ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 26, 2016

“இது மனிதனல்ல, ஏதோ ரிஷி பிண்டம்.., இவரை விட்டுவிடாதீர்கள்…” என்றார் வேதங்களைக் கற்றவர்

ஆரம்பத்தில் குருநாதரைப் பைத்தியக்காரர் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஒரு சமயம் பழனியிலே ரோட்டிலே நான் நடந்து வரப்படும் பொழுது வேதங்களைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் ஒருவர் அதன் வழியாக வந்தார்.

குருநாதர் என்ன செய்தார்?

அவரை இடைமறித்து சொல்லாத வார்த்தைகளைச் சொல்லித் திட்டி “இங்கே வாடா..,” என்று அவர் குடுமியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார்.

வேதம் சொல்லிக் கொடுப்பவரை குருநாதர் ஓங்கி ஓங்கி அடிக்கின்றார். இவர் பிடியிலிருந்து அவர் தப்ப முடியவில்லை.

“யானைக்குப் பலமா..? எனக்குப் பலமா..?” என்று சொன்னவர் (நம் குருநாதர்) கையில் சிக்கினால் எப்படியிருக்கும்?

வாயில் வராத கொச்சையான வார்த்தைகளைச் சொல்லித் திட்டி ஓங்கி ஓங்கி அடிக்கின்றார் குருநாதர். சொல்லவே முடியாது, அந்த அளவிற்கு மோசமாகப் பேசுகின்றார்.

 “ஏண்டா.., நீ வாத்தியாராடா…?” என்று கேட்டார் குருநாதர். அங்கே என்னடா சொல்லிக் கொடுத்தாய்?

யாகம் வளர்க்கும்போது அங்கே தப்பான ஒலிகளை எழுப்பினார் என்பதற்காக அப்படிக் கேட்கின்றார் குருநாதர்.

அங்கே நீ இன்னென்னதை இப்படித் தப்பாகச் சொன்னாய் அதை இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று குருநாதர் அவரிடம் சொல்லுகின்றார்.

ஆக, அந்த ரிக் வேதத்தை முதலில் மேலிருந்து சொல்லி மறுபடி தலை கீழாகவும் சொல்கிறார். சுருதி சுத்தமாகப் பாடிக் காட்டுகின்றார் குருநாதர்.

இதைக் கேட்டவுடன் அந்த வாத்தியார் அப்படியே சாஷ்டாங்கமாகக் குருநாதர் காலில் விழுந்தார்.

வேதம் என்றால் என்ன? அதற்குள் உள்ள பொருள் என்ன? இதை நீ எப்படி எடுக்க வேண்டும்? வேதத்தைக் கண்டவன் சொன்னது என்ன? ஆனால், நீ சொன்னது என்ன என்றார் குருநாதர். உடலுக்காக (பணத்திற்காக) வேண்டி நீ தவறாகச் சொல்கிறாய் என்றார் குருநாதர்.

ரிக் வேதம் என்கிற பொழுது ஒரு உணர்வின் தன்மை இயற்கையில் விளைந்தது எவ்வாறு அது மாறுகின்றது? அது நாதங்களாக எப்படி மாறுகின்றது என்று சுருதியை அவர்கள் இயக்கிக் காட்டினாலும் “ஏற்றம்.., இறக்கம்..,” அதாவது கரைந்து மீண்டும் கோளாகி (ஒரு பிரபஞ்சத்திற்குள்) மீண்டும் கரைந்து எப்படிக் கோளாகின்றது?

அதனின் நிலைகள் மாறி மாறி மீண்டும் ஒரு தாவர இனமாகின்றது. இந்த உணர்வின் சக்தி கரைந்து மீண்டும் அலைகளாக எப்படி மாறுகிறது? இது அனைத்தையும் வேதங்களில் இந்த உணர்வின் தன்மைகளை எப்படிக் கொடுத்திருக்கின்றார்கள்? என்று அவரை அடித்துவிட்டுச் சொல்கிறார் குருநாதர்.

அப்பொழுது அதை நான் கேட்கும் பொழுதுதான் எனக்குப் புரிகின்றது. ஏனென்றால், அவர் சமஸ்கிருதத்தில் பேசுகின்றார். புரியாத பாஷையில் பேசுகின்றார்.

அவரை அடித்துவிட்டு இதைக் காட்டுகின்றார். ஆனால், நான் குருநாதரைப் “பைத்தியம்” என்று நான் எண்ணும்போது அங்கே வேதங்களை உணர்த்திக் காட்டுகின்றார்.

ஆக, நடு ரோட்டில் வைத்துக் குருநாதர் காலில் விழுந்து அந்த வாத்தியார் வணங்குகின்றார். “நான் செய்த பாவமெல்லாம் இன்றோடு போய்விட்டது..,” என்று பேரானந்த நிலையில் சொல்லிவிட்டுச் சென்றார்.

மறு நாள் அந்த வாத்தியார் என்னை வந்து சந்தித்தார். “இது மனிதனல்ல…, ஏதோ ரிஷி பிண்டம்…” அவருடைய அருளாசி உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. அவரை நீங்கள் விட்டுவிடாதீர்கள் என்றார்.

என்னைப் பற்றி அவருக்கும் தெரியும். மங்களூர் அவர் சொந்த ஊர். அவர் இவ்வாறு என்னிடம் சொன்ன பின் தான் ஓரளவிற்குக் குருநாதரைப் பற்றி அறிய முடிந்தது ஆரம்ப நிலைகளில்.

