ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 27, 2019

தவறை எண்ணி வருந்தும் பொழுதே நம் ஆத்மா “நம் தவறுக்கு மன்னிப்பு அளிக்கின்றது…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


1.எந்த ஆண்டவனும்… எந்தக் கடவுளும்… நம் ஆயுளை நிர்ணயிக்கவில்லை.
2.அவனவன் எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…!

அவனவன் சுவாச நிலையைக் கொண்டு அவனவனுக்கு வரும் வியாதிக்கும் பிணிக்கும் வித்திட்டவன் ஆண்டவனா…?

இவன் உண்ணும் உணவிலும் சுவாச நிலையிலும் உடல் என்னும் கூட்டிற்கு “இவனே தேடிக் கொள்கின்றான் பல வினைகளை…!”

இவன் உடலில் வரும் வியாதியில் இவன் உடல் படும் அல்லலைக் கண்டு இந்த உடலிலிருந்து பிரிந்து செல்கிறது அந்த ஆத்மா.

எந்த நிலையிலும் இவன் அந்த ஆத்மாவை ஆண்டவனாக எண்ணி இந்த உடலில் தங்கி இருக்க வேண்டும் என்ற அவா வைத்து “ஆண்டவனே தான் இவ்வாத்மா…!” என்ற எண்ணம் தோன்றி வேண்டிக் கொண்டால் இந்த உடலை விட்டு இவ்வாத்மா எந்தக் காலத்திலும் பிரிந்து செல்லாது.

1.ஆத்மா என்னும் ஜோதி தான் எல்லா உயிரினத்திலும் உள்ளதப்பா..!
2.பெரும் சித்தர்களும் ரிஷிகளும் அவர்கள் உடலில் உள்ள ஆத்ம சக்தியைப் புரிந்து கொண்டு தானப்பா
3.அவர்கள் அந்த உன்னத நிலையைப் பெற்றார்கள்.

மனித உடலில் தான் அந்த உன்னத நிலையைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளது. மனித உடலை மாற்றிக் கொண்டால் இன்னும் பல கோடி ஆண்டுகளாகுமப்பா அந்த ஆத்மா ஜோதியுடன் ஜோதியாகக் கலப்பதற்கு…!

ஒவ்வொரு மனிதனும் “தன்னுள் ஆண்டவன் இருக்கின்றான்…!” என்ற எண்ணமுடன் வாழ்ந்திட்டால் இன்றையக் கலியில் நடக்கும் கூத்துக்கள் எல்லாம் இருக்காதப்பா…!

ஆண்டவனின் சக்தியைக் கல்லிலும் மண்ணிலும் பார்த்துத்தான் வணங்குகிறார்கள்.
1.இவர்கள் வேண்டுவதெல்லாம்…
2.அக்கல்லின் உருவத்தில் இவர்களுக்கு ஆண்டவன் வந்து அருள் செய்ய வேண்டும்…! என்ற எண்ணம் தான்
3.இன்றும் அப்படித்தான் உள்ளது.

நம் ஆத்மாவில் உள்ள அருளை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமப்பா…! நம் ஆத்மாவின் மூலமாக நாம் ஜெப நிலையில் இருக்கும் பொழுது எல்லா நிலையையும் அறிந்து கொள்ளலாம்.

1.நாம் யார்…?
2.நம் ஆத்மாவின் நிலை என்ன…?
3.நம்முள் இருக்கும் ஈசனின் சக்தி என்ன…? என்ற எல்லா உண்மையுமே அறிந்து கொள்ளலாம்.

நாம் பாவம் செய்து விட்டோம்…! அதனால் நமக்கு இனி இந்த ஜென்மத்தில் என்ன பேறு கிடைக்கப் போகிறது…? என்ற எண்ணம் என்றுமே எண்ணிடலாகாதப்பா…!
1.தவறை எண்ணி வருந்தும் பொழுதே
2.நம் ஆத்மா நம் தவறுக்கு மன்னிப்பு அளிக்கின்றதப்பா…!

நம் ஆத்மாவின் நிலையேதான் ஆண்டவன் என்ற ஒரே எண்ணம் மக்களுக்கு வந்து தன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டுமப்பா..! அழியும் யுகத்தில் அழியாச் செல்வம்… ஒரே செல்வம்… இவ்வாத்மா தானப்பா…!

கலியின் கடைசியில் கல்கியின் ஆரம்பமான நாளில் “கடைசிச் சந்தர்ப்பத்தை…” ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்திக் கொண்டு தன் ஆத்ம ஜோதியை அவ்வாண்டவனுடன் கலக்க விட்டு ஆண்டவனுடன் ஆண்டவனாக அச்சூட்சம உலகத்திற்கு அழைத்துச் செல்லத்தான் இந்தப் பாடங்கள் எல்லாமே…!

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் இவ்வாத்மா என்னும் ஆண்டவனின் சக்தியைப் புரிந்து கொண்டு
1.ஆத்ம ஜோதியாகக் கலந்திட வேண்டும் என்பது தான்
2.இவ் ஈஸ்வரபட்டனாகிய உங்கள் குருவின் குருநாதனாகிய நான் அளித்திடும் “பொக்கிஷம்…!”