ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 10, 2016

காட்டிற்குள் இருக்கும் விஷத்தை முறிக்கக்கூடிய செடிகள் வேர்கள் - குரு காட்டியது

அகஸ்தியனின் தாய் தந்தையர் பல கடுமையான விஷம் கொண்ட மிருகங்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று பச்சிலைகளையும் மூலிகைகளையும் தாங்கள் வாழும் குகைகளில் பரப்பி வைத்துக் கொள்கின்றனர்.

அதைப் பரப்பி வைத்தபின் யானையோ, பாம்போ தேளோ இவைகள் வராதபடி இந்த மணத்தைக் கண்டு அஞ்சி ஓடுகின்றன.

இப்படிப் பல காலத்திற்கு முன்னாடி (பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்) புலனறிவால் ஒவ்வொரு மணத்தின் அறிவை அதனின் இயக்கத்தை அறிந்து கொண்டு மற்ற மிருகங்களிடமிருந்து தப்பிக் கொள்ள குகைகளில் இருக்கப்படும் பொழுது இப்படித் தற்காத்துக் கொண்டு வாழ்ந்தார்கள்.

மரம் செடி கொடிகளில் எல்லாம் விழுதுகள் உண்டு. விழுதுகளை எடுத்தால் அது இழுக்கும். இழுத்து அந்த மணத்தின் தன்மையை வீசும் தன்மை வருகின்றது.

ஒரு பாம்புக்கு முன் ஒரு வேரைக் காட்டியவுடன் அப்படியே படமெடுப்பது நின்று விடுகின்றது. இதே மாதிரி யானை மிரட்டி என்ற ஒரு வேரைக் காட்டியவுடன் யானை விலகிச் செல்கின்றது.

ஆகவே, இத்தகைய வேர்களைத் தாங்கள் படுத்திருக்கும் குகைகளுக்கு முன் போட்டு வைத்திருப்பார்கள்.

செடியில் விழுது இருக்கும்போது இழுக்கும் தன்மை வரும். அந்தச் செடி இழுக்கின்ற மாதிரி இழுத்து அதன் வழியில் அதன் அலைகளை மாற்றிக் கொண்டிருக்கும்.

குகைப் பக்கம் இத்தகைய விழுதுகளைப் போட்டபின் அந்த மிருகங்களோ விஷ ஜெந்துக்களோ இவர்களைத் தாக்குவதில்லை. நிம்மதியாகத் தூங்குகின்றார்கள்.

ஏனென்றால் நம் குருநாதர் இதையெல்லாம் காட்டுவதற்காகக் காட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

கரடி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கினறார். ஒரு குகை மேல் என்னை ஏறிப் படுக்க வைத்துவிட்டுச் சென்றுவிட்டார் குருநாதர். அதே சமயத்தில் என் உடலில் ஒரு வேரைக் கட்டி வைத்திருக்கின்றார்.

ஆனால், அது எனக்குத் தெரியாது. என்ன வேர் என்றும் தெரியாது. “இதை இடுப்பில் கட்டிக் கொள்…, உனக்கு பந்தோபஸ்தாக இருக்கும்” என்றார்.

சரியான இருட்டு. நடந்த களைப்பு அதிகமாக இருந்ததால் படுத்தவுடன் தூங்கிவிட்டேன். பெரிய பாறையாக அது இருந்தது.

நன்றாகத் தூங்கிவிட்டேன். என்னை விட்டுவிட்டுப் போய்விட்டார் குருநாதர்.

தூங்கி எழுந்து பார்க்கின்றேன். “உர்ர்ர்…, உர்ர்ர்ர்..,” என்று சப்தம் வருகின்றது. பார்த்தால் ஒரு கரடி வருகின்றது.

கரடியைப் பார்த்தவுடன் நல்ல வசமாகச் சிக்கிவிட்டோம் என்று நினைத்தேன். ஆனால், வெகு தூரத்திலிருந்து தன் இடத்திற்கு வருகின்றது.

உறுமிக் கொண்டு வந்த கரடி பக்கத்தில் வந்தவுடன் “ஊ..,ம் ஹும்..,” என்று சப்தமிட்டு அந்தப் பக்கம் அப்படியே திரும்பி ஓடுகின்றது.

உறுமிக் கொண்டு வந்த கரடி “என்ன..,” என்று தெரியாமல் அதுவாகத் திரும்பிக் கொண்டு ஓடுகின்றது.

அப்புறம் விடிந்த பிற்பாடு குருநாதர் வருகின்றார்.

“நான் ஒரு அவசர வேலையாகப் போனேன்டா..,” என்கிறார் குருநாதர். இராத்திரி நன்றாகத் தூங்கினாயா? என்றார்.

தூங்கினேன், ஒரு கரடிச் சப்தம் கேட்டது முழித்துக் கொண்டேன் என்று சொன்னேன்.

அந்தக் கரடி இந்தப் பாறைக்குக் கீழ் தான் கூடு கட்டியிருக்கின்றது. தன் இருப்பிடத்திற்கு வந்திருக்கின்றது. குகைக்கு மேல் உள்ள பாறையில் தான் நீ தூங்கிக் கொண்டிருந்தாய். உன் மணத்தைச் சுவாசித்ததும் வந்த கரடி ஓடிவிட்டது என்றார் குருநாதர்.

“என் மணத்தைச் சுவாசித்ததும் ஓடிவிட்டதா..,?” என்று நான் கேட்டேன்.

உன் மணத்தை அல்ல, உன் இடுப்பில் கட்டியுள்ள வேரின் மணம் தான் இந்த வேலையைச் செய்தது என்றார். ஆனால், அந்த வேருக்கு அந்தச் சக்தி எப்படி வந்தது தெரியுமா..,? என்று விளக்கம் கொடுக்கின்றார் குருநாதர்.

இந்தச் செடிக்கு அந்தச் சக்தி எப்படி வந்தது? அந்த வேருக்கு என்ன சக்தி உள்ளது? இந்தச் செடிகள் எப்படி உருவானது? இதற்குள் எது எது கலவையானது? கலவையாவதற்குச் சந்தர்ப்பம் என்ன? என்று இதையெல்லாம் கதையாகச் சொல்லிக் கொண்டிருப்பார் நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

அதே மாதிரித்தான் நானும் உங்களிடம் கதையாகச் சொல்கின்றேன்.

ஆனால், நீங்கள் இதையெல்லாம் அறிந்து உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய இருளை நீக்கக்கூடிய திறன் பெறவேண்டும் என்பதற்காகத்தான் குருநாதர் எனக்குச் சொன்ன மாதிரியே உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.