அவர் சொன்ன மொழிகள் வேறு. இவர் ரிக் வேதத்தை எடுத்து வாசிக்கப்படும் பொழுது அண்டத்தின் நிலைகள் எவ்வாறு உருவாகின்றது? நாதங்கள் சுருதிகள் எப்படி மாறுகின்றது? அந்த உணர்வின் தன்மை ஒலி அலைகள் எப்படி மாறுகின்றது?

உணர்வின் தன்மை ஒலிக்கொப்ப தாவர இனங்கள் எப்படி மாறுகின்றது? என்று அவர் சுட்டிக் காட்டிய நிலைகள் அவரை அடித்துக் காட்டியது என்னை அடித்து உணர்த்தியது போன்று இருந்தது.

இந்த நினைவுகள் வரப்படும் பொழுது தான் இந்த உணர்வின் இயக்கங்களை உணர்த்திக் காட்டினார் குருநாதர். இதுவெல்லாம் வேதங்களைப் பற்றி வேத சாஸ்திரங்களில் தெளிவுண்டு.

ஆனால், வேத சாஸ்திரங்கள் அனைத்தையுமே நாம் எப்படி மாற்றிவிட்டோம் என்றால் இந்த மனிதன் சுய லாபங்களுக்கும் இந்த மனித வாழ்க்கையின் உணர்வுகளுக்குமே மாற்றியமைத்துவிட்டார்கள்.

அந்த மெய்ப்பொருளைக் கண்டுணர்ந்து மெய்ப்பொருளின் சக்தி கொண்டு இந்த வாழ்க்கையில் நமக்குள் வந்த அசுர உணர்வுகளை எப்படி நீக்குவது என்று தான் அதிலே காட்டிய நிலைகள்.

மாறாக, வேள்வி யாகம் என்று காட்டி மாற்றிவிட்டார்கள். ஆக, யாகம் என்றால் என்ன?

யாகம் என்பது நம் உயிர் ஒரு நெருப்பு. நாம் எடுத்துக் கொண்ட உயர்ந்த உணர்வின் தன்மை இந்த யாகத் தீயில் போடும் போது தான் நமக்குள் உணர்வின் அலைகள் படர்ந்து தீமைகள் அகற்றும் நிலை வருகின்றது.

தீமையை அகற்றிடும் உணர்வு நமக்குள் எடுத்துக் கொண்டபின் அந்த உணர்வின் எண்ண அலைகள் அது வெளிப்படும் பொழுது சூரியனின் காந்த அலைகள் கவர்ந்து பூமியில் எவ்வாறு படர்கின்றது என்ற நிலைதான் அந்த வேதங்களின் சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றது.

யாக வேள்வியில் புறத் தீயிட்டு அதற்குள் புறத்திலிருந்து நாம் பல பொருள்களைப் போட்டு அதனால் மகிழ்ந்து ஆண்டவன் நமக்கு எங்கிருந்தோ செய்வான் என்ற நிலைகள் சொல்லி மாற்றியமைத்து விட்டார்கள்.

புறப்பொருள்களின் நிலைகளைக் காட்டுவது எதற்கு என்றால் அகப்பொருள்களின் இயக்கங்கள் எவ்வாறு என்று தெளிந்து உணர்த்திட வேண்டும் என்பதற்குத்தான் காட்டினார்கள்.

2000 வருடங்களுக்கு முன் வந்த ஆதிசங்கரர் இதைத்தான் சூட்சம நிலைகள் கொண்டதை எண்ணத்தால் எடுக்கும் பொழுது இந்த உணர்வின் தன்மை “துவைதம்” அது உறையும் தன்மை (உடலாக) அடைகின்றது.

ஆகவே நாம் எதை எண்ண வேண்டும்? எதன் உணர்வை நாம் கவர்கின்றோமோ இந்த உயிரின் இயக்கம் இவ்வாறு தான் இருக்கின்றது என்று காட்டினார்.

ஒன்று அத்வைதம் இரண்டாவது துவைதம். ஆக, எடுத்துக் கொண்ட உணர்வு இரண்டாவதாக உறையும் தன்மை அடைகின்றது.

ஆனால், உறைந்த நிலைகள் கொண்டு இந்த உணர்வின் தன்மை உள் நின்று எவ்வாறு இயக்குகின்றது என்ற நிலையைத் தான் சாஸ்திர விதிகள் காட்டப்பட்டிருக்கின்றதே தவிர புறத் தீயிட்டு இதைச் செய்யச் சொல்லவில்லை.

ஆனால், புறத்தீயிட்டுச் செய்தால் எனக்குக் கொடுப்பான் என்று பிறரை வேடிக்கை பார்க்க வைத்து உழைத்த பொருளை அங்கே கருக்கிவிட்டு எதையோ கிடைத்தது என்று சிறிது சந்தோசத்தையே அங்கே ஏற்படச் செய்கின்றார்கள்.

ஆனால், செய்த நிலைகள் மாறியது என்ற நிலையைத்தான் அங்கே உருவாக்க முடிந்ததே தவிர மெய்ப்பொருள் காணும் உணர்வை அங்கே காட்டவில்லை என்று தெளிவாக உணர்த்தினார் அன்று ஆதிசங்கரர்.

இதையெல்லாம் நமது குருநாதர் எனக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

ஆக, குருநாதர் பேசியது கன்னடம், துளு இதைப் போல பல பாஷைகள், அதாவது அவர் 32 பாஷைகள் பேசுவார். அது அர்த்தமற்றதாக எனக்குப் புரியவே புரியாது.

புரியாத நிலைகள் இருப்பதை அந்த உணர்வால் பதியச் செய்து மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுதுதான் அதைத் தெளிவுறக் காட்டுகின்றார் குருநாதர்.

குருநாதர் மூலம் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளைத்தான் உங்களுக்குச் சொல்லி வருகின்றோம்.