ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 14, 2016

மருந்து (செய்வினை) வைத்துவிட்டார்கள் என்று எண்ண வேண்டாம், உங்கள் உடல் வலியை நீங்களே போக்க முடியும்

இன்று புனல் (குழாயை) வைத்து ஊதி
மருந்து இருக்கிறது என்று சொல்லி
மருந்தையே உள்ளுக்குள் செலுத்திவிட்டு
மறுபடியும் எடுக்கின்றார்கள்.

யாராவது இவர்களிடம் போனார்கள் என்றால் உனக்குள் மருந்து இருக்கின்றது. வயிற்று வலி தீரவில்லை என்றால் உன் உடலுக்குள்ளே மருந்து இருக்கின்றது என்பார்கள்.

ஏதோ ஒரு குழாயை அவன் வாயில் போட்டு “உஸ் உஸ்” என்று ஊதிவிட்டு இதோ பாருங்கள் மருந்து இருக்கிறது என்று காண்பிப்பான். இதற்குக் காசு வாங்குவார்கள்.

ஏனென்றால், நம்பிக்கை இருக்கின்றது அல்லவா. நம்பிக்கை இருப்பதால் மருந்தை எடுத்துவிட்டால் வயிற்று வலி போய்விடும் என்று இப்படிச் செய்கிறார்கள்.

ஆனால், அதற்கப்புறமாவது வயிற்று வலி தீருகிறதா என்றால் விட்டபாடில்லை.

“நமக்கு யாரோ மருந்து வைத்துவிட்டார்கள்..,
மருந்து வைத்துவிட்டார்கள்..,
அதை எடுத்துவிட்டோம்”
என்று வழக்கத்தில் இப்படியெல்லாம் நிறையப் பேர் செய்து கொண்டுள்ளார்கள்.

நாங்கள் அந்த மருந்தைப் பார்த்தோம் என்பார்கள். நம் எண்ணத்திற்குத் தகுந்த மாதிரி எடுத்தாச்சு என்று சொல்லி முன்னாடி காண்பித்தார்கள் என்றால் “ஓகோ.., எடுத்து விட்டோம்” என்று போய்விடுகிறது.

இப்படித்தான் நம்மை ஏமாற்றிக் கொண்டுள்ளார்கள்.

இந்த எண்ணம் வித்தான பிற்பாடு விட்டுவிடுகிறார்கள். வயிற்றில் வலி என்று சொல்லித்தான் மருந்தை எடுக்கின்றார்கள். அப்புறம் வலி நிற்கிறதா..,? என்றால் இல்லை.

என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறதே
என்னை விட்டு வலி போக மாட்டேன் என்கிறதே என்று
காசையும் கொடுத்துவிட்டு இப்படிச் சொல்லிக்கொண்டு வருவார்கள்.

சாமியிடம் போனால் உடல் நன்றாகிவிடும் என்று மற்றவர்களிடம் கேள்விப்பட்டு இங்கே வருகின்றார்கள்.

அவர்கள் சொன்ன முறை ஒன்று சொல்லியிருப்பார்கள். இங்கே இவர்கள் வந்தவுடன் தன்னிடம் இருக்கின்ற குறையெல்லாம் சொல்லிவிட்டால் சாமி நிவர்த்தி பண்ணுவார் என்று தான் நினைக்கின்றார்கள்.

என் உடல் வலிக்கிறது
இடுப்பெல்லாம் வலிக்கின்றது
மேலெல்லாம் வலிக்கின்றது
வயிறெல்லாம் வலிக்கின்றது என்று சொல்கிறார்கள்.

ஒரு அம்மா இப்படித்தான் வந்தது. அந்த அம்மாவிற்கு வயிற்றுக்குள் குடலுக்குள் புண் இருந்தது. வலிக்கின்றது என்று சொல்லி அதற்காக ஒரு மாதமாக இங்கே வந்து தங்கியிருந்தது.

சரி என்று சொல்லி எண்ணத்தை மாற்றுவதற்கு இந்த மாதிரி துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்ன பின் அந்த அம்மாவிற்கு வலி குறைந்து கொண்டு வருகின்றது.

தனக்குள் அந்த விஷத்தின் தன்மை வரப்படும் போது இலேசாக வலிக்கும் அப்பொழுது அந்த நேரத்திலெல்லாம் மகரிஷிகளின் உணர்வை எடுத்து உடலுக்குள் செலுத்திக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னோம்.

வலி குறைந்து வருகின்றது. அப்படிச் சிறுகச் சிறுக, சிறுகச் சிறுக ஓரளவிற்குக் குறைத்துக் கொண்டு வந்தது.

ஒரு மாதமாக இங்கே தங்கியிருந்துவிட்டு
வயிற்று வலி குறைந்த பின்பு
அந்த அம்மா என்ன சொல்கிறது?

“அன்றைக்கு மருந்து (மருந்து எடுப்பவர்களிடம்) எடுத்துவிட்டுத்தான் இங்கே வந்தேனுங்க.., உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேனுங்க.., கூட்டமில்லாத நேரத்தில் உங்களிடத்தில் இதைச் சொல்லியிருக்கலாம் சொல்லாமல் விட்டுவிட்டேன்” என்று அந்த அம்மா இப்படிச் சொல்கிறது.

யாம் கொடுக்கும் வாக்கினால்
நீங்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள்
அது வித்தாக மாறி விதையாக மாறுகின்றது.

பின் அது தான் இழுக்கின்றது என்று நான் சொல்கிறேன்.

இங்கேயே ஒரு மாதமாக இருந்து கொண்டு இதைத் தெரிந்து கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது?

உங்களுக்கு இடுப்பு வலிக்கின்றது என்று சொன்னால் என் இடுப்பிலிருக்கும் வலி எல்லாம் நீங்க வேண்டும் என்று சொல்லிக் கேட்க வேண்டும் என் வயிற்று வலியெல்லாம் நீங்க வேண்டும் என்று கேட்க வேண்டும்.

எனக்குத் தலை வலிக்கின்றது என்று அதிலேயே நிற்கக் கூடாது. தலை வலி நீங்க வேண்டும், நான் நலமாக இருக்க வேண்டும் என்று கேட்க வேண்டும்.

இந்த மாதிரி நீங்கள் சொல்லிக் கேட்டால் நன்றாக ஆகும்.

அதை விட்டுவிட்டு என் தலை வலி என்னிடமிருந்து போகவே மாட்டேன் என்கிறது என் வயிற்று வலி என்னிடமிருந்து போகவே மாட்டேன் என்கிறது என்று இப்படிக் கேட்டால் எதைக் கொடுப்பது?

இதே மாதிரி ஒருவருக்கு உடலெல்லாம் அரிப்பு என்று வந்தார். இதைச் சாப்பிடுங்கள் சரியாகப் போகும் என்று சொல்லி வாக்கைக் கொடுக்கின்றோம். வாக்கு என்பது விதை தான்.

திட்டுபவர்களை மட்டும் நாம் ஆழமாகப் பதிவு செய்து கொண்டு “இரு.., நான் உன்னைப் பார்க்கிறேன், என்ன செய்கிறேன் பார்..,” என்று சொல்லி அதை விளைய வைக்க முடிகின்றது.

“அட.., நோய் நீங்கிவிடும்” என்று சொல்லி அதையே தான் நான் தியானிக்கின்றேன்.

எல்லோருக்கும் நோய் போகவேண்டும் நீங்கள் அனைவரும் நலமும் வளமும் பெறவேண்டும், மகிழ்ந்து வாழ வேண்டும் என்று தான் தியானிக்கின்றேன், தவமிருக்கின்றேன்.

நமது குருநாதர் காட்டிய வழியில் எத்தனையோ கஷ்டப்பட்டு அனுபவத்தால் பெற்ற அந்த ஆற்றல்மிக்க சக்தியைத்தான் வாக்காக வித்தாகக் கொடுக்கின்றோம்.
நீங்கள் பயன்படுத்தினால் அதன் பலனை அனுபவிக்கலாம்,
உண்மையை உணரலாம்.

உங்கள் சொல் பிறருடைய தீமைகளைப் போக்கக் கூடிய சக்தியாக மாறும்.