ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 20, 2016

"தீமைகள் தொலைய வேண்டும்" என்று தான் சொல்ல வேண்டும்...!

வீடடில் நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம். அதிலே ஒரு பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுவோம். அந்த வேதனையான உணர்வுகள் வீடெல்லாம் பரவும்.

அப்பொழுது அந்த வேதனை உணர்வுகள் வீடெல்லாம் பரவும்பொழுது நம்முடைய எண்ணங்களும் மாறுபட்டுவிடுகின்றது. பிறகு “சடார்...,” என்று இவன் தொலைந்து போகவேண்டும், அவன் தொலைந்தால் பரவாயில்லை” என்ற எண்ணம் தான் வரும்.

அதற்குப் பதிலாக அவனுக்குள் இருக்கும் “அந்தக் கெடுமதி தொலைய வேண்டும்..,” என்ற எண்ணம் வராது.

இங்கே திடீரென்று நான் கோபிக்கின்றேன் என்றால் அவர்களிடம் இருக்கும் கெட்ட புத்தி போகவேண்டும் என்று தான் கோபித்துச் சொல்வேன்.

ஆனால், சாதாரண வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு “இப்படிப் பண்ணுகிறானே இவன் இங்கிருந்து தொலைந்தால் தான் நல்லது..,”””” என்ற இந்த உணர்வு தான் வரும்.

இந்த எண்ணத்திலே இப்படி இரண்டு பிரிவு இருக்கின்றது.

ஆகவே, யார் மேல் நமக்கு வெறுப்பு வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இந்த உணர்வுகள் அவர்கள் உடலில் பட்டு அவர்கள் உடலிலுள்ள தீமையான செயல்கள் மறையவேண்டும். அவர்கள் அதிலிருந்து காக்கப்பட வேண்டும் என்று இந்த முறைப்படி நாம் எண்ணினால் அவர்கள் தீமைகள் நமக்குள் வருவதில்லை.

அதே சமயத்தில் அங்கே அவர்களையும் தீமைகளிலிருந்து விடுபடச் செய்கின்றோம்.

அதனால் தான் யாம் சில நேரங்களில் கோபிப்பது. சாமி என்ன இப்படி நம்மைக் கோபித்துப் பேசுகின்றார் என்று சிலர் நினைப்பார்கள்.

ஆக, அவர்களிடம் உள்ள “தீமைகள் குறைய வேண்டும்” என்ற உணர்வுக்கு “அழுத்தம்” கொடுப்பேன். . அப்பொழுது யாம் கோபமாகச் சொல்லும் அந்த நிலைகள் அங்கே நன்மை பயக்கும்.

சாதாரண நிலைகளில் இருக்கும் பொழுது ஏதாவது தப்பு என்று கோபம் வந்தால் அதைக் கெடுக்க உதவும். தன்னயும் கெடுத்துவிடும். அவர்களையும் கெடுத்துவிடும்.

ஏனென்றால், இதெல்லாம் ஒவ்வொரு சந்தர்ப்பமும் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நம்மை எப்படி மாற்றுகின்றது என்று இமயமலையில் வைத்து அனுபவபூர்வமாகக் கொடுத்தார் குருநாதர்.

நாம் பலவீனமான எண்ணங்களை எண்ணும் பொழுது அங்கே குளிர் தாக்கும் பொழுது என்ன செய்யும்? என் இதயமே “கிர்..,” என்று இரைகின்றது. கூடக் கொஞ்சம் நேரம் அதிகமானால் மூச்சு நின்றுவிடும்.

அந்த மாதிரி இடத்தில் என்னை இருக்கச் சொல்லி அனுபவமாகக் கொடுக்கின்றார் குருநாதர்.

நன்மை தீமை இருந்தாலும் தீமையை மாற்றுவதற்காக ஞானிகளின் உணர்வை எப்படிப் பெறவேண்டும்? ஞானிகளின் உணர்வுகள் வந்தால் தீமைகள் வராது நாம் எப்படி இருக்க முடியும் அந்த இடத்தில் வைத்துப் பயிற்சி கொடுக்கின்றார். குருநாதர்

கொடுத்த உணர்வுகளைத் தெரிந்து எடுத்துக் கொண்டபின் படிப்படியாக உங்களுக்குச் சொல்லி வருகின்றோம்.

அந்த ஞானிகள் கண்டுணர்ந்த மெய்ஞானத்தின் மூலக் கூறுகளை துணுக்குத் துணுக்காக உபதேசமாகக் கொடுக்கின்றோம். அதே சமயத்தில் அதை உங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்குண்டான நினைவுகளையும் கொடுக்கின்றோம்.

ஏனென்றால், எதிர்காலம் மிகவும் மோசமான காலமாக இருக்கின்றது. இதிலே நாம் சிக்கிவிடக் கூடாது.

ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் வரிசைப்படுத்திக் கொண்டு வருகின்றோம்.

எந்தெந்த சந்தர்ப்பத்தில் எது எது வருகிறது? என்ற நிலையில் குருநாதர் எனக்குக் கொடுத்த சக்தியை இந்த உபதேசத்தின் மூலமாகவே உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

சண்டை போட்டவர்கள், சங்கடப்பட்டவர்களைப் பற்றிப் பதிவு செய்து கொண்டால் அவர்களுடைய எண்ணங்கள் நமக்குள் வந்து நம்மையும் துயரப்படச் செய்கின்றது, நம்மையும் சோர்வடையச் செய்கின்றது, நம் காரியங்கள் தடைபடுகிறது.

இதைப் போலத்தான் குருநாதர் கொடுத்த உணர்வின் சத்து எனக்குள் பதிவானதை உங்களுக்குள் இணைக்கின்றோம்.

இதை இணைத்துக் கொண்டபின் உங்களுக்குள் சங்கடமான உணர்வுகளோ, வேதனைப்படும் நிலைகளோ வரும் பொழுது அதை மாற்றி அமைக்கும் உணர்வுகள் தோன்றும்.

அப்பொழுது இதை வைத்து அந்த ஞானிகளின் உணர்வை எடுத்தீர்கள் என்றால் உங்களால் எத்தகைய தீமைகளிலிருந்தும் விடுபட முடியும். எப்படிச் செய்ய வேண்டும் என்ற உபாயங்களும் உதயமாகும்.

அதன் வழியில் உங்கள் வாழ்க்கையில் தெரிந்து தெளிந்து தெளிவான வாழ்க்கை வாழ முடியும். மகிழ்ந்து வாழ முடியும். உங்கள் பார்வையால் மற்றவர்களின் தீமையையும் போக்கும் ஆற்றல் நீங்கள் பெறுவீர்கள்.