உங்களை நீங்கள் அறிந்து கொள்வதற்குத்தான்
இதைச் சொல்கிறோம். ஏனென்றால், என்னை அறிந்து கொள்ள குருநாதர் பல அனுபவங்களைக் கொடுத்தார்.
ஆகவே, இந்த வாழ்க்கையில் நீங்கள்
யாரையும் குறை காண வேண்டாம். சந்தர்ப்ப பேதங்கள் நம்மை எப்படி உருமாற்றுகின்றது என்ற
நிலையை நீங்கள் உங்களை அறிந்து கொள்ள முடியும்.
இன்றிருக்கும் விஷமான விஞ்ஞான
உலகில் அருள் ஞானிகளின் அருள் வட்டத்தில் நம்முடைய எண்ண அலைகளை நிரப்ப வேண்டும் என்று
தான் சொல்லி வருகின்றோம்.
நமது குருநாதர் வைகுண்ட ஏகாதசி
அன்று தன் உடலின் தன்மை உணர்வை ஒளியாக மாற்றிச் சென்றார். அவர் ஒளியான உணர்வை நமக்குள்
சேர்த்து இனிப் பிறவியே இல்லை என்ற நிலையை நாம் அடைய வேண்டும்.
என்றுமே அந்த ஒளியின் உணர்வாக
மகிழ்ந்த நிலையில் வளரவேண்டும் என்ற அந்த நிலைக்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.
நீங்கள் எல்லாம் அந்த ஆற்றல்களைப்
பெறவேண்டும் என்று நான் எண்ணும் பொழுது நானும் அதைப் பெறுகின்றேன்.
ஆக, நான் மட்டும் பெறவேண்டும்
என்றும் நான் சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்க வேண்டும் என்று எண்ணினால் நான் நிச்சயம்
பெற முடியாது.
சிறு துளி பெரு வெள்ளம். விண்ணின்
ஆற்றலை சூரியனின் அணைப்பிலே கோள்கள் சென்றாலும் பல பல உணர்வுகள் இருந்தாலும் அது அனைத்தும்
அதனுடன் சேர்த்து இணைக்கப்படும் பொழுது தான் ஒளியின் சுடராக மாறுகின்றது.
நமது உயிரும் அவ்வாறே.
ஆகவே எல்லோருடைய உணர்வுகள்
நமக்குள்ளும் பல பல உணர்வுகள் உண்டு. அதைப் போல எல்லோரிடத்திலும் பல பல உணர்வுகள் உண்டு.
அதே சமயத்தில் ஒருவரிடத்தில்
கார உணர்வு அதிகமாக இருக்கலாம். ஒருவரிடத்தில் சலிப்பு உணர்வு அதிகமாக இருக்கலாம்.
ஒருவரிடத்தில் சஞ்சல உணர்வு அதிகமாக இருக்கலாம்.
இதைப் போல ஒவ்வொரு உடலிலும்
பல நிலைகள் முன்னனியில் உண்டு. அதன் கீழ் இயங்கும் நிலைகள் கொண்டு அவர்கள் எண்ணங்களும்
அவர்களுடைய செயல்களும் அவர்களுடைய உடலின் நிலைகளும் அவரின் நோய்களும் அதுவாகத்தான்
இருக்கும்.
இதைப் போன்ற பல நிலைகளில்
நாம் தொடர்பு கொண்டாலும் நாம் அவர்கள் அனைவரும் நலம் பெறவேண்டும் மகரிஷிகளின் அருள்
ஒளி பெறவேண்டும் என்ற ஏக்கத்துடன் நாம் இருப்போம் என்றால் சமத்துவம் பெறும் நிலை வருகின்றது.
ஆகவே, இதைப் போன்ற உணர்வின்
நிலையை குருநாதர் சாக்கடைக்கு முன் அமர்ந்து என்னையும் அமரச் செய்து எனக்குள் வியாசகரின்
தத்துவங்களை உபதேசித்தார்.
சாக்கடையில் அமர்ந்து தான்
அதையெல்லாம் சொன்னார்.
காரணம், சாக்கடையின் நாற்றத்திலிருக்கும்
பொழுது மற்றவர்கள் என்னைப் பார்க்கின்றனர். பார்த்தாலும் “சாக்கடை நாற்றமாகின்றதே..,”
என்ற எண்ணம் தான் எனக்குள் வருகின்றது.
ஆனால், அதே சமயம் அவர் சாக்கடைக்குள்
அமர்ந்து அவர் சொல்லும் பொழுதெல்லாம் எனக்கும் அருவெறுப்பாக இருக்கும்.
வியாசகருடைய தன்மைகளை அங்கே
எடுத்துக் கூறி அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு எவ்வாறு விண்ணுலகம் சென்றார் என்று சொல்லும்
பொழுது இந்த நிலைகள் மாறி அந்த உணர்வுகள் வருகின்றது.
இந்த நாற்றம் அப்பொழுது வரவில்லை.
ஆக, பிறர் என்ன பேசுகின்றார்
என்று புற நிலைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை. நமக்குள் இருக்கும் உணர்வின்
தன்மையை மெய்ப் பொருளின் உணர்வின் தன்மையை நாம் பெறவேண்டும்.
யார் என்ன சொல்வார்கள்? இவர்கள்
என்ன சொல்வார்கள்? என்னை அசிங்கமாகப் பேசுவார்களோ? என்னைக் கேவலமாக நினைப்பார்கள்,
என்னைக் குறையாக நினைப்பார்கள் என்று இதன் அடிப்படையில் தான் பெரும் பகுதியானவர்கள்
இன்று நாம் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
நாம் எதை மையமாக வைக்கின்றோமோ
அதனின் உணர்வின் துணை கொண்டுதான் மற்றவைகள் அனைத்தும் அது இயங்கும்.
ஆகவே மெய்ப்பொருளின் உணர்வை
நாம் பெறவேண்டும் என்று குரு காட்டிய வழிகளில் அதை முன்னிலைப்படுத்தி எடுக்கப் பழக
வேண்டும்.
அந்த மெய்பொருளால் நம்மைப்
பார்ப்பவர்கள் இருள்கள் நீங்க வேண்டும். அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்
என்று இதை ஏற்றுக் கொண்டு இந்த வாழ்க்கையில் நாம் தொடர வேண்டும்.
இதை நீங்கள் தொடர்வீர்கள்
என்றால் தீமையை அகற்றிடும் நிலையாகவும் தீமையை அகற்றிடும் அந்தச் சக்தியாகவும் உங்கள்
சொல்லைக் கேட்போரும் தீமைகள் அகற்றிடும் நிலையாகவும் நீங்கள் பெறமுடியும்.