ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 4, 2016

நம் உயிர் ஒரு டாக்டர், அவனிடம் வேண்டினால் “ஆக்ஞை”

ஒருவர் மேல் நாம் ரொம்பப் பிரியமாக இருக்கின்றோம், அவரும் நம் மேல் பற்றாக இருப்பார். ஆனால், சந்தர்ப்பத்தில் கடுமையாக அவர் வேதனைப்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

அவர் வேதனைப்படுவதைப் பார்த்துவிட்டு “நல்ல மனிதன்.., இப்படி ஆகிவிட்டாரே..,” என்று நாமும் வேதனைப்படுவோம்.

அப்பொழுது என்ன செய்கிறோம்? கதவைத் திறந்து வைத்துவிடுகின்றோம். அந்த வேதனையான உணர்வுகள் உள்ளுக்குள் போய்விடுகின்றது. அதை மூடவேண்டும்.

கதவைத் திறந்து வைத்திருந்தால் காற்றடித்தது என்றால் வீட்டிற்குள் தூசி மற்ற வேண்டாதது எல்லாமே உள்ளுக்குள் வருகின்றது அல்லவா.

இதே மாதிரி நாம் நமக்குள் தீமைகள் உட்புகாதவண்ணம் கதவை மூடிப் பழக வேண்டும்.

எந்தக் கதவை..,?

நம் மூக்கின் வழி போய் உயிரில் பட்டு மோதுகின்றது. இதில் உள்ள “மேக்னட்” (காந்தம்) என்ன செய்யும்? நமக்கு முன் நடப்பதைக் கண்களால் பார்க்கின்றோம். கருவிழி ருக்மணி என்ன செய்கின்றது?

நம் விலா எலும்புகளில் ஊன் இருக்கின்றது. அதிலே பதிவாக்கிவிடுகின்றது. நம் ஊனுக்குள் நாம் வேதனைப்பட்ட உணர்வை ஊழ்வினை என்ற வித்தாக நம் உடலில் பதிவாக்குகின்றது. பதிவாக்கியபின் என்ன செய்கின்றது?

இதுவெல்லாம் சுவாசித்துப் போவதில்லை.

கருவிழி ருக்மணி சுவாசம் ஆகாதபடியே ருக்மணி “டக்..,” என்று படமாக்கி எக்ஸ்ரே மிஷினில் படம் எடுத்தால் உடலுக்குள் இருப்பதை எல்லாம் காட்டுவது போல் இங்கே விலா எலும்புக்குள் கடிகாரம் அடித்த மாதிரி அடிக்கும்.

பார்த்தவுடன் நமக்குள் “பட.., பட..,” என்று இழுக்கும். “டக்..,” என்று ரிக்கார்டு செய்யும், பதிவாகிவிடுகின்றது. இப்படிப் பதிவான பின்னர் என்ன செய்யும்?

கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் வேதனைப்படும் மனிதனிடமிருந்து வெளிப்படும் வேதனையான உணர்வை இயக்க அணு கவர்ந்து அதை இயக்கக்கூடிய அணுக்களாக நம் உடலுக்குள் மாறும்.

இதை மாற்றவேண்டும் என்றால் நமக்குள் புகாது தடுக்க வேண்டும் என்றால், தீமை செய்யும் அணுக்கள் உடலுக்குள் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?

தீமையானவற்றைச் சந்தித்த உடனே நம் நினைவு புருவ மத்திக்குச் செல்ல வேண்டும்.

“ஈஸ்வரா” என்று உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவினைச் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அங்கே நிறுத்துதல் வேண்டும்.

அப்பொழுது, தீமையான உணர்வுகள் சுவாசத்தின் மூலமாகவும் தடுக்கப்படுகின்றது. கண்ணின் நினைவு புருவ மத்தியில் இருக்கும்போது எந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவினைச் செலுத்துகின்றோமோ அது தான் நம் விலா எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாக மாறும். அந்த ஒளியான அணுவாகத்தான் உடலுக்குள் அது உருவாகும்.

இதற்குப் பெயர் தான் “ஆக்ஞை”. ஏனென்றால், எல்லாவற்றிற்கும் டாக்டர் உங்கள் உயிர் தான்.

அந்த டாக்டரிடம் உங்கள் உணர்வான நிலைகள் கொண்டு சொன்னீர்கள் என்றால் அதற்குத் தகுந்த மாதிரி உங்கள் உயிர் இயக்கி உங்களை நல்வழிப்படுத்தும்.

நல்லது கெட்டது என்று உயிர் காட்டுகின்றது.

ஆகவே, வேதனை வெறுப்பு கோபம், ஆத்திரம் என்ற உணர்வுகள் வரும்போது இந்த டாக்டரை மதிக்காதபடி கெட்டது போகாதபடி தடுக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

நம் உடலுக்கு முடியாத சில சமயங்களில் டாக்டர் இதையெல்லாம் சாப்பிடாதீர்கள் என்று சொல்வார்கள். ஆனால் அதைச் சாப்பிட்டால் என்ன ஆகும்? நோய் இன்னும் அதிகமாகிவிடும்.

ஒருவர் சாப்பிடுவதைப் பார்த்துவிட்டு ஆசைப்பட்டு முடியாமல் இருக்கும் நேரத்தில் அதைச் சாப்பிட்டால் என்ன செய்யும்? டாக்டர் சொன்னபடி கேட்கவில்லை என்று அர்த்தம்.

இதே மாதிரி நம் உடலிலிருக்கக்கூடிய உணர்வை இயக்கிக் காட்டுவது நம் உயிர். நம்மை உருவாக்கியது உயிர்தான். நம்மைப் பாதுகாப்பதும் அவனே தான். நம் எண்ணத்தை இயக்குவதும் உயிர்தான்.

நாம் எண்ணிய உணர்வுகளை நுகர்ந்தபின் உடலாக்குவதும் உயிர் தான். உணர்வான பின் அந்த வேதனையை அனுபவித்து அதை ஆண்டு கொண்டிருப்பதும் உயிர் தான்.

எல்லாவற்றிற்கும் அவனே மூலமாக இருக்கின்றான். இதையெல்லாம் நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.