ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 12, 2019

நாம் ஏன் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்...? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


அறுசுவை உணவுகள் உண்டிடும் காலத்தே உட்கொள்ளும் பொருள்களின் சுவைகள் அது காரமோ... புளிப்போ... உவர்ப்போ.. இனிப்போ.. துவர்ப்போ.. கையிப்போ..! எந்தச் சுவை ஆகினும் அந்தச் சுவைகளின் குணங்களின் கன பரிமாண அடர்வின் தொகுப்பில் திகட்டல் ஏற்பட்டால் என்ன செய்கிறோம்..?

உடனே நீரைத் தான் தேடிச் சென்று குடிக்கின்றோம். நீரை உட்கொண்டு அந்தச் சுவைகளைச் சமன்படுத்துதல் போல் ஜீவ காந்த சரீரம் கொண்டிடும் உணர்வில் கனமான சுவாச அலைகளை நீக்கிட என்ன செய்ய வேண்டும்...?

1.அந்தச் சுவைகளுக்கெல்லாம் வீரியமான உயர்வெண்ண மின் காந்த அலைகளை
2.மகரிஷிகளை எண்ணி ஈர்த்திடும் செயலில்
3.நம் சுவாச ஓட்டம் அமைதி கொண்டு நம்முடைய உணர்வின் குணங்களும் சமன் கொள்ளும்
4.நம் சுவாசமும் நாடியும் சீராகும்.

சுலபமாகப் பெற்று உயர்ந்திடும் இந்தத் தியானத்தின் வழியில் செயல்படுத்தும் “மனத்தின் திறன்” என்பதெல்லாம் அவரவர்களின் எண்ணத்திற்கொப்பத்தான் கொள்ள முடிந்திடும்.

தான் கைக்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும்... காரியமாற்றும் நிலையிலும்...
1.தன் ஆத்ம உயர்வுக்காக வேண்டி
2.எண்ணிச் சுவாசித்திடும் பக்குவம் தானப்பா ஆத்ம சுத்தி என்பது.

சரீர வாழ்க்கையில் சுவாச ஓட்டத்தின் செயலில் மனிதன் ஒவ்வொரு நிமிடத்திலும் எடுக்கும் உணர்வுகளின் வீரியத்தால் நமக்குள் மாற்றம் கொள்ளச் செய்யும் செயல்களாக பயம்... கோபம்... மோகம்... ஆவேசம்... ஆத்திரம்... பழி.... ஆகிய இந்தக் குணங்களின் மோதல்களால் முதலில் பாதிக்கப்படுவது சரீரம் தானப்பா…!

அது எப்படி என்றால்...
1.சுவாச ஓட்டங்கள் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படும் செயலில்
2.சிறுகச் சிறுகக் கூட்டிக் கொள்ளும் அந்த உணர்வுகளின் வலுவினால்
3.இரத்த நாளங்கள் குழைவு கொண்டு
4.நரம்பு ஓட்டங்களில் தளர்வு பெற்று
5.எலும்புகளின் ஊண் ஒளி குறைவுபட்டுத் தளர்வுறும்.

பக்குவமாக அந்தக் குணங்களை விலக்கிக் கொண்டு நல் நிலை பெறுவதற்கே இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதமப்பா...! அதனால் சரீர சுத்தியும் கிடைக்குமப்பா...!