Wednesday, January 20, 2016

நெல் வயல்களில் நீரை ஏற்றி வைப்பது போல் அருள் உணர்வுகளை உங்களுக்குள் ஏற்றி வைக்கின்றேன் - ஞானகுரு

வயல்களில் அருகம்புல் வந்துவிட்டது என்றால் அதற்காக வேண்டி “களை நீக்கியைத் தெளித்து” அதை நீக்குகின்றார்கள். களை நீங்குகின்றது. நெல் பயிரை எடுத்தபின் மீண்டும் இந்த மருந்தின் வேகம் குறைகின்றது. மறுபடியும் புல் வெளியில் வந்துவிடுகின்றது.

நெல் பயிர் விளைய வேண்டுமென்றால் வயலில் தண்ணீரை முழுவதும் ஏற்றி வைத்துவிடுகிறார்கள். நெல்லுக்குத் தண்ணீர் ஜாஸ்தி தேவை. புல்லையெல்லாம் அமுக்கி வைத்துவிட்டோம் என்றால் முளைப்பதே இல்லை.

தண்ணீர் விடாமல் மட்டும் இருந்து பாருங்கள்.
புல் திகு திகு என்று வந்துவிடும்.
       நெல் காணாமலே போய்விடும்.

இதைப் போன்றுதான் யாம் உங்களுக்கு வாக்குகளைக் கொடுக்கின்றோம். சதா உங்கள் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதிக்கின்றேன். அந்த உடலைக் கோவிலாக நினைக்கின்றேன்.

மனிதனாக உருவாக்கிய உயர்ந்த குணங்களையெல்லாம் தெய்வமாக மதிக்கின்றேன், வணங்குகின்றேன். அந்தத் தெய்வங்களுக்கும் உயிரான ஈசனுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்.
அவன் கட்டிய கோட்டையில்
மனது நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நான் தியானிக்கின்றேன்.

ஆனால், நீங்கள் எதைத் தியானிக்கின்றீர்கள்?

என்னை அவன் இப்படிப் பேசினான்,
       என் பையன் இப்படி இருக்கின்றான்;
நான் இவனுக்கு இப்படி உதவி செய்தேன்,
       ஆனால் என்னை மோசம் செய்துவிட்டான் என்று தியானிக்கின்றீர்கள்.

ஏனென்றால் நல்ல உணர்வுகளை (விதைகள்) எடுத்துத்தான் இந்த மனித உடல் உருவானது. எத்தனையோ கோடிச் சரீரங்களில் வாழும்போது
பல வேதனைகள் பட்டோம்,
இம்சைகள் பட்டோம்,
சங்கடப்பட்டோம்.
இதிலிருந்தெல்லாம் மீண்டு வந்தோம்.

எப்படி என்று கேட்கின்றீர்களா?

நாம் இன்று சுகமாக இருக்கின்றோம். வேதனையாகி நோயானால் டாக்டரிடம் சென்று வைத்தியம் செய்து குணப்படுத்திக் கொள்கிறோம்.

வாய்க்கு ருசியாக வேண்டும், உடலுக்குப் பலம் வேண்டும் என்றால் ஆட்டை அறுத்துச் சாப்பிடுகிறோம்.

ஒரு தவளை என்ன செய்கிறது? வண்டைப் பார்த்தவுடன் தன் பசியைப் போக்க அதை விழுங்குகிறது. ஆனால், அந்த வண்டின் உயிர் தவளையாகப் பிறக்கின்றது.

நீங்கள் பார்க்கலாம், ஓணான், பல்லி இவைகள் எல்லாம் அப்படியே பம்மிக் கொண்டிருக்கும். தன் இரையைப் பார்த்தவுடன் பூச்சி, ஈ, பாச்சா இவைகளை “லபக்” என்று அப்படியே விழுங்குகின்றது.

அதன் வாய்க்குள் சிக்கியவுடன் பூச்சி பல அவஸ்தைப்படுகிறது. உள்ளுக்குள் செல்லும்போது “இப்படி என்னைக் கொல்கிறதே..,” என்று எண்ணுகிறது. இந்த உணர்வோடு உயிர் ஒன்றிக் கொள்கிறது.

ஆனால், பூச்சி, ஈ அவைகளுக்கு இரையாகிவிடுகின்றது. இரையானாலும் அவைகளின் உயிர் இந்த உணர்வுடன் ஒன்றி பல்லியின் உணர்வை எடுத்து முட்டையாகி பூச்சி, ஈ இவைகளின் உயிர் பல்லியாகப் பிறக்கின்றது.
இப்படித்தான் நாம் பல அவஸ்தைப்பட்டு
மனிதனாக இன்று வந்திருக்கின்றோம்.

அவஸ்தைகளிலிருந்து தப்ப உடனே அடுத்த உடலுக்குள் போய்விட்டோம்.

ஆனால், இப்பொழுது நாம் எங்கே போகின்றோம்?
இப்பொழுது எதையெல்லாம் தியானிக்கின்றோம்?

என்னைக் காட்டிலும் மோசமாகப் பேசினால் சிறிது கௌரவமாக இருந்தால் டஎன்னை இப்படிக் கேவலமாகப் பேசிவிட்டான் பார்.., இவனை என்ன செய்கிறேன்?" என்று சொல்லி அந்தக் குடும்பத்தையே கெடுப்பதற்கு என்ன வேலையோ அதைச் செய்கின்றோம்.

அவன் கெடுமதி செய்தான்.
       அந்த உணர்வு நமக்குள் விளைகின்றது.
              இந்த விஷமான உணர்வுகள் என்ன செய்கிறது?

       நமக்குள் இன்னும் தேய்மானமாகப் போய்விடுகிறது. ஆனால், நாம் தவறு செய்யவில்லை

பல நல்ல சரக்குகளைப் போட்டு சுவை மிக்க பதார்த்தங்கள் ஜிலேபி, லட்டு இவைகளைச் செய்து வைத்திருக்கின்றீர்கள். அதில் ஒரு துளி மிளாகாய்த் தூள் பட்டால் என்ன செய்யும்? காரமாகத் தான் இருக்கும். அதே போல உப்புப் பட்டுவிட்டால் அந்த ருசியை மாற்றிவிடும்.

இந்த மாதிரி நம் உயர்ந்த குணங்களுக்குள் நம்மையறியாது பல நிலைகள் (தீமைகள், துன்பங்கள்) சேர்த்து இத்தனை நிலைகளை உண்டாக்குகின்றது.
நாம் தவறு செய்யவில்லை.
ஆக, நாம் இதைத் தான் தியானிக்கின்றோம்

ஆனால், நான் எதைத் தியானிக்கின்றேன்?

உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உடலை ஆலயமாக மதித்து உங்களை மனிதனாக உருவாக்கிய குணங்கள் மகரிஷிகளின் அருள் சக்தியால் தீமைகளிலிருந்து விடுபட்டு நன்றாக வேண்டும் என்று தியானிக்கின்றேன்.

தியானத்தில் விளைந்த இந்த எண்ணம் உங்களிடம் சொல்லாகச் (உபதேசம்) சொல்லி இதைத் திருப்பி நீங்கள் எண்ணுங்கள் 
உங்கள் தீமைகள், நோய்கள் நீங்கிவிடும் என்று சொல்கிறேன்.
இது உங்களுக்குள் வித்தாகப் பட்டு
உங்களுக்குள் இருக்கும் கஷ்டங்களை நீக்குகின்றது.

நெல் வயலில் நீரை அதிகமாக விட்டு ஏற்றி வைத்தவுடன்
       நெல் விளையும் வரையிலும்
              (களை – புல் போன்றவைகள்) உள்ளுக்குள் அடங்கியே நிற்கும்.

கடைசியில் நீங்கள் நெல் அறுவடை செய்யும் போது நீரை வற்றச் செய்தவுடன் இந்தப் புல்கள் அனைத்தும் கல கல கல என்று வெளியில் வந்து விளைந்துவிடும்.

இதே மாதிரி உங்களுக்கு என்ன செய்கிறோம்?

ஏற்கனவே உங்கள் உடலுக்குள் பல வித்துகள் ஊழ்வினையாகப் பதிந்திருக்கின்றது.
அந்த வினைகளை எழுப்ப விடாதபடி
நெல் பயிரில் நீரை எப்படி ஏற்றி வைக்கின்றோமோ
அதே மாதிரி உங்களுக்கு வாக்குகளைக் கொடுக்கின்றோம்.
அந்தச் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்று சதா தியானிக்கின்றேன்.

இதை நீங்கள் பதிவு செய்து கொண்டபின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ணி உங்களுக்குள் கெட்டது எழும்ப விடாமல் தடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

அதற்குத் தான் திரும்பத் திரும்ப உபதேசித்து அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை வாக்குகளாகக் கொடுக்கின்றோம்.

வாக்குகளைக் கொடுப்பது மட்டுமல்ல,
       சொல்லிக் கொண்டேயிருக்கின்றோம்,
              தியானித்துக் கொண்டேயிருக்கின்றோம்
                         இந்த அலைகள் வந்து கொண்டேயிருக்கும்.
                                                                                 
ஒருவன் திட்டுவதைப் பதிவு செய்தபின் அவனைத் திருப்பித் திருப்பி எண்ணும் போது அன்றைய தினம் உங்கள் உடலெல்லாம் வலிக்கின்றது, கை கால் குடைகின்றது, கோபம் வருகிறது, கொதிப்பு வருகின்றது எல்லாம் வருகின்றது.

இதைப் போல உங்கள் உடலில் அந்த ஊழ்வினை என்ற வித்தாக இருந்து இயங்கி உடல் வலியை உண்டாக்குகின்றது, வேதனை, எரிச்சல் எல்லாம் வருகின்றது.

எரிச்சல் வரும் அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று இதைக் கூட்டிக் கொண்டே வந்தால் அப்படியே அது சிறிது சிறிதாக ஒடுங்கிப் போகும்.

நேற்றைக்கெல்லாம் தியானித்துவிட்டோம் இன்றைக்கு எதற்குச் செய்ய வேண்டும் என்றால் என்ன ஆகும்? வயிற்று வலி, உடல் வலி இருந்தது குறைந்து விட்டது. இனிமேல் மறுபடியும் எதற்குச் செய்யவேண்டும்? என்பார்கள்.

அப்படியே விட்டுவிட்டால் அது மறுபடியும் குதிரை ஏறிக் கொள்ளும். பிறகு அந்தந்த நேரத்திற்கு மட்டும் செய்தால் பத்தாது. ஏனென்றால் கெட்டதுக்குச் சக்தி ஜாஸ்தி.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்று கேட்பீர்கள்.

ஆடு புலியைப் பார்த்தவுடன்
       தன்னைக் கொன்றுவிடும்,
              தன்னைத் தின்றுவிடும் தின்றுவிடும் என்று நினைக்கின்றது.

அந்தப் புலியின் உணர்வை “எடுத்து எடுத்து” சேர்த்துக் கொள்கின்றது.

புலி ஆட்டினை அடித்தவுடன் புலியின் நினைவுடன் ஆட்டின் உயிரான்மா புலியின் உடலுக்குள் சென்றுவிடுகின்றது. அங்கே சென்று புலியின் உணர்வாக மாறுகின்றது.

இதைப் போலத்தான் தவளையைப் பாம்பு விழுங்கும்போது தவளையின் உயிரான்மா பாம்பின் உடலுக்குள் செல்கின்றது.

இன்று, இந்த மனித வாழ்க்கையில் நமக்குள் இத்தனை வேதனையான உணர்வுகள் வந்தால் நாம் எங்கே செல்வோம்?

வேதனை என்றாலே விஷம். ஆக, விஷம் கொண்ட உயிரினங்களுக்குள் தான் மறுபடி போக வேண்டியிருக்கும்.

ஆகவே, சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

இந்த மனித வாழ்க்கையில் இந்தத் தீமைகளையெல்லாம் வென்று உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றி சப்தரிஷி மண்டலங்களுடன் அங்கே இன்று நிலை கொண்டிருக்கின்றார்கள்.

நாம் அங்கே சப்தரிஷி மண்டலத்தில் சென்று சேர வேண்டும். அதுதான் நம்முடைய கடைசி எல்லை.