ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 8, 2016

தீவிரவாதத்தின் பிடியிலிருந்து நம்மைக் காக்கும் சக்தி எது...?

இன்றைக்கு இருக்கக்கூடிய உலகம் காற்றிலே அதிகமாக விஷத் தன்மை பரவிக் கொண்டிருக்கின்றது. காஷ்மீரில் இன்று என்ன செய்கின்றார்கள்?

நான் தீவிரவாதி, நான் சொன்னபடி கேட்கவில்லை என்றால் நான் இதை அழிப்பேன். அங்கே முஸ்லிம்கள் தான் அதிகமாக இருக்கின்றார்கள்.

என்னுடைய கட்டுப்பாட்டிற்குக் கீழ் நீ வரவேண்டும். அதாவது “என் வழிக்குத் திரும்பு, இல்லை என்றால் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று சொல்கின்றார்கள். பல பேரைக் கொன்றுவிட்டார்கள்.

அதே போல் அமெரிக்கா எத்தனை வகையில் பல அணுகுண்டுகளைச் செய்து வைத்திருந்தாலும் கூட அவன் நாட்டுக்குள் இருந்து அவர்களுடன் பழகி அவனுடைய விமானத்தை வைத்தே கட்டடங்களையும் மக்களையும் கொன்று குவித்தார்கள். அவர்களுடைய ஞானம் அப்படி இருக்கின்றது.

ஏனென்றால், ஆண்டவனுக்கு எதிரான நிலைகளில் செயல்படும்போது அவர்களைக் கொன்றால் ஆண்டவன் ரொம்பச் சந்தோஷமாகின்றான்.

ஆண்டவன் சந்தோஷப்பட்டு இவன் உயிரை அவனிடம் அழைத்துச் சென்று விடுவான், மோட்சத்திற்குக் கொண்டு போவான் என்று சொல்லி “முட்டாள்தனமான அறிவுகளில்” செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

உன் நாட்டைக் காக்க வேண்டும் என்றும் மக்களைக் காப்பாற்றுவதற்காக வேண்டி “நீ.., உன் உயிரை விட்டால்..,” உயிரை விட்டான் என்பதற்காக வேண்டி கடவுள் உனக்கு மோட்சம் கொடுப்பான் என்பார்கள்.

இப்படிச் சொல்லும் நிலை ஒவ்வொரு மதத்திலேயும் ஒவ்வொரு இனத்திலேயும் ஒவ்வொரு சாதியிலும் இந்த நிலை தான் இருக்கின்றது.

இன்று அந்த நிலைகள் உயிரைக் கொல்லும் தீவிரவாதமாக வளர்ந்து விட்டது. ஆக, அடுத்தவனைக் கொல்வதில் ஒரு சந்தோஷப்படக்கூடிய நிலையில் வெறித் தன்மை ஊட்டி இன்றைக்கு உலகமே அந்த நிலைகளுக்கு வந்துவிட்டது.

இந்த உணர்வெல்லாம் கேட்டுக் கொண்டபின் வீட்டில் நம் குடும்பத்துடன் வாழ்பவர்களுக்குள் என்ன செய்கின்றது?

நம் பையனை நன்றாக உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றோம். நாம் எண்ணியபடி அவன் நடக்கவில்லை என்றால், “இவன் என்னத்தைச் செய்யப் போகின்றானோ…,? கோபம் வருகின்றது.

இந்தக் கோபம் பயமாக வந்து அவனை மிரட்டிக் கொண்டேயிருப்போம்.

அந்த மிரட்டும் உணர்வுகள் ஒரு தடவை அவன் மேல் வெறுப்பாகி நமக்குள் பதிவாகி அந்தச் சொல்லாகச் சொல்லி அவனுக்குள் பதிவாக்கிவிட்டோம் என்றால் அவன் இல்லாத பொழுதெல்லாம் நாம் என்ன செய்வோம்?

வீட்டில் பெண்கள் அவனைப் பற்றிப் பேசினால் உடனே கோபப்படுவார்கள். அந்தப் பேச்சின் உணர்வுகள் செயல்படும்போது அவனுக்குள் பதிவாகிவிடும்.

அந்தப் பதிவு அவனை என்ன செய்யும்?

அவன் ரோட்டில் நடந்து சென்றால் சிந்தனை இழந்தவுடன் மேடு பள்ளம் தெரியாதபடி விபத்துக்குள்ளாவான்.

அல்லது எதிர்த்தும் வரும் ஆளையோ எதிர்த்து வரும் வாகனத்தையோ தெரியாதபடி ஆக்சிடென்ட் ஆகும். நம்முடைய நினைவுகள் இப்படி ஒன்றுக்கொன்று எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகளில் இப்படித்தான் இயக்குகின்றது.

ஒரு குடும்பத்தில் ஒரு சிறு ஆக்சிடென்ட் ஆனது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படி ஆக்சிடென்ட் ஆன உணர்வுகள் வீட்டில் உள்ள அத்தனை பேருக்கும் அந்த உணர்வுகள் பதிவாகிவிடும்.

இந்த மாதிரி ஆன பின், அடுத்தாற்போல் வீட்டை விட்டு அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது வெளியில் சென்றார்கள் என்றால் என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்ற அந்த உணர்வுகள் தூண்டும்.

அவர்களை எண்ணி இங்கே போகும்போது இந்த நினைவு என்ன செய்கின்றோம் என்று தெரியாதபடி முட்டி மோதிக் கொள்வார்கள். காரிலோ எதிலோ சென்றால் மறுபடியும் ஆக்சிடென்ட் ஆகும்.

இப்படி அந்தக் குடும்பத்திற்குள் தொடர்ந்து அந்த உணர்வுகள் “இப்படி ஆகிவிட்டதே.., இப்படி ஆகிவிட்டதே..,” “கெட்ட நேரம் வந்துவிட்டது போலிருக்கின்றது..,” என்று நம்முடைய எண்ணங்கள் எண்ணக்கூடிய நேரம் நமக்குள் அது கெட்ட நேரமாக மாறும்.

அதை உடனே மாற்ற என்ன செய்ய வேண்டும்?

துருவ நட்சத்திரத்தை எண்ணி அதிலிருந்து வரும் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ணி நமக்குள் அதை இணைத்துக் கொண்டு அந்த மன உறுதியை வலுப்படுத்திக் கொண்டால் அந்தக் கெட்ட நேரத்தை நாம் நல்ல நேரமாக மாற்றிக் கொள்ள முடியும்.

இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் வரக்கூடிய தொல்லைகளை உடனுக்குடன் இப்படி மாற்றி அமைக்க வேண்டும்.

நம்மைக் காக்கும் சக்தியை நம் எண்ணத்தால் தான் எடுக்க முடியும். எந்த ஆண்டவனும் வந்து நம்மைக் காக்கப் போவதில்லை.

ஏனென்றால், நமக்குள் எண்ணுவதை உள் நின்று இயக்கும் சக்தியாக கடவுளாகவும் நாம் எண்ணுவதை இயக்கி அதை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனாக இருப்பவனும் நம் உயிர் தான்.

அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி இந்த உடலுக்குப் பின் பிறவியில்லை என்ற நிலை அடைவதே நம்மைப் பல கோடிச் சரீரங்களிலிருந்து மீண்டு மனிதனாக உருவாக்கிய உயிரான ஈசனுக்குச் செய்யும் சேவை ஆகும்.