ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 6, 2016

குருதேவர் கொடுக்கும் “தீட்சை”

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைப் பல இடங்களுக்கு நேரடியாகவும் சூட்சமமாகவும் அழைத்துச் சென்று பல உண்மைகளை உணர்த்தினார், காட்டினார்.

அதைப் போல ஒவ்வொரு மெய்ஞானியும் எதன் வழி கொண்டு மெய்ஞானத்தின் மூலக்கூறுகளை அறிந்தார்கள் என்று அக்காலங்களுக்கே அழைத்துச் சென்று அந்த உணர்வுகள் பரவியிருப்பதையும் நுகரச் செய்து அறியும்படி செய்தார்.

அவர்கள் மனிதனாக வாழும்போது வரும் இன்னல்களிலிருந்து விடுபடும் ஆற்றல்களைப் பெற்று இன்று விண்ணிலே ஒளியின் சுழன்று கொண்டிருப்பதையும் உணர்த்தினார்.

இதை எல்லாம் அவர் காட்சியாகவும், உணர்வுப் பூர்வமாகவும் அனுபவமாகவும் எனக்குக் காட்டினார். இயக்கத்தின் உண்மையை அறிந்து கொண்டேன்.

குருநாதர் கொடுத்தார், என்னாலும் அதைப் பார்க்க முடிந்தது, அறிய முடிந்தது, உணரவும் முடிந்தது. அந்த மெய்ஞானிகள் பெற்ற ஆற்றலையும் பெற முடிந்தது. பெற்றேன்.

அவ்வாறு யாம் பெற்ற இந்த நிலைகளை யாருக்குச் சொல்லவேண்டும் என்று தெரியுமா?

என்னுடன் சீடர்களாக வந்து நான் சொல்கிறபடியெல்லாம் கேட்கின்றவர்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்கள் ஒழுக்கமாக வருகின்றார்களா.., இல்லையா.., என்று பார்த்து அதற்கப்புறம் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

சீரான நிலைகளில் வழி நடப்பதற்கு வரம்புகளை விதித்து, கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து அந்தக் கட்டுப்பாட்டின்படி வருகின்றார்களா.., இல்லையா.., என்று பார்க்க வேண்டும்.

உண்மைகளை எல்லாம் சொல்லிப் பதிவாக்கி அதன்படி நடப்பார்களா இல்லையா என்று தெரிந்து கொண்டு பல தடவை இழுத்தடித்த பின்ப் மெம்பராக்க வேண்டும்.

கடைசியாக நான் இதிலிருந்து மாறவே மாட்டேன் என்று சொல்லி சத்தியம் செய்து கொடுக்க வேண்டும். இப்படிச் சத்தியம் செய்து கொடுத்தவர்களுக்குத் தான் மற்ற ஸ்தாபனங்களில் அவர்கள் கற்றுக் கொண்ட நிலைகளைக் கொடுப்பார்கள்.

ஒரு ஸ்தாபனத்திற்குள் (உள்ளுக்குள்) போனால் மாற மாட்டேன் என்ற வாக்கினை முதலில் வாங்கிக் கொள்வார்கள்.

 உங்களிடம் இதையெல்லாம் நான் வாங்கவில்லை. குருநாதர் அப்படிச் செய்யச் சொல்லவில்லை.

உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கச் சொன்னார். உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கச் சொன்னார். ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயங்கள் பரிசுத்தம் ஆகவேண்டும் என்று “நீ தூய்மைப்படுத்து” என்றார்.

அவ்வாறு நீ தூய்மைப்படுத்தினால் உன் உயிரான ஈசன் உனக்குக் கூலி கொடுப்பான் என்றார்.

அவர் காட்டிய வழியில் அவர் சொன்ன முறைப்படித்தான் அவர் இட்ட கட்டளைப்படித்தான் இதைச் செய்து கொண்டிருக்கின்றோம்.