தெய்வம் நம்மைக் காக்கின்றதா?
தெய்வத்தை நாம் காக்கின்றோமா? தெய்வ நிலைகளை நாம் பெறுகின்றோமா? தெய்வச் செயலை நாம்
செய்கின்றோமா? என்ற நிலைகளைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
நமக்குள் எண்ணியது எதுவோ அந்த
உணர்வின் சக்தியாக நமது உயிர் இயக்குகின்றது. இந்த உணர்வின் செயலாக நாம் எவ்வாறு இருக்க
வேண்டும்? என்ற நிலையைத்தான் பித்தனைப் போன்று இருந்த நமது குருநாதர் உணர்த்தினார்.
பகைமையான உணர்வுகள் நமக்குள்
எவ்வாறு வளர்கின்றது? பகைமையிலிருந்து எவ்வாறு மீளவேண்டும்? என்று தான் ஊருக்கொரு மாரியம்மனும்
தெருவுக்கொரு விநாயகனும் வைத்தது.
நம் வாழ்க்கையில் பிறருடைய
கஷ்டங்களைக் கேட்கப் போகும்போது நமக்குள் அது மாறி (மாரி) தீமைகளை விளைவிக்கின்றது.
அதே சமயத்தில், இந்தக் கஷ்டங்களை
எல்லாம் நீக்கியவர்கள் மகரிஷிகள் என்று காட்டப்படும் பொழுது விநாயகருக்குப் பின் அரசையும்
வேம்பையும் வைத்தது.
மாரியம்மன் கோவிலில் வேப்ப
மரத்தை ஸ்தல விருட்சமாக வைத்திருப்பார்கள். அக்னி குண்டத்தையும் காட்டியிருப்பார்கள்.
ஆக, வாழ்க்கையில் கேட்டுணர்ந்த
கசப்பான உணர்வை இந்த நிலையை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதற்குத்தான் இதையெல்லாம் நமது
ஞானிகள் வைத்துக் காட்டியுள்ளார்கள்.
தன் வாழ்க்கையில் வரும் தீமைகளை
அகற்றிடவும் தீமைகள் அணுகினால் அதை அடக்கி ஆட்சி புரியும் நிலைகளுக்கு மகரிஷிகளின்
உணர்வைத் தனக்குள் அரசாக்கிடல் வேண்டும்.
ஆகவே, வாழ்க்கையில் வரும்
கசப்பினை நீக்கி அதை அடக்கி எவ்வாறு ஆட்சி புரிய வேண்டும் என்ற தத்துவத்தைத்தான் விநாயருக்கு
வேம்பையும் அரசையும் வைத்து நமது ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.
அவை தான் சாஸ்திரங்கள்.
ஆனால், இன்று சாங்கிய சாஸ்திரத்தில்
நாம் கேட்டுணர்ந்த உணர்வு கொண்டு “இந்த மந்திரத்தை ஜெபித்தால் உனக்கு எல்லாம் கை கூடும்”
என்று சொல்கின்றனர்.
இன்று
“சஷ்டியை நோக்கச் சரவணபவனார்
சிருஷ்டிக்கு உதவும்..,”
“முட்டு முட்டு முழிகள் பிதுங்க,
குத்து குத்து கூர் வடிவேலால்”
என்றெல்லாம் பாடலைப் பாடுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
சாங்கிய சாஸ்திரங்களில் ஏற்படுத்தப்பட்டு
மந்திர ஒலிகள் கலந்த நிலைகள் கொண்டு சஷ்டிக் கவசத்தைப் படித்தோம் என்றால் இந்த வாழ்க்கையில்
உடலின் தன்மை வரப்படும் பொழுது தன்னைக் காத்திடும் உணர்வின் தன்மை விளைகின்றது.
இந்த உணர்வின் தன்மையைப் பதிவு
செய்து கொண்டு இதையே பாராயணம் செய்து கஷ்டத்தையும் துன்பத்தையும் நீக்குவேன் என்ற நிலையில்
முருகனை எண்ணி சஷ்டிக் கவசத்தை ஓதுகின்றனர்.
இப்படி இதையே ஓதி ஓதி வளர்த்துக்
கொண்டபின் இறந்தபின் இன்னொரு மனிதன் இதே சஷ்டிக் கவசத்தைப் பாடினான் என்றால் இந்த உணர்வின்
ஆன்மா அங்கே அவன் உடலுக்குள் செல்லும்.
உடலுக்குள் சென்று இதனின்
உணர்வின் துணையால் அவனுக்குள் நின்று தன்னைக் காத்திடும் நிலையாக இது எதைச் செய்ததோ
இதைப் போல அவனுக்குள் நின்று காத்திடும் நிலைகளே வரும்.
ஆனால், அங்கே காத்திடும் நிலைகள்
வந்தாலும் தனக்குள் வரும் கோபம் வெறுப்பு என்ற நிலைகள் வரப்படும் பொழுது இந்த உணர்வுகள்
“முட்டு முட்டு.., முழிகள் பிதுங்க, குத்து குத்து..., கூர் வடிவேலால்” என்ற இந்த விஷத்தன்மையான
உணர்வுகளைத் தனக்குள் சேர்க்கும் நிலை ஆகும்.
இந்த உணர்வுகளே இவனுக்குள்
அதிகமாக விளைந்து தனது எதிரியைத்தான் கொல்லச் செய்யும். ஆனால், நமக்குள் உள்ள நல்ல
குணங்களை எதிரியாக மாற்றிவிடும். இதை உங்களுக்குள் அறிந்து பார்க்கலாம்.
ஆக, இந்த சஷ்டிக் கவாத்தைப்
பாடுபவர்கள் தன் குடும்பத்தைக் காக்கவும் தன் தொழிலைக் காக்கவும் தான் இவர்கள் பயன்படுத்துவார்களே
தவிர தனக்குள் வரும் எதிரியின் தன்மையை வளர்த்துக் கொள்வார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் நல்ல
குணத்தைத் தனக்குள் கவரப்படும்போது நல்ல குணமே தனக்குள் எதிரியாக வரும்.
ஆக, இதைப் போல பல நிலைகள்
சாங்கிய சாஸ்திரங்களில் சிக்கப்பட்ட நிலையும் இந்த மனித உடலைக் காக்கும் முறையே இப்படி
இத்தகைய சாங்கிய நிலைகளாக உருவாக்கிவிட்டார்கள்.
ஆக, அருள் சக்திகளை எண்ணி
பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்வதற்காகக் (சுவாசிப்பதற்காக) கொடுக்கப்பட்ட நிலைகளை வெறும் "ஒலிகளை” எழுப்பும் நிலையாக மந்திர நிலையாக மாற்றிவிட்டார்கள்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம்
விடுபடவேண்டும் என்பதற்காகத்தான் குருநாதர் இந்த உண்மைகளை உணர்த்தினார்.