ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 23, 2016

என்னை நீ தான் இயக்கிக் கொண்டிருக்கின்றாய் என் நினைவில் எப்பொழுதுமே நீ தான் இருக்க வேண்டும் ஈஸ்வரா, குருதேவா

“என் இசையில் நீ இசைப்பாய், ஈஸ்வரா
என் நினைவில் நீ வருவாய், ஈஸ்வரா”

நம்மை உருவாக்கியவன் ஈசன் என்ற நிலை இருக்கும் போது ஈசனிடத்தில் நாம் எப்படி மரியாதை செலுத்த வேண்டும்?

வேதனைப்படுவதையோ,
      வெறுப்படைவதையோ,
            கோபப்படுவதையோ,
                  கோபித்துக் கொள்வதையோ
                        வேதனைப்படச் செய்வதையோ
நாம் எண்ணுவதை அந்த உணர்வின் இசையாகத்தான் நம் உயிர் இயக்கும்.

நாம் எண்ணியதை இயக்குவது உயிர் ஆனால் நாம் எதை எண்ணி இயக்க வேண்டும் என்பதுதான் பொருள்.

“என் இசையில் நீ இசைப்பாய்” என்றால் எதை நாம் இசைக்க வேண்டும்?

1.   நாம் பார்ப்போரெல்லாம் நலம் பெறவேண்டும்,
2.   நாங்கள் பார்க்கும் குடும்பமெல்லாம் நலம் பெறவேண்டும்.
3.   எங்கள் சொல்லைக் கேட்போர் அனைவரும் வாழ்க்கையில் மகிழ்ந்திட வேண்டுமென்ற
இந்த உணர்வின் இசையை நாம் இசைக்க வேண்டும்.

இதை நாம் இசைத்தோம் என்றால் அந்த உணர்வுகளை உயிர் “ஓ….ம்” - இயக்கி அதை ஜீவ அணுவாக நமக்குள் மாற்றிவிடுகின்றது.

நாம் எண்ணிய உணர்வுகள் நம்முடன்
      நமக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாக நம்மை இயக்கும்.

ஆக, மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளையப்படும் போது அந்த அணுவின் மலம் நம் உடலாக உருவாகின்றது.

நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட அந்த மலம் நம் உடலின் தன்மைகளுக்கு நம் உறுப்புக்களாக மாறுகின்றது. உடலான சிவனுக்கும் மகிழ்ச்சியாகின்றது.

வேதனைப்படுவதையோ, வேதனைப்படுத்தும் உணர்வுகளை நாம் எண்ணுவோம் என்றால் அந்த வேதனையின் உணர்வுகள் நமக்குள் அணுவாகி அந்த வேதனை உணர்ச்சியைத் தூண்டி அது தனக்குள் நுகர்ந்த உணர்வை அதனுடைய மலத்தை நம் உடலுக்குள் பாய்ச்சப்படும் போது என்ன ஆகின்றது?

வேதனைப்படுத்தும் உணர்வின் தன்மையை நாம் நுகர்ந்துவிட்டால் அதனால் உருவான அந்த அணுக்களின் மலம் நம் உறுப்புகளில் உருவாக்கிய நல்ல அணுக்களில் படும் போது அந்த அணுக்கள் செயலிழந்துவிடுகின்றது.

நல்ல அணுக்கள் செயலிழக்கும்போது
அந்த உறுப்புகளில் வேதனையைத் தோற்றுவிக்கின்றது.
அல்லது அந்த உறுப்புகள் அழுகிப் போகின்றது.
கெட்டுப் போய் விடுகின்றது.

இதைப் போன்ற நிலையிலிருந்தெல்லாம் நாம் மீண்டிட வேண்டும் என்பதற்காகத்தான்
என் இசையில் நீ இசைப்பாய்..,
என் நினைவில் நீ வருவாய்.., ஈஸ்வரா.

எப்பொழுது நான் சொன்னாலும்
நான் சொல்லக் கூடியதை நான் நினைக்கக்கூடியதை
என்னை இயக்கிக் கொண்டிருப்பது நீயாகவும்
என் நினைவில் எப்பொழுதுமே நீ இருக்கவேண்டும்
உன்னை மறவாத நிலைகள் நான் பெறவேண்டும்
ஓம் ஈஸ்வரா.. குருதேவா..,
என்பதுதான் குருநாதர் உணர்த்திய இந்த அருள் பாடலின் உண்மை நிலைகள்.