ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 30, 2016

நம் நாட்டிலே தோன்றும் அருள்ஞானம் உலகெங்கிலும் படரும் - தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி

இன்று நாம் பார்க்கின்றோம். அரசியல் பேதத்தால் எத்தனையோ பேரழிவுகள் வருகின்றது இன பேதத்தால், மொழி பேதத்தால் எத்தனையோ பேரழிவுகள் வருகின்றது

அவைகள் தற்காலத்தில் நடந்து கொண்டுள்ளதை நாம் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம். இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வளர்க்க வேண்டும்.
உலக மக்கள் மகிழ்ந்து வாழ வேண்டும்.
மனிதன் அந்தக் கடவுளின் தன்மையை அடைய வேண்டும்.

மனிதனுக்குள் அறியாது புகுந்த தீமைகளை அகற்றிடல் வேண்டும் என்ற உணர்வை நமக்குள் ஓங்கி வளர்த்திடல் வேண்டும்.

இதுவே நம் குருநாதர் காட்டிய அருள் வழி.

இன்று நீங்கள் சிறு கூட்டமாக இருக்கலாம். இதனின் உணர்வை வளர்க்கப்பட்டு கருவில் வளரும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த முறைப்படி செய்தால்
உலகைக் காத்திடும் பெரும் மகரிஷிகளை உங்களால் சிருஷ்டிக்க முடியும்.
இதன் உணர்வால் இந்த நாட்டில் வரும் தீமைகளை ஓட்ட முடியும்.
நல்ல அரசியலையும் நீங்கள் கொண்டு வர முடியும்.
இல்லையென்றால் கொண்டு வர முடியாது.
நமக்குள் நன்மையைப் பெறும் தகுதியைப் பெற முடியாது.
ஆகவே, நம் எண்ணத்திற்குள் மாற்றம் வேண்டும்.

இன்றைய நிலைகள் உலகைக் காத்திடும் நிலைகள் இழந்து உலகைக் குறை கூறிக் கொண்டே போகும் நிலையேதான் நமக்குள் வளர்ந்து கொண்டு வருகின்றது.
அதனால் நமக்குள் குறைகளைத்தான் வளர்க்க முடியும்.
தீமைகளைத் தான் வளர்க்க முடியும்.
பகைமைகளைத் தான் உருவாக்க முடியும்.
பகைமையற்ற உலகை நாம் சிருஷ்டிக்க முடியாது.

உலக அரசியல் சீராக வளர வேண்டும். இந்த எண்ணத்தை நீங்கள் பதிவு செய்யுங்கள். இந்த உணர்வின் தன்மை வரும் போது சீரான அரசியலும் பெருகும். சீரான தெய்வ பக்தியும் வரும்.

ஆக, குறைகளைக் கூறிக்கொண்டு இருக்க வேண்டாம்.

இந்த அரசியல் அந்த அரசியல் என்ற நிலைகளில் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளை பிறர் எளிதில் குறை சொல்வார்கள்.

இவர்கள் ஆட்சிக்குப் போன பின்
அந்த அரசியல்வாதிகள் இவர்களுடைய ஆட்சியில் குறை
என்று சொல்வார்கள். இது வழக்கில் வரக் கூடியது.

ஆனால், நமக்கு இது வேண்டாம்.

யார் ஆட்சியில் அமர்ந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி அவர்கள் பெறவேண்டும். உலகைக் காத்திடும் உணர்வுகள் அவருக்குள் விளைய வேண்டும், இந்த நாட்டைக் காக்கும் நிலைகள் பெறவேண்டும் என்று இதை வினையாக உங்களுக்குள் சேருங்கள்.

இந்த மனதிற்குள் இந்த உடலுக்குள் இந்தத் தீமைகள் நுழையாது உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
எந்த நிலையிலும் எந்த வகையிலும் எதுவும் புகுந்து விடும்.
ஆக, நஞ்சு எதற்குள் சென்றாலும் அதை அழித்துவிடும்.

ஆட்சி புரியும் பீடத்திற்கு நாம் ஓட்டுப் போட்டு செல்லச் செய்தோம். பெரும் பகுதியான மக்களால் சென்ற அவர்களை நாம் தூஷிக்க்க் கூடாது.

அவர்களின் ஆட்சி சீராக இருக்க வேண்டும், அவர்கள் தெளிந்த மனம் பெறவேண்டும், மக்களைக் காக்கும் எண்ணங்கள் வர வேண்டும் என்று அரசியல் பேதமற்ற நிலைகளில் நாம் இந்த உணர்வுகளைப் பாய்ச்சினால் இந்த நாட்டிற்கு நம் உணர்வுகள் சில சேவையைச் செய்யும்.

இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர் அரசியலைப் பற்றி சாமி ஏதோ பேசுகின்றார் என்று எண்ண வேண்டாம். நமது குருநாதர் அனைத்து நிலைகளையும் அறிந்தவர்.

அவர் எமக்குக் காட்டிய நிலைகள் நாம் மனிதர்களுக்குள் விளைய வைக்கும் உணர்வுகளை சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. அலைகளாகப் பெருக்குகின்றது.

மனிதனின் உணர்வுகள் எது பெருகுகின்றதோ அதனின் அலைகள்தான் இந்தப் பூமி முழுவதும் படர்கின்றது.

மனிதன் தன் எண்ணத்தால் எதை எதை ஆசையால் பெறுகின்றானோ
எதை எதை எண்ணத்தால் அழிக்க எண்ணுகின்றானோ
அந்த உணர்வுகள் வெளியில் இருந்து வருவது இங்கே படர்கின்றது.
கேட்போர் உணர்வுகளிலும் பதிவாகின்றது. விளைகின்றது.
அந்த உணர்வலைகள் படர்ந்து காற்றலைகளும் மாறுகின்றது.

மனிதனை அழித்திடும் உணர்வுகள் மனிதனுக்குள்ளே விளைகின்றது. இதிலிருந்து மாற்ற வேண்டும்.
இதை நீ செய்வாய்.
இதைச் செய்யக் கடவாய்.
உனக்குள் இதை விளையச் செய்.

ஒவ்வொரு உணர்வும் மனிதனைக் காத்திடும் உணர்வாக அவர்களுக்குள் விளையட்டும்.
தீமைகள் அகலட்டும், உலகம் மலரட்டும்.
மகிழ்ச்சியின் நிலைகள் கொண்டு மலரட்டும்
என்று நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொன்னார்.

அவர் காட்டிய நிலைகளை உங்களிலே பெறச் செய்வதற்கு இதைச் செய்கின்றேன். அனைத்து பேதங்களையும் அகற்றுங்கள். நாடு நலம் பெறவேண்டும் என்ற உணர்வை உயர்த்துங்கள்.

இங்கே தோன்றும் நிலைகள் கொண்டு
எல்லோருடைய உணர்வுகளும் தோன்றும்.
நிச்சயம் இது படரும்.

நம் தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்பது போன்று நமது நிலைகளைச் செயல்படுத்துங்கள்.

நிச்சயம் அந்த நல்ல நிலைகளைப் பெற முடியும். ஆகவே இதை நாம் உருவாக்க முடியும். அதை நீங்கள் உங்கள் வாழ்க்கையிலே பார்க்கலாம்.

உங்கள் அனுபவத்திலும் பார்க்கலாம்.