ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 7, 2016

காட்டில் தவமிருந்து நீங்கள் ஞானம் பெறமுடியாது, யாம் சொல்வதைக் கூர்ந்து கவனித்தாலே “ஞானம்” கிடைக்கும்

மெய்ஞானிகள் வளர்த்த ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறவேண்டும் என்ற நிலையில் நீங்கள் எல்லோரும் காட்டில் போய் தவமிருந்து என்றைக்குப் பெறப் போகின்றீர்கள்?

அப்படிப் பெறவேண்டும் என்றால் முடியாது.

குருநாதர் என் வீட்டில் உள்ள எல்லோரையும் கஷ்டப்பட வைத்து என்னை அழைத்துக் கொண்டு போய் காடு மேடெல்லாம் சுற்றச் செய்தார். “எப்படியெல்லாம் கஷ்டம் வருகின்றது” என்ற அனுபவம் பெறுவதற்காக அவ்வாறு செய்தார்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்று அறிந்து கொள்ளுங்கள்.

ஒரு விஞ்ஞானி பல கஷ்டங்கள் படலாம். அவன் கண்டுபிடித்த ஒரு இயந்திரத்தினை சரியான முறையில் இயக்கப்பட்டு நாம் பயன்படுத்தும் பொழுது சரியான முறையில் ஏற்றுக் கொண்டோம் என்றால் அந்த விஞ்ஞான அறிவு நமக்குப் பயன்படும்.

ஒரு கம்ப்யூட்டரைக் கண்டுபிடிக்கின்றான் என்றால் அவன் எவ்வளவு சிரமப்பட்டு அதைச் செய்திருப்பான். அதை நாம் விளையாட்டாகத் தட்டிக் கொண்டிருந்தால் ஒன்றும் வேலை செய்யாது.

அதைப் போன்று தான் உங்களை அறியாமல் இயக்கக்கூடிய தீமைகளிலிருந்து நீங்கள் மீள வேண்டும் என்பதற்காகத்தான் உங்களுக்குள் ஆழமாக அருள் ஞான வித்துகளை உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றேன்.

இதில் சிலர் என்ன செய்வார்கள் தெரியுமா?

“நான் நினைத்தது நடக்கவில்லை.., சாமியிடம் போய் என்ன நடந்தது..,” என்பார்கள்.

எதை நினைத்து வந்தார்களோ அந்த ஆசையிலே தான் இருப்பார்கள். ஆனால் சாமி சொன்னதை வைத்து, அதை நினைத்து எப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வருவதில்லை.

ஆனால், நான் சொல்லிக் கொண்டு வருவதையெல்லாம் நீங்கள் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், உங்கள் கருவிழி ருக்மணி இந்த உணர்வின் அலைகளை உங்கள் உடலில் உள்ள செல்களில் பதிவாக்கிவிடும்.

“நீங்கள் கவனித்தால் போதும்”. உங்களுக்குள் நினைவு தன்னாலே வரும். உங்களுக்குத் தனியாக நினைவு வர வேண்டியதில்லை.

இந்தத் தியானத்தில் இருப்பவர்களுக்கு அருள் ஞானத்தை புத்தகத்தில் உள்ளதைப் படித்துவிட்டு மீண்டும் அப்படியே அதைச் சொல்லச் சொன்னால் தெரியாது.

ஆனால், அதில் படித்துக் கொண்ட கருத்துக்களைப் பற்றிக் கேட்டோம் என்றால் அடுக்கடுக்காக வரும்.

யாம் சொல்லும் நிலைகளைக் கடைப்பிடிப்பவர்கள் அருள் ஞானத்தைப் பேசுகின்றார்கள் என்றால் புத்தகத்தைப் பார்த்துப் படித்து “மனப்பாடம் செய்து கொண்டு..,” அதைச் சொல்லுங்கள் என்றால் அவர்களால் சொல்ல முடியாது.

யாம் பதிவாக்கிய நிலைகளை முறைப்படி எடுத்துக் கொண்டார்கள் என்றால் அதில் படித்த கருத்துக்களின் மூலங்களை “அடுக்கடுக்காக.., அடுக்கடுக்காக..,” இவர்கள் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

காரணம், பதிவான உணர்வுகள் “எலெக்ட்ரிக்” எலெக்ட்ரானிக்” அதாவது அந்த எலெக்ட்ரானிக் என்ற முறைப்படி காற்றிலிருப்பதை எடுத்து இயக்கச் சக்தியான அந்த “ஞானம்” உங்களுக்குக் கிடைக்கும்.

அந்த ஞானத்தின் தன்மை உங்களுக்குள் வந்தால் தீமை புகாத வலிமை கிடைக்கும். அதைத்தான் உங்களுக்குள் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.