ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 13, 2016

நம்மை நல்லவராக்குவதும் கெட்டவராக்குவதும் எது...?

மனிதனாக உருப்பெறக் காரணமாக இருந்த நம் தாய் தந்தையரை முதலில் கடவுளாக மதித்து பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் எத்தனையோ தொல்லைகள் பட்டுத்தான் அவர்கள் மனிதனாக ஆனார்கள்.

ஆனால் நாம் ஈயாக எறும்பாக பாம்பாக தேளாக இருந்திருப்போம். அதை அடித்திருப்பார்கள்.

நம் உயிர் அவர் உடலின் ஈர்ப்பிற்குள் சென்றிருக்கும். அவர் உடலில் சேர்த்த உணர்வைக் கவர்ந்தது நம் உயிர். நம் உயிர் அவர் உடலுக்குள் சென்று அவர் வளர்த்துக்கொண்ட உணர்வின் தன்மை கவர்ந்தது.

கவர்ந்து வளர்ந்து அவருடைய கருவாக நாம் உருவானாலும் அவர் கருவில் இருக்கக்கூடிய காலத்தில் அவர்கள் நல்லதைப் பற்றி ஏங்கி இருந்தால் நல்ல உணர்வுகள் சேர்த்து நல்ல உடலை உருவாக்கும்.

ஆனால், நாம் கருவிலே இருக்கப்படும்போது வேதனையும் துயரமும் அதிகமாக அந்த உணர்வின் தன்மைகளைத் தாய் எடுத்திருந்தால் நம் உடலில் பல நோய்களும் ஊனமான உடலும் உருவாக்கும் தன்மை வருகின்றது.

ஆக, நம்முடைய சந்தர்ப்பம் கருவில் இருக்கும்போது தாய் எடுத்துக்கொண்ட உணர்வுக்குத்தக்கத்தான் நம்மை நல்ல மனிதனாக உருவாக்கியது. சிந்தித்துச் செயல்படும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கிக் கொடுத்தது.

நாம் கருவில் இருக்கும்போது தாய் எடுத்த உணர்வால்தான் நாம் நல்லவராகவும் சிந்திக்கும் தன்மையும் இப்பொழுது இதைப் போன்ற நல்ல உபதேசங்களைக் கேட்கும் அருளும் நமக்குள் வலுக்கொடுத்தது.

எந்தத் தாய் அவ்வாறு எடுத்ததோ, அப்படிப்பட்ட தாய் உடலில் வளர்ந்த உணர்வு கொண்டவர்கள் இருப்பின் அவர்கள் தான் இந்த உபதேசத்தைக் கேட்பார்கள், கூர்ந்து கவனித்து எடுத்துக் கொள்வார்கள்.

அந்த உணர்வின் தன்மை இருந்தால் தான் இதைக் கவர முடியும்.

அப்படிப்பட்ட உணர்வுகள் (தாய் கருவில் பெற்ற நிலைகள்) இல்லை என்றால் கேட்பார்கள், படிப்பார்கள். தனக்கு வேண்டியதை எதிர்ப்பார்ப்பார்கள். அது இல்லை யென்றால் போய்க்கொண்டே இருப்பார்கள்.

அந்த நல்ல உணர்வுகள் பெற வேண்டுமென்று உணர்வின் தன்மை அன்று தாய்க்கருவில் பெற்ற நிலை தான் இன்று உங்களை இங்கு அமர்ந்து கேட்கும்படி கூர்ந்து கவனிக்கும்படிச் செய்கின்றது.

ஆகவே, எத்தனை தொல்லைகள் இருப்பினும் எத்தனை துயரங்கள் இருப்பினும் மெய் உணர்வை நீங்கள் பெறும் தகுதி ஏற்படுத்தியது உங்கள் தாயே.

அதனால் அந்தத் தாயை நீங்கள் கடவுளாகவும் தெய்வமாகவும் மதித்துப் பழகுதல் வேண்டும்.

எத்தனை இன்னல் வந்தாலும் ஒவ்வொரு நொடியிலேயும் நம்மை எத்தனையோ வகையில் காத்தருளிய தெய்வம் நம் தாய் தான். நமக்கு நல்ல வழி காட்டிய குருவும் தாயே. நாம் ஒவ்வொருவரும் தாயை மதித்து நடந்து பழக வேண்டும்.

ஏனென்றால் தாய் கருவில் இருக்கும்போது எடுத்துக்கொண்ட உணர்வே நம்மை நல்லவனாக்குவதும் கெட்டவனாக்குவதும்.

ஆகையினால் நாம் நமது உயிரைக் கடவுளாக மதித்து நம் தாய் தந்தையரின் உயிரைக் கடவுளாக மதித்து அவர்களை தெய்வமாக மதித்து இந்த வாழ்க்கைப் பயணத்தை நீங்கள் செயல்படுத்துங்கள்.

நமது குரு காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் ஆழப் பதிவு செய்ததை நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் அந்த அருள் சக்திகளைப் பெறலாம்.

உங்களுக்குள் அறியாது வரும் இருளைப் போக்கலாம். தெளிந்த மனம் பெறலாம். தெளிவான வாழ்க்கை வாழலாம்.