ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 29, 2016

நம் நல்ல குணங்களை எப்படி வலுவேற்றிக் கொள்வது?

மனிதன் தான் எண்ணியது தன் உடலுக்குள் ஒரு வித்தாக உருவாகின்றது.

பொதுவாக, செடியில் வித்தாக உருவான பின் அதை மீண்டும் ஊன்றினால் அந்த வித்து காற்றிலிருந்து தன் சத்தை எடுத்து வளர்கின்றது.

இதைப் போல அருள் ஞானிகளின் உணர்வுகளை வித்தாக ஊன்றும் பொழுது அதே நினைவலைகளை எதன் தொடர் கொண்டு எப்படி வருகின்றது குருநாதர் காட்டுகின்றார்.

அதே சமயம் ஒரு தாவர இனச் சத்து சோர்ந்து வாடிக் கொண்டிருக்கும் பொழுது அதனுடன் பல உணர்வின் சத்தைச் சேர்த்து உரமாக அதை இணைத்துக் கொண்ட பின் உற்சாகம் அடைந்து தன் சத்தை எளிதாக எடுத்துக் கொள்கின்றது. செடி கொழு கொழு என்று வளரத் தொடங்குகின்றது.

இதைப் போல நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுக்குள் மெய்ஞானிகளின் உணர்வை இணைத்து அந்தச் சத்தான நிலைகள் வரும் பொழுது அந்த எண்ணத்தால் காற்றிலிருந்து அது எடுக்கத் தொடங்கும்.

அப்படி எடுக்கும் பொழுது நாம் சுவாசித்த உயிர் அதனின் வலுக் கொண்டு இந்த உடலை உணர்வின் தன்மை எப்படி இயக்குகின்றது என்ற நிலையை அங்கே தெளிவுபடுத்தினார் குருநாதர்.

இதையெல்லாம் இயற்கையின் உணர்வின் மாற்றங்களும் தாவர இனச் சத்தின் நிலைகளும் கொண்டு வருவது போலத் தான் குரு காட்டிய வழியில் உங்களுக்குள்ளும் ஆற்றல் மிக்க சக்திகளை இணைக்கச் செய்கின்றோம்.

தாவர இனச் சத்துகளில் இன்று புதுப் புதுவிதமான வித்துகளை மனிதன் நாம் உருவாக்குகின்றோம்,

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான்.., முருகன்…,” என்று நாம் சொல்லிக் கொண்டிருப்போம். அதைக் கடவுள் என்போம்.

“அந்தக கடவுள் எங்கே இருக்கின்றான்? எப்படி இருக்கின்றான் என்று பார்…,” என்று சொல்கிறார் குருநாதர்.

இன்று மனிதன் தன் ஆறாவது அறிவு கொண்டு அவன் விஞ்ஞான அறிவைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு பல உணர்வின் சத்தைச் சேர்த்துப் புதுப் புது வித்துக்களை உருவாக்கி அதனின் நிலை கொண்டு சத்தான வித்துகளை உருவாக்குகின்றான்.

இதைப் போன்று தான் அன்று வாழ்ந்த மெய்ஞானிகள் அந்த மெய் உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து, சோர்வடைந்த உணர்வுக்குள் மெய்ஞான உணர்வை இணைத்து அதைச் சக்தி வாய்ந்ததாகத் தனக்குள் அந்த எண்ணத்தால் வளர்த்துக் கொண்டான்.

பின் அந்த உணர்வின் நினைவலையைக் கூட்டும் பொழுது காற்றிலிருந்து தனக்குள் எடுத்துத் தன் ஆத்மாவாகவும் சுவாசித்த உணர்வு அதனின் நிலைகளில் வலு கொண்ட நிலைகளில் இயக்குகின்றது, தனக்குள் ஜீவன் பெறச் செய்கின்றது.

 எவ்வாறு இதனின் நிலைகள் என்பதைத் தெளிவாக குருநாதர் அங்கே உணர்த்துகின்றார்.

முன்னாடி இலேசாகச் சொல்லியிருப்பேன். இப்பொழுது ஓரளவிற்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக அந்த உணர்வின் இயக்கங்களும் அந்த உணர்வின் நிலைகள் குருவின் தன்மையும் அந்தக் குரு காட்டிய வழியில் மெய்ஞானியின் உணர்வைத் தனக்குள் எடுத்து எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்குச் சொல்கின்றோம்.

நாம் பார்க்கும் எதிர்நிலையான உணர்வின் தன்மைகளைப் பாச உணர்வால் இணைத்து அந்த மெய்ஞானிகளின் அருள் சக்திகளை நம் எண்ணத்தால் ஒரு வித்தாக ஊன்றப்படும் பொழுது மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது நாம் எண்ணிய உணர்வுகள் இங்கே காற்றில் படர்ந்துள்ள அருள் ஞானிகளின் உணர்வை நாம் எளிதில் சுவாசித்து நம் ஆன்மாவாக மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த உணர்வின் செயல் நமக்குள் ஆகும் பொழுது இந்த ஆன்மாவின் மணம் எதிர் கொண்ட நிலைகளை நம்மைப் பார்க்கும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் புகாதபடி தடுக்கும்.

ஒரு வேப்ப மரம் தன் மணத்தால் தனக்குள் மற்ற நல்ல மணத்தை விடாது. நல்ல மணம் கொண்ட ரோஜாப்பூ தன் மணத்தால் மற்றவை வராதபடி தடுத்துக் கொள்ளும்.

இதைப் போல அந்த உணர்வின் சத்தான அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை அந்த அருள் மணங்களை நமக்குள் கூட்டும் பொழுது வாழ்க்கையில் சந்திக்கும் எத்தகையை தீமை செய்யும் உணர்வுகளும் அது விலகிச் செல்கின்றது. நம் ஆன்மா பரிசுத்தமாகின்றது.

அப்பொழுது எதனை நீ நேசிக்க வேண்டும்? எதனை உனக்குள் வலுவாக ஏற்க வேண்டும்? எதனின் துணை கொண்டு உன் மனித வாழ்க்கையில் ஒளியாக மாற்ற வேண்டும் என்று குருநாதர் உணர்த்துகின்றார்.

ஆகவே ஒளியின் சிகரமாக மாறிய அருள்ஞானியின் நிலைகள் இணைக்கப்படும் பொழுதுதான் உணர்வின் மணங்கள் இப்படி மாறுகின்றது என்ற நிலையை உள் உணர்வில் கொடுத்துக் கொண்டேயிருப்பார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

குருநாதர் எமக்குக் கொடுத்த முறைப்படி தான் உங்களுக்கும் பேராற்றல்களைப் பெறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம். எமது அருளாசிகள்.