ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 25, 2016

பண்டைய காலத்தில் அருள் ஞானத்தை வளர்ப்பதற்காக அன்னதானம் செய்தார்கள் - இன்று அப்படிச் செய்கின்றோமா..?

“சாகாக்கலை.., வேகாநிலை.., போகாப்புனல்” என்ற நிலையில் இராமலிங்க அடிகள் தெளிவுற எடுத்துரைத்தாலும் கவி நயங்களில் அவர் எழுத்தின் வடிவத்தை நாம் படித்து அதைப் பிறருக்குப் பாடமாக ஒப்பிக்கும் பொழுது அதை ரசித்திருக்கலாம்.

ஆனால், அதற்குள் பொதிந்த உட்பொருளின் பொதிந்த நிலையும் நமக்குள் உணர்வின் ஆற்றலாக மாற்றி உணர்வின் தெளிந்த நிலைகள் கொண்டு “ஜோதியாக..,” ஒளியாக மாறும் நிலையை யாரும் அடையவில்லை.

“அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெரும் கருணை” என்று சொன்னாலும் பிறருக்கு அன்னமிட்டுப் பசியைப் போக்கினால் அந்த நிலைகள் எனக்கு நன்றாக இருக்கும் என்று இவர்கள் இன்று பேசுகின்றனர்.

பண்டைய காலங்களில் எல்லாமே தெய்வ வழிப்படி செய்ய வேண்டும், ஆக, வெகு தூரம் நடந்து செல்ல வேண்டும் என்றால் அவர்களுக்கு உணவு வேண்டும்.

அவர்கள் உழைத்துச் சாப்பிடும் இந்த நிலைகளிலிருந்து “உணவைக் கொடுத்தாவது” அந்த உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்று அன்று செய்தார்கள்.

ஏனென்றால், அன்றைய நிலைகளில் ஓட்டல் கிடையாது. பிறருடைய வீட்டில் நண்பர்கள் இருந்தால்தான் அங்கே போக முடியும். இல்லை என்றால் அந்தத் தர்ம சாலைகளைக் கட்டி ஆகாரங்களை இடுவார்கள்.

தர்ம சாலைகளில் உணவிட்டு தர்மம் செய்வோர் இறைவனை வணங்கி வரப்படும் பொழுது அவர்களுக்கு இந்த உணவைக் கொடுத்தால் நல்ல நிலைகள் கிடைக்கும்.

அவர்கள் உணவு உண்டால் நாம் சொல்லும் உணர்வின் உபதேசங்கள் அங்கே பதிவாகும் என்ற இந்தத் தத்துவத்தைத்தான் கடந்த காலத்தில் ஏற்படுத்தினார்கள்.

இன்று நாம் என்ன செய்கின்றோம்? பலருக்கு அன்னமிட்டால், தர்மம் செய்தால் அதனால் “புண்ணியம் கிடைக்கும்…,” என்று செய்து கொண்டுள்ளோம்.

அன்னமிடும் பொழுது சாப்பிட்டுவிட்டுச் சோம்பேறியாவதும் பிறரைக் குறை கூறுவதும் குறை கூறும் உணர்வை வளர்த்துக் கொண்டு தீமையை விளைவிக்கும் நிலைகளிலே நாம் வருகின்றோம்.

ஆனால், உணவு எதற்காக உட்கொள்கின்றோம்? எதனைக் கொண்டு உணவு நாம் உட்கொள்ள வேண்டும் என்ற நிலையை மறக்கச் செய்து இதுதான் தர்மம் இது தான் தர்ம சாலை என்ற நிலைகளில் நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

இப்படித்தான் காலங்களால் தர்ம நீதிகளை எப்படி வழி நடத்த வேண்டும் என்று நிலைகள் மறைந்து விட்டது.

ஆகவே, தர்மம் செய்வது எதுவாக ஆக்க வேண்டும்?

இப்பொழுது யாம் உபதேசித்துக் கொண்டிருக்கும் இந்த அருள் உணர்வுகள் மனிதனுடைய உணர்வுகளுக்கு தீமையை அகற்றி மெய்ப்பொருள் காணும் சக்தியாக அமைகின்றது.

நீங்கள் மெய்ப்பொருள் காண வேண்டும், அந்தத் தீமையை அகற்றிடும் அருள் சக்தி உங்ககளுக்குக் கிடைக்க வேண்டும் என்றும் உங்களை நான் தியானிக்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை எனக்குள்ளும் விளைகின்றது.

மீண்டும் இதே போன்று தியானித்தால் அந்த உணர்வின் சக்தி பெரும் சொத்தாக மாறி உங்களுக்குள் இருளை மாய்த்துவிட்டு பொருள் காணும் நிலைகளுக்கு வரும்.

ஆகவே, அருள் ஞானிகளின் அருள் வட்டத்தில் நம் நினைவலைகள் அனைத்தும் செல்தல் வேண்டும்.

நமது குருநாதர் காட்டிய அருள் நெறிகள் கொண்டு எனக்கு உபதேசித்தார். எனக்குள் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பதிவு செய்தார்.

அதைத்தான் உங்களுக்கும் செய்கின்றேன். குருவின் அருள் ஞானத்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

இதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது உங்களைத் தூய்மையாக்கும் நிலையும் தீமையற்ற வாழ்வும் மன பலமும் மன வளமும் பெற்று மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்.

வைகுண்ட ஏகாதசி அன்று குருநாதர் ஒளி சரீரம் பெற்ற நாளில் நாமும் அதைப் பின்பற்றி என்றும் அழியா ஒளிச் சரீரமும் என்றும் இந்த வாழ்க்கையில் நமக்குள் இருள் சூழா நிலையும் மெய்ப்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறனும் நாம் பெறுவோம் என்று தியானிப்போம்.