ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 15, 2016

என் நேரமே சரி இல்லை..,” என்பார்கள் - கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றுங்கள்

வாழ்க்கையில் நாம் எண்ணிய காரியங்கள் நடைபெறவில்லை என்றால் நம் எண்ணங்கள் எப்படியெல்லாம் போகின்றது…,?

என்னடா.., இப்படித் தொல்லையாக இருக்கின்றது? இதை எப்படிச் சமாளிக்கின்றது? பணம் கொடுத்தவன் இப்பொழுது வந்து கேட்பானே.., அவனுக்கு என்ன பதில் சொல்வது?

நாளைக்குச் சாப்பாட்டுக்கு மற்ற செலவுக்கு என்ன செய்வது? பிள்ளை படிப்பிற்குச் செலவுக்குக் கேட்டான். அவனுக்கு என்ன செய்யப் போகின்றோமோ.., என்று இப்ப்\டி எண்ணினீர்கள் என்றால் அது நிச்சயம் கெட்ட நேரம் தான்.

இப்படி எண்ணி பிள்ளைகள் மேல் நாம் சங்கடமாக எண்ணினால் அந்த  எண்ணம் என்ன செய்யும்?

அவன் ரோட்டிலே நடந்து சென்று கொண்டிருந்தால் அவனை அறியாமலே கீழே விழுவான். அந்தச் செய்தி வரும். வந்தவுடன் நாம் என்ன சொல்வோம்?

“என் நேரமே.., சரியில்லை.., பிள்ளை கீழே விழுந்து அடிபட்டுவிட்டது..,” என்பார்கள்.

இதே நினைவுடன் இருக்கும் பொழுது வீட்டிற்குள் ஏதாவது ஒன்றை எடுக்க நடந்து செல்லப்படும் பொழுது கீழே எண்ணையோ ஏதோ தெரியாமல் காலை வைத்து வழுக்கி விழுந்து விடுவார்கள்.

கால் பிசகி விட்டது, கை பிசகி விட்டது என்ற நிலை ஆகும்போது இது குடும்பத்திற்குள் எப்படியெல்லாம் வேலை செய்கின்றது என்கிற வகையில் உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இதையெல்லாம் எண்ணும் நேரம் நமக்குள் கெட்ட நேரமாகின்றது.

அந்த நல்ல நேரமாக மாற்றுவதற்கும் நல்ல நேரத்தை உருவாக்குவதற்கும் தான் உங்களுக்குள் இத்தனை உபதேசங்களைக் கொடுக்கின்றோம்.

ஏனென்றால், கஷ்டப்பட்டுத் தெரிந்து கொண்டு வந்தேன். குருநாதர் கொடுத்த சக்தியை உங்களிடம் பாய்ச்சுகின்றேன்.

இந்த உலகில் உள்ள விஷத் தன்மையான காற்று மண்டலத்திலிருந்து அந்த அருள் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து உங்கள் கஷ்டத்தை மாற்றும் அந்த நல்ல நேரத்தை உங்களுக்குள் கொண்டு வருகின்றோம்.

அதற்காக வேண்டித்தான் உங்களிடம் திரும்பத் திரும்பப் பதிவாக்கிக் கொண்டே இருக்கின்றோம்.

“சாமி சொன்னாரே..,” என்று எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தை எடுத்தீர்கள் என்றால் உங்களுக்குள் மன வலிமை கிடைக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் படரவேண்டும், எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படரவேண்டும் என்று உள்ளுக்குள் விட்டீர்கள் என்றால் அந்தச் சக்தி வலுவாகிவிடும்.

சங்கடமான உணர்வுகள் உள்ளுக்குள் போவதற்குள் தடைப்படுத்திவிடும். சிறிது நேரம் உள்ளுக்குள் அந்தச் சக்தி போனால் உங்களுக்குச் சிந்திக்கக்கூடிய சக்தி கிடைக்கும்.

எதனால் நாம் இப்படிச் சங்கடப்படுகின்றோம்? இதைச் சமாளிக்க என்ன செய்யவேண்டும் என்ற யுக்தி வரும்.

அப்பொழுது நமக்குள் அந்த வலுவான உணர்வு வந்த பிற்பாடு துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு நாம் கடன் வாங்கியவர்களுக்குப் பாய்ச்சுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் அவர்களுக்கு ஒரு நல்ல மனது வரவேண்டும், கொஞ்சம் அவர்கள் எனக்காகத் தயவு செய்ய வேண்டும் அந்த நல்ல எண்ணம் வரவேண்டும் என்ற இந்த மன தைரியமான நிலைக்கு நாம் வரவேண்டும்.

இந்த உணர்வுடன் அவர்கள் வந்தவுடன் நாம் சொன்னால் நம் சொல் அவர்களுக்குள் போய், “சரி நீங்கள் எப்படியோ பார்த்துக் கொடுங்கள்…,” என்று சொல்வார்கள்.

நீங்கள் உங்கள் அனுபவத்தில் இதைப் பார்க்கலாம்.

தியானம் செய்பவர்களில் உங்கள் வாழ்க்கையில் இந்த மாதிரி நெருக்கடி வந்ததென்றால் யாம் சொன்ன இந்த முறைப்படி எண்ணினீர்கள் என்றால் “உங்கள் எண்ணம் அது உடனடியாக அந்த வேலையைச் செய்யும்”.

அப்பொழுது அந்த நேரம் உங்களுக்கு நல்ல நேரமாகின்றது.

சங்கடம் வரும்போது அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணினால் அது உங்களுக்கு நல்ல நேரம். ஆனால், அந்தச் சங்கடத்தையே எண்ணினால் அது கெட்ட நேரம்.

இங்கே வருபவர்கள் எதிர்பார்ப்புடன் வருவார்கள். எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்றால், சாமியிடம் போய் ஒன்றும் நடக்கவில்லை” என்று ஒதுக்கித் தள்ளிவிடுவார்கள்.

ஆக, கோவிலுக்குச் சென்று தெய்வத்தைக் கும்பிட்டு நினைத்தது நடக்கவில்லை என்றால் சாமி ஒன்றும் கவனிக்கவில்லை என்று சொல்வது போல் நம்மையும் “சாமியாவது.., பூதமாவது..,” என்ற நிலைகளில் எண்ணுபவர்களும் இருக்கின்றார்கள்.

ஏனென்றால், உங்களுக்குள் வரக்கூடிய சங்கடங்களை உங்களாலேயே சமாளிக்கக்கூடிய சக்தி வேண்டும் என்பதற்குத்தான் இதைப் பதிவாக்குகின்றேன்.

எல்லாமே காற்றிலிருக்கின்றது. பதிவான உணர்வுகள் இருக்கின்றது. நான் பேசிய உணர்வுகள் இங்கே இருக்கின்றது. உபதேசித்தது உங்களுக்குள் பதிவாகி இருக்கின்றது.

அதை நினைவுக்குக் கொண்டு வந்து எப்பொழுதெல்லாம் எடுக்கின்றீர்களோ உங்களுக்குள் ஞானம் கிடைக்கும். நிச்சயம் உங்களால் பெறமுடியும்.