ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 17, 2019

நடப்பதெல்லாம் நம் நன்மைக்குத் தான்..! என்று எண்ண வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


வாழ்க்கையில் வரும் மோதல்களில் இருந்து சஞ்சலமற்ற... சமமான நிலை பெற்றிட வேண்டும் என்றால்... எண்ணம் பரிசுத்தமாக நிலை பெற வேண்டும் என்றால்... எடுக்க வேண்டிய முயற்சி நுண்மின் காந்த ஒளியைத் தியானத்தின் மூலம் ஈர்த்துக் கொள்வதே ஆகும்.

பஞ்சேந்திரியங்கள் கொண்டு உணர்ந்திடும் தன்மை போல் ஆத்ம வலுவின் தொடருக்கு மனத் திறன் பெறவேண்டும். மனத் திறன் என்றால் என்ன...?

1.மனச் செவி
2.மனச்சுவை
3.மனத்தால் மணம் நுகர்தல்
4.சகலமும் பேரின்பமாக ஆனந்தத்தில் என்னும் மனஸ்பரிச உணர்வு என்ற இவை அனைத்தும்
5.ஸ்தூல (திட) சரீரம் கொண்டு சூட்சம ஒளிச் சரீரம் பெற்றிடும் அகச் செயலில் வலுக் கொள்ளும் நிகழ்வுகளப்பா...!
6.அனைத்திற்கும் தியானமே மூல காரணம்.

மூல காரணம் எனும் ஊண் தன்மையாகச் சரீரம் முழுமைக்கும் மெய் ஒளி பரவி உயிரான்ம சக்தியாக லிங்க உடலாக வெளித் தோன்றாத் தன்மையாக “என்றும் நிலை பெற முடியும்...”

ஆகவே அந்த ஆதிசக்தியுடன் ஒன்றிடும் சக்தி பெற வலுவின் வலுவாகும் மூலச்சக்தியின் குணத் தன்மைகளை உணர்ந்து கொள்ளும் பொழுது இந்த மானிடப் பிறவி... “கிடைத்தற்கரிய பிறவியாக அமைகிறது...!”

ஜீவன் பெற்று எத்தனையோ பிறவிகள் பெற்றே வாழ்ந்திடும் உயிர்த் தொகைகளின் சுவாச அலைகள் ஒலி ஒளி அலைகளாகக் காற்றில் பரவிப் படர்ந்தே உலவிக் கொண்டே உள்ளது.

பகுத்தறியும் ஆற்றல் கொண்ட மனிதனின் பரபரப்பாக வாழும் வாழ்க்கைக் தொடர் என்ற இன்றைய கால கட்டத்தில் தான் கொண்ட எண்ணங்களுக்கொப்ப காற்றிலே கலந்த அந்தச் சுவாச கதியை ஈர்த்து வினைச் செயலாகப் பற்பல வாழ்க்கை அனுபவங்களில் பெற்ற பயன் தான் என்னப்பா...?

1.சுவாசிக்கும் சுவாசமானது... சரீரத்தினுள் அமையப் பெற்றுள்ள முக்கிய நாடிகளில் ஓடி
2.சிரசில் அமைவுற்ற கட்டளைக் கேந்திர நாடிகளுடன் தொடர்பு கொண்டு
3.புறத் தொழில் கதிப்படும் உறுப்புகளாகிய கண் காது மூக்கு வாய் இவைகளில் ஓடி
4.அக்கினி கேந்திரமாகிய மூலாதாரம் எனப்படும் குதகுய்ய நாடிகளுடன் இணைந்து செயல்படும் செயலில்
5.அந்தந்த அவயங்களில் அமைவுற்ற காற்றுகள் தம் தம் செயலுக்கு உறுப்புகளின் நாடி வழியாக ஓடி
6.உடலுக்கு வெப்பத்தை உயிர் ஜீவனாக அளித்திடும் மூலாதார நாடிகளிலே
7.சரீர இயக்கத்தின் வினைச் செயல் மனிதன் கொண்ட எண்ண நிலைக்கொப்ப அனைத்துச் செயல்களும் நடைபெற்று ஓடிக் கொண்டுள்ளது.

செவிகளில் வலம் இடமாக ஓடிடும் நாடிகள் ஓர் ஓசையின் அலைகளால் மோதுண்டவுடன்
1.அந்த ஓசையின் பொருளை அந்தக் கணமே அறிந்து கொள்ளும் மிக நுண்ணிய கால அளவில்
2.சரீரத்தினுள் முக்கிய நாடிகளின் ஈர்ப்பின் செயலாக மூச்சலைகள் ஓடி
3.சிரசின் கட்டளைக் கேந்திரத்தில் பிடர்தல் (என்ற) ஓசைகள் மோதியவுடன் - செவியில் ஏற்படும் அதிர்வுகளில்
4.அறிந்து கொண்டிடும் அறிவாக மூலாதார அக்கினியின் தொடர்பு உண்டப்பா...!

வெப்பத்தாலோ மின்சாரத்தாலோ செயலுறும் இன்றைய இயந்திரங்கள் எதையும் ஒப்பிட முடியாத மனோசக்தித் திறன் தியானத்தின் மூலம் எடுக்கும் மிக மின் நுண் காந்த அலைகளால் செயல்படும் நிலை உணரத்தக்கது.

இந்தச் சரீர வாழ்க்கையில் எதிர் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் செவி நாடிகள் நம் ஆத்மாவின் பதிவுச் செயலுக்கு முக்கிய பங்கேற்கின்றன.

1.எண்ணங்களில் மோதல்களால் (உணர்வுகளால்)
2.கனம் கொண்ட சுவாச அலைகளைச் சுவாசமாக ஏற்க வேண்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம்
3.உடனுக்குடன் உயர் மின் நுண் காந்த அலைகளை ஈர்த்து
4.அனைத்துமே நமக்கு நன்மை அளித்திடும் செயலே என்ற மனதின் திடம் கொண்டு
5.“சுபம் சுபம் சுபம்...!” என்ற ஒலி நாதத்தை ஏற்படுத்தி
6.நம் ஆத்ம பதிவில் நல்மதியின் உயர் ஞான ஒளியாக
7.”ஆத்மாவின் மூலம்” வலுப் பெறவேண்டுமப்பா..!

ஏனென்றால் உயர் ஞானமாக ஆக்கப்படும் செயல் அனைத்தும் நன்மையே...!

சுபம்... சுபம்... சுபம்...!