ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 15, 2015

நாம் எடுக்க வேண்டிய சக்தி எது? - ஞானகுரு

எத்தகைய பக்தியினுடைய நிலைகள் இருந்து நாம் இறந்தாலும், அதே வேதனை கொண்டு பக்தியினுடன் ஒருவர் இருