத்தில் வேதனைப்படும் உணர்வுகளை நீங்கள் எண்ணினால் அந்த விஷத் தன்மை உடலுக்குள் பரவும் பரவிய பின் கை கால் வலிக்கும். அந்த நேரத்தில் உங்களிடம் சந்தோஷம் வருமா…?

ஆக சந்தோஷப்படும் அந்தச் சீதாவை (மகிழ்ச்சியை) இராவணன் இலங்கையில் (உடலுக்குள்) சிறைப்பிடித்து வைத்து விடுகிறான்…! என்று எவ்வளவு அழகாக இராமாயணத்தில் காட்டுகின்றார்கள்.

உயிரணு தோன்றிய பின் பல உணர்வின் தன்மைகளை எடுத்துக் கடவுள் அவதாரம் “வராகன்” என்று வந்த பின் தீமையை நீக்கி தீமையை நீக்கக்கூடிய உடலாகப் பெறுவது “பரசுராம்…” (மனித உடல்)

மனிதனான பின் வரும் தீமைகளைச் சமப்படுத்தவேண்டும் என்று எண்ணினாலும் அதைச் சீராகப் பயன்படுத்தாதபடி பலருடைய உணர்வுகளைத் தெரிய வேண்டும் என்று விரும்பி நுகர்கிறோம் “பலராம்” (பல எண்ணங்கள் – பலராமன்).

பல எண்ணங்களை எடுத்துத் தீமை என்ற உணர்வு ஆனபின் அதைத் தடுக்க வேண்டுமல்லவா…! அது தான் நரசிம்மா…!
1.அந்தத் தீமைகளை உடலுக்குள் உருவாக விடாதபடி
2.மடி மீது இரண்யனை வைத்து வாசல்படி மீது அமர்ந்து நரநாராயணன் அந்த இரண்யனைப் பிளந்தான்
3.ஆகவே அந்த ஒன்பதாவது நிலைகளில் தீமை புகாது தடுத்தால் தான் நாம் இங்கிருந்து தப்ப முடியும்
4.பத்தாவது கல்கி என்ற அழியாத ஒளிச் சரீரம் பெற்று விண்ணுலகத்தை அடைய முடியும்.

ஞானிகளால் படைக்கப்பட்ட காவியங்களில் உள்ள உட்பொருளை அறிந்து கொண்டால் நாம் விண் செல்வது சுலபம்.