Sunday, March 1, 2015

ஞானகுருவின் பொன்மொழிகள் - QUOTES (February 2015)

28.02.2015
கண்ணன் புல்லாங்குழல் இசைத்து பசுக்களை மேய்க்கின்றான் என்று காவியங்களில் உரைத்தார்கள் ஞானிகள்.

இதன் மூலம் கண்ணன் என்பது கண் என்றும், கண் கொண்டு ஒன்றைப் பார்த்து அதனின் உணர்வுகளைக் கவர்ந்து உயிரில் மோதச் செய்து உணர்வின் நாதங்களை எழுப்பி இந்த உடலை இயக்குகின்றது என்றும் மக்களுக்கு உணர்த்தியவர்கள் ஞானிகள்.
27.02.2015
மக்களை அடிமைப்படுத்த மதங்கள் மந்திரங்களை உருவாக்கியது. இதனின் தொடர் கொண்டு இன்று உலகில் மந்திரத்தில் சிக்காத மனிதர் எவருமில்லை.
மந்திரங்களிலிருந்து மீண்டு மெய்ஞானிகளின் அருளை நாடுபவர் எவரோ அவரே மெய்ப்பொருளை அடைவர்.
26.02.2015
புவியில் விளைந்த பற்பல உணர்வுகள் ஒன்றோடொன்று மோதி கலந்து ஒன்றிணைந்து நிலத்தில் விழுந்து பதிந்து மின்னலின் தாக்குதலின் போது செடியாக விளைகின்றது என்பதை அறிந்தவர்கள் மெய்ஞானிகள்

வித்திலிருந்து செடியா? செடியிலிருந்து வித்தா? என்பதை ஆராய்ந்து கொண்டிருப்பவர்கள் விஞ்ஞானிகள்.
25.02.2015
நாம் நமது வாழ்க்கையில் நல் ஒழுக்கங்களைப் பின்பற்றி வந்தாலும் நாம் ஆசை என்ற உணர்வுக்குள் கவரப்படும் பொழுது நமது நிலைகள் மாறி அது இந்த உடலின் இச்சைக்கே நம்மை அழைத்துச் செல்லும்.
24.02.2015
இரவு தூக்கத்தின் பொழுது துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கியவாறு உறங்குவீர்களானால், அந்த உறக்கம் முழுவதுமே தியானம் செய்ததற்கு இணையாகும்.
23.02.2015
சரஸ்வதி என்பது ஞானம், மணம். சரஸ்வதியின் கையில் வீணை இருக்கும். காரணம் வீணையில் எதன் சுருதியை மீட்டுகின்றோமோ அதனின் நாதம் வீணையிலிருந்து வெளிப்படும்.
இது போன்று நமது ஞானமாக எதனின் மணத்தை இணைத்துக் கொண்டோமோ, அதனின் உணர்வின் நாதங்கள் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
22.02.2015
கோள்கள் நட்சத்திரங்கள் சூரியன் போன்றவைகள் தங்களுடைய பயனப்பாதையில் உள்ள சத்தினை எடுத்து தங்களை வளர்த்துக் கொள்ளும் நிலை.
மரம் செடி கொடிகளோ தான் இருந்த இடத்திலேயே இருந்து தன் உணவை எடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்ளும் நிலை.
மற்ற உயிரினங்களோ தேடி அலைந்து திரிந்து தன் உணவை எடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்ளும் நிலை.
மனிதனோ தனக்குத் தேவையானதை விளையச் செய்து பயன்படுத்திக் கொள்ளும் நிலை.
மகரிஷிகளோ அனைத்தையும் வென்ற நிலை, எதையும் சிருஷ்டிக்கும் நிலை.
21.02.2015
ஆலயங்களும் திருவிழாக்களும் மனிதர் தம்மைத் தாம் அறிந்து, தம் உணர்வை நல் உணர்வாக வளர்க்கும் நிலைக்கு ஞானிகளால் உருவாக்கப்பட்ட நிலைகள்.
20.02.2015
ஆண் என்றால் ஆதிக்கத் தன்மை கொண்டது. பெண் என்றால் அன்பு கொண்டு அரவணைத்து இயக்கும் தன்மை கொண்டது.
இதில் தனித்து இயங்கும் நிலையென்றால் “முனி” ஆகத்தான் அலைய முடியும்.
கணவன் மனைவி இருவரும் இல்லறம் நல்லறமாக இரு மனமும் ஒரு மனமாக ஒன்றுபட்டு வாழவேண்டும்.
19.02.2015
நல்ல எண்ணம் கொண்டு பிறரைக் காக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது நமது உடலில் நாம் எண்ணிய உணர்வை உயிர் காக்கின்றது.

இந்த உண்மையைத்தான் திருமூலரும், நபிகள் நாயகமும், இயேசுவும், புத்தரும், காந்தியும், இவ்வையகத்திற்கு எடுத்துரைத்தார்கள்.
18.02.2015
உலக மக்கள் அனைவரும் அமைதியும் இன்பமும் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்குவதே தவம்.

ஒவ்வொரு நொடியும் தீமைகள் அணுகா வண்ணம் மகரிஷிகளின் அருள் சக்தியை நம்முள் சேர்க்கும் நிலையாக விழித்திரு.
17.02.2015
உடல் ரிக்
உடலிலிருந்து வெளிப்படும் மணம் சாம
உணர்வின் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கலக்கப்படும்போது அதர்வணம்
அப்படி ஒன்றுடன் ஒன்று கலந்து இணைந்து ஒரு வித்தாகும் பொழுது யஜூர்.
16.02.2015
எதனின் உணர்வை நம்முள் பதிவு செய்துள்ளோமோ அதனின் மீது பற்று கொண்டு உணர்வின் நினைவலைகளை எண்ணும் போது அந்த உணர்வின் தன்மை நமது ஆன்மாவாக மாறுகின்றது.

அதனின் உணர்வுகள் தனது இரைகளைத் தேடி தனது உணர்ச்சிகளைக் கிளர்ச்சியடையச் செய்கின்றது.
15.02.2015
சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் இவை இணைந்து தனக்குள் சேர்த்துக் கொண்ட மணம் உணர்வு என்ற நிலையில் ஐந்து புலனறிவு கொண்டதாக இயங்குகின்றது என்பதற்கு பஞ்ச பாண்டவர் என்ற காரணப் பெயரிட்டார்கள் ஞானிகள்.
14.02.2015
ஒரு நோயாளி தன் நோய் தீர வேண்டுமென்றால் மருத்துவர் தரும் மருந்தைக் கட்டாயமாகச் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

இதே போன்று நம்முள் அறியாது சேர்ந்த நஞ்சான உணர்வுகளை நீக்க வேண்டுமென்றால் நமக்குள் கட்டாயப்படுத்தித்தான் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெருகச் செய்யவேண்டும்.
13.02.2015
உயிர் ஈஸ்வரலோகம்
நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்தபின் இந்திரலோகம்
உடலின் உணர்வின் தன்மைகள் சிவலோகம்
நுகர்ந்த உணர்வுகள் கருவாகி அணுவானால் பிரம்மலோகம்
வேதனையின் உணர்வுகள் பெருகினால் நரகலோகம்
அருள் ஒளி என்ற உணர்வுகள் பெருகும்பொழுது சொர்க்கலோகம்
12.02.2015
ஒரு புழு குளவியால் கொட்டப்படுவதால், குளவியின் உணர்வுகள் புழுவினுள் பாயப்பட்டு புழு குளவியின் ரூபம் பெறுகின்றது.

இது போன்று சப்தரிஷிகளின் அருள் உணர்வுகள் நம்முள் பாய்ந்து நமக்குள் பெருகும் பொழுது நாம் சப்தரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையும் தகுதி பெறுகின்றோம்.
11.02.2015
நாம் பார்க்க வேண்டும் என்று ஏங்கியிருந்த நீண்ட நெடுநாளைய நண்பர் ஒருவரை பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்க நேரிடும் பொழுது அருகிலிருக்கும் அசுத்தத்தைக் கவனிக்க மறந்து நண்பருடன் பல சம்பவங்களைப் பற்றிப் பேசி மகிழ்கின்றோம்.
வெகுநேரப் பேச்சுக்குப்பின், பேச்சில் சுவராஸ்யம் குறையும்போது அருகிலிருக்கும் அசுத்தத்தைக் கவனிக்க நேர்ந்தால் இவ்வளவு நேரம் இங்கேயா நின்று பேசிக் கொண்டிருந்தோம் என்று எண்ணத் தோன்றும்.

இது போன்றே, மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எண்ணி ஏங்கி நம்முள் சேர்க்கும்பொழுது நம்முள் உள்ள நஞ்சுகள் நீங்கி நமக்குள் எப்பொழுதும் மகிழ்ச்சியின் அணுக்கள் பெருகிக் கொண்டிருக்கும்
10.02.2015
உயிரினப் பரிணாம வாழ்க்கையானது ஞானிகள் நமக்கு உருவாக்கிக் கொடுத்த பரமபத விளையாட்டு போன்றது.
பரமபத விளையாட்டில் ஏணிகளும் பாம்புகளும் விளையாட்டை நிர்ணயிப்பது போன்று நமது பரிணாம வாழ்க்கையில் நஞ்சான உணர்வுகளை நமக்குள் இணைக்கும் பொழுது இதனின் உணர்வுகள் நம்மைக் கீழான பிறவிக்கு அழைத்துச் செல்கின்றது.
அருள்ஞானிகளின் அருள் உணர்வை நம்முள் இணைக்கும் பொழுது பிறவா நிலை எனும் பெருவீடு பெருநிலையைப் பெறச் செய்கின்றது.
09.02.2015
உடலுக்கு ஊட்டம் தருவது பாதாம் பருப்பு கலந்த பால். ஆனால், அந்தப் பாலில் ஒரு துளி விஷத்தைக் கலந்தால், பாதாம் பருப்பு கலந்த பால் தன் சத்தினை இழந்து முழுவதும் விஷமாகின்றது. ஆளையே கொல்லும் தன்மை பெறுகின்றது.
இதைப் போன்றுதான் நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல உணர்வுகளில் நஞ்சான உணர்வு கலந்தால் நல்ல உணர்வின் அணுக்கள் செயலிழந்து நம்மை வீழ்த்துகின்றது.

ஆகவே, அனுதினமும் அருள்மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நம்முள் இணைத்து நம்மையறியாது வரும் நஞ்சினை நீக்கி நம்மை நாம் காத்துக் கொள்ளல் வேண்டும்.
07.02.2015
துன்புற்றோரின் உணர்வுகளை நாம் பரிவுடன் கேட்டறிய நேரும்போது நம்முள்ளும் வேதனையின் உணர்வுகள் பதிந்து நம்முள் வேதனையின் அணுக்கள் பெருகுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அவர்கள் (துன்புற்றோர்) பெறவேண்டும் என்று எண்ணுகின்றபொழுது நாமும் அவரும் தீமைகளிலிருந்து விடுபடும் தன்மை பெறுகின்றோம். 
06.02.2015
உடலின் இச்சை கொண்டு விளைந்த உணர்வுகள் சிவ தனுசு.
நமது உயிரில் துருவ நட்சத்திரத்தின் அருளுணர்வை இணைத்து தீமைகளை அகற்றி ஒளியாக இருக்கும் நமது உயிரை என்றுமே ஒளியாக வைத்திருக்கும் நிலையே விஷ்ணு தனுசு.
05.02.2015
ஒரு வித்து இருக்கிறதென்றால் அதனின் திரையை (ஓடு) நீக்கினோம் என்றால் வித்தின் உள்ளே இருக்கும் சத்தை நாம் காண முடிகின்றது.
ஒரு வித்து காற்றிலிருக்கும் தன் உணர்வைக் கவர்ந்து திரையைப் பிளந்து செடியாக விளைந்து மரமாக வளர்ந்து, நல்ல சுவை தரும் கனிகளைத் தருகின்றது.
இதுபோன்று நாமும் மெய்ஞானிகளின் அருள் உணர்வுகளை நம்முள் கவர்ந்து, இத்திரையாக, சிறு திரையாக இருந்து நம்மை மூடியிருக்கும் அறியாமை என்னும் இருளை நீக்கி, நம்முள் பேரொளியின் உணர்வை இணைத்து இனிமை தரும் கனியைப் போன்று பேரின்ப நிலை தரும் அருள் உணர்வைத் தம்முள் பெருக்கும் நந்நாள்தான் தமிழ் புத்தாண்டு.
04.02.2015
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள்.
மெய்ஞானிகளின் அருள் உணர்வுகளை நம்முள் இணைத்து நமக்குள் இருக்கும் தீமைகளை நீக்கி குழந்தைகளைப் போன்ற பரிசுத்த மனதை நாம் பெறுவோம்.
03.02.2015
ஒரு யானை தன் உடல் வலுவால் பல டன் எடையுள்ள பொருள்களை நகர்த்துகின்றது. மனிதன் தன் எண்ண வலுவால் பல டன் எடையுள்ள செயற்கைக்கோள் போன்ற பொருளை விண்ணுக்கு அனுப்புகின்றான்.

இதுபோன்று, நாம் நமது எண்ண வலுவால் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் இணைத்து விண்ணின் ஆற்றலை நம்முள் பெறமுடியும்.
02.02.2015
விஞ்ஞானிகள் இரு உயிரினங்களின் அணு செல்களை எடுத்து இணைத்து, ஒரு புதுவிதமான உயிரினத்தை உருவாக்குவது போன்று நம்முள் அருள்ஞானிகளின் அருள் உணர்வுகளை இணைத்து அருள் ஒளியினை உருவாக்க முடியும்.
01.02.2015
சித்திரையாக சிறு திரையாக இருந்து நம்மில் மெய்ப்பொருளைக் காணவிடாது தடைப்படுத்தும் நஞ்சான உணர்வுகளை துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அருள் உணர்வுகளின் துணையுடன் நீக்குதல் வேண்டும்.