ஆரம்ப காலங்களில்
ஒரு உடலில் நோயானால் “உடலுக்குள் என்ன நடக்கின்றது..,?” என்று யாராவது ஒருவரிடம்
சொல்லி உடலுக்குள் என்ன தெரிகின்றது என்று பார்க்கச் சொல்வேன்.
வயிற்றுக்குள்
இருக்கும் கிருமிகளும் அதனால் ஏற்படும் வலியும் தெரியும், உணர முடியும்.
அப்பொழுது ஆசீர்வாதம்
செய்து விபூதி கொடுத்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக கிருமிகள் விலகுகின்றது, இந்த வலி
எல்லாம் போய்விட்டது என்று சொல்வார்கள்.
அந்த நேரம் நான்
சித்தான புதிது.
பழனியில் நான்
சைக்கிள் கடை வைத்து ரிப்பேர் செய்து கொண்டிருந்தேன். கடை சர்ச்சுக்கு எதிர்த்தால்
போல் இருந்தது. அது ஒரு கிறிஸ்தவருக்குச் சொந்தமான கடை.
ஒரு சமயம்,
அவருக்குத் தாங்க முடியாது வயிற்று வலி. வேதனை அதிகமானவுடன் அப்பொழுது அவருடைய
மகளைக் கூப்பிட்டு “உங்கள் அப்பா உடலுக்குள் நடப்பதைப் பார்..,” என்று பார்க்கச்
சொன்னேன்.
வயிற்றுக்குள் கிருமிகள்
என்ன செய்கின்றது? என்னென்ன புதுக் கிருமிகள் உருவாகின்றது, அது எப்படி வேலை
செய்கின்றது? நான் சொல்லி அதற்கப்புறம் அவர் சுவாசிக்கும் பொழுது என்னவெல்லாம்
செய்கின்றது? என்றெல்லாம் அந்தக் குழந்தை பார்க்கின்றது.
ஏதோ ஒரு மருந்து
உள்ளுக்குள் போவது தெரிகின்றது. மருந்து வாசனை வருகின்றது, அது வயிற்றுக்குள்
போகின்றது, உள்ளுக்குள் மருந்து சென்றவுடன் வலி குறைகின்றது நல்லதாகிவிட்டது என்று
பார்த்துச் சொல்கிறது அவரின் குழந்தை.
இதற்கு முதலில், அவர் அப்பா
இந்துக்களைக் கொண்டு வந்து சர்ச்சுக்கு முன்னால் வைத்திருக்கின்றாய் என்று பாதிரியார்
திட்டப் போகின்றார் என்று சொல்லி என்னைக் கடையைக் காலி செய்யச் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதற்கப்புறம் அவர் கடையக்
காலி செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இது நடந்த நிகழ்ச்சி.
ஏனென்றால், யாம் எல்லாவற்றையும்
அனுபவரீதியில் தெரிந்து கொள்வதற்காக குருநாதர் இதையெல்லாம் செய்தார்.
ஆரம்பத்தில் இந்த மாதிரி நிறையச்
சித்து வேலை எல்லாம் செய்யும்படி செய்தார் குருநாதர்.
அதற்கப்புறம் அந்தச் சைக்கிள்
கடையே போய்விட்டது. அதிலே வேலையே பார்க்கவிடாதபடி செய்தார் குருநாதர். எல்லா வேலையும்
போய்விட்டது.
வயிற்று வலி, தலை வலி, பேய்
பிடித்துவிட்டது என்று சொல்லிக் கொண்டு என்னைத் தேடி வர ஆரம்பித்துவிட்டார்கள். வேலைக்காக
கழட்டிப் போட்ட சைக்கிள்கள் எல்லாம் அனாதையாகக் கிடக்கின்றது.
சைக்கிள் தொழிலையே நான் செய்ய
முடியாமல் ஆகிவிட்டது. தொழிலையே செய்யவிடாமல் பண்ணிவிட்டார் குருநாதர்.
“உனக்கு இந்த வேலை இல்லை..,
வேறு வேலை இருக்குடா..,” என்று சொல்கிறார் குருநாதர். ஏனென்றால், குருநாதர் எனக்கு
இப்படித்தான் பழக்கத்தைக் கொடுத்தார்.
இப்படி மெய்ஞானிகள் கண்டுணர்ந்த
அந்த இயற்கையின் பேருண்மைகளையும் தீமைகளை நீக்கும் நிலைகளையும் உயிருடன் ஒன்றி உணர்வுகளை
ஒளியாக மாற்றும் நிலையையும் குரு காட்டினார்.
ஆக, இந்த உடலுக்குப் பின்
மனிதனான நாம் அடைய வேண்டிய நிலைகளைத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் சிறுகச்
சிறுக உங்களுக்குள் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.
ஆனால், அதையெல்லாம் உங்களிடம்
சொல்லும் பொழுது இலேசாக விட்டு விட்டுச் சென்றுவிடுகின்றீர்கள்.
குருநாதர் செயற்கையாகப் பல இன்னல்களை
எனக்கு ஏற்படுத்தினார். நான் கஷ்டப்பட்டுத் தான் தெரிந்து கொண்டேன். உங்களுக்குக் கஷ்டம்
என்று வரும்பொழுதெல்லாம் அந்த அருளைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று தான் திரும்பத்
திரும்பச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.