ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 14, 2016

துணுக்குத் துணுக்காக நுணுக்கமான விஷயங்களைச் சொல்கிறோம் - பயன்படுத்திக் கொள்ளுங்கள்...!

கண்ணின் இயக்கங்களைப் பற்றியும் நாம் நுகரும் உணர்வுகள் எப்படி வாழ்க்கையில் செயல்படுத்துகிறது என்ற நிலையையும் நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

ஏனென்றால், துணுக்கு துணுக்காக உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். ஒன்று சேர்த்து வரும். அதனால் யாம் உபதேசிப்பது அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்த்தீர்கள் என்றால் தெளிவாகும்.

நம் உயிரின் இயக்கம் அது உயிரே கடவுள்.

முதலில் உயிரே கடவுள் என்ற ஒரு புத்தகத்தை எழுதினேன். போகனும் முருகனும் புத்தகமும், அகஸ்தியர் அருளிய விநாயக தத்துவமும் நான் கைப்பட எழுதியது.

அதற்குப் பின்னாடி என்னால் எழுத முடியவில்லை.

பல இடங்களில் யாம் உபதேசித்த உணர்வுகளை ஒலி நாடாக்களில் பதிவாக்கியதைக் கேட்டுச் சிறிது சிறிதாக எழுத்து வடிவில் வந்து கொண்டுள்ளது.

நீங்கள் எல்லோரும் உயர வேண்டும், பொருளறியும் திறன் பெறவேண்டும், அருள் ஞானம் பெற்று அருள் ஞானிகளாக ஆக வேண்டும் என்பதை நினைத்து தவமிருந்து கொண்டே இருக்கின்றேன்.

இந்த உயிரைப் பற்றி யாம் எண்ணி
அந்த உணர்வின் தன்மை பெற்றதை
உங்களுக்கெல்லாம் அந்த அருள் பெறவேண்டும்
என்பதைத்தான் பாய்ச்சிக் கொண்டே உள்ளேன்.

அப்பொழுது அந்த மகரிஷிகளின் ஆற்றல்களைப் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணும்போது அந்த உணர்வலைகள் இந்தப் பூமி முழுவதும் படர்கின்றது.

உபதேசங்களைப் படிக்கும் போது இதே உணர்வு உங்களுக்குள் பதிவாகி உங்கள் உடலில் விளைந்து அந்த அருள் ஞானிகளாக உங்களை ஆக்கிட இது உதவும்.

அதே நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்ற ஆசையில் தான் இதை வெளிப்படுத்துகின்றோம்.

என்னுடன் இந்த அருள் உணர்வுகள் மறைந்துவிடக் கூடாது. உபதேசித்த உணர்வுகள் துணுக்கு துணுக்காக இருக்கின்றது. எல்லோரும் அதைப் பெறக்கூடிய அந்தத் தகுதி பெறவேண்டும்.

இன்றைய உலகில் அதிகமான அளவில் விஷத் தன்மைகள் படர்ந்து கொண்டுள்ளது. நீர், நிலம் காற்று என்று எல்லாவற்றிலும் விஷத் தன்மை கலந்துவிட்டது.

கடவுளின் அவதாரத்தில் வராக அவதாரம், பன்றி எப்படி சாக்கடையிலுள்ள நாற்றத்தைப் பிளக்கின்றதோ நல்ல மணத்தை நுகர்கின்றதோ நஞ்சின் தன்மையைப் பிளக்கும் அந்த ஆற்றல் நீங்கள் பெறவேண்டும்.

அதற்காக வேண்டி சதா உங்கள் உயிரை ஈசனாக மதிக்கின்றேன்.
அவன் உருவாக்கிய கோட்டை என்று உங்கள் உடலை மதிக்கின்றேன்.

அந்தக் கோட்டைக்குள் மனிதனாக உருவாக்கிய நல் உணர்வின் குணங்கள் தெய்வமாக அது உங்களுக்குள் படர்ந்து கொண்டுள்ளது என்று எண்ணுகின்றேன்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய நிலைகள் கொண்டு அந்த ஆலயத்தில் வணங்குகின்றீர்கள். உங்களுக்குள் உருவாக்கிய நல் உணர்வின் தன்மை எனக்குள் விளைய வேண்டும்.

ஒளிச்சுடராக உங்களை இயக்கிக் கொண்டு அறிவித்துக் கொண்டிருக்கும் அந்த ஒளியின் சுடராக என் உணர்வின் எண்ணங்கள் வளரவேண்டும் என்றுதான் நான் எண்ணுகின்றேன்.

அதே ஒளியின் சுடராக உங்களுக்குள்ளும் ஓங்கி வளர்ந்திட வேண்டும் என்றுதான் உங்களை நான் தியானிக்கின்றேன், தவமிருக்கின்றேன்.

ஆகவே, நீங்கள் ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து உங்களுக்குள் அதை வலுப் பெறச் செய்யுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் வலுவின் துணை கொண்டு எத்தகைய விஷத் தன்மையாக இருந்தாலும் அதைப் பிளந்துவிட்டு உங்கள் சிந்தனைகள் அழிந்திடாது இந்த வாழ்க்கையில்
அருள் ஞானத்தைப் போதிக்கும்
அருள் உணர்வை உங்களுக்குள் சேர்க்கும்
அந்தச் சக்தி நீங்கள் எல்லோரும் பெறவேண்டும்.

இந்த உடலை விட்டு எப்பொழுது சென்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைய வேண்டும், பிறவியில்லா நிலை அடைய வேண்டும், அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும்.