ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 4, 2016

“நம் எண்ணமே பூசாரியாகவும், வேண்டுவது நம் உயிரான ஈசனிடமாகவும்” இருத்தல் வேண்டும்

வேதனைப்படுவோரையோ, துன்பப்படுவோரையோ உற்றுப் பார்த்துப் பரிவுடன் கேட்டறிந்து நீங்கள் உபகாரம் செய்தாலும் இவை நல்லவையே.

நன்மை செய்துவிடுகின்றோம்
ஆனால், நாம் கேட்டறிந்த அந்த வேதனை உணர்வுகள்
நம் உடலுக்குள் வரும் போது
அதைத் தூய்மைப்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்?

நமது தங்கமான மனது மங்கிவிடும்.

ஆகவே மனம் மங்கினால் நாம் என்ன செய்வோம்? சிந்தனை குறைகின்றது. நமக்குள் வேதனை என்ற உணர்வின் அணுக்கள் விளைகின்றது.

“நான் நல்லதெல்லாம் செய்தேனே..,
என்னை ஆண்டவன் இப்படிச் சோதிக்கின்றானே”.

“நான் கார்த்திகை விரதம் எல்லாம் இருந்தேன், தவமிருந்தேன்,
கால் நடையாகவே முருகனைத் தேடிச் சென்றேன்,
என்னைப் பரிசோதிக்கின்றான் போலிருக்கின்றது என்று வரும்.

ஆக, அவனுக்குக் காணிக்கை செலுத்தி தூதுவனாக இருக்கும் பூசாரிக்குக் காணிக்கை கொடுத்து நீ வரம் வாங்கிக் கொடு என்றால் அங்கே பூசாரி வரம் வாங்கித் தர மாட்டார்.

நமக்குள் நம் எண்ணமே பூசாரியாக வேண்டும்.

அருள் ஒளி பெறும் உணர்வை நமக்குள் நுகர்ந்து
அருள் ஆற்றல் பெறவேண்டும் என்று ஈசனிடம் வேண்டி
இதன் உணர்வை நாம் இந்த ஒலியை எழுப்பினால்
அவன் (நம் உயிர்) இரக்கம் கொண்டு உணர்வை உருவாக்கி நமக்குள் செயலாக்குவான்.

இதை நாம் பெறும் மார்க்கம் இதுவே.

ஆலயத்தில் அவன் இருக்கின்றான் என்றால் “அவன் செய்வான்” என்ற நிலைகளில் தான் வாழ்கின்றோம்.

கல்லைக் கடவுளாக்கி விட்டோம்.
ஆனால், நம் மனதைக் கல்லாக்கிவிட்டோம்.

ஆக, அந்தச் சிலையைப் பார்த்து நாம் எதை எண்ண வேண்டும்? எதை எடுக்க வேண்டும்?

இந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெறவேண்டும். தெய்வீகச் செயலாக எங்கள் செயல் அமைய வேண்டும்.

உயர்ந்த குணங்கள் கொண்டு அருள் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையை அகற்றிய அந்த அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்.

எங்களையறியாது சேர்ந்த இருளை நீக்கிடும் அந்த அருள் ஒளி பெறவேண்டும், அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வில் உயிரான ஈசனிடம் வேண்டி அந்த உணர்வலைகளைச் சுவாசிக்க வேண்டும்.

இவ்வாறு இந்த ஆறாவது அறிவு கொண்டு செயல்பட்டோம் என்றால் நம் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் கேட்டறிந்த இருளை நீக்கிடும் சக்தியை நாம் பெறுகின்றோம். தீமைகளிலிருந்து விடுபடுகின்றோம்.

தீமைகளை நீக்கிடும் ஆற்றலை ஒவ்வொரு மனிதரையும் பெறச் செய்வதற்குத்தான் மெய்ஞானிகள் இந்த ஆலயங்களைக் கட்டினார்கள்.

நம் ஞானிகள் காட்டியுள்ள ஆலயப் பண்புகள் அவ்வளவு அற்புதமானது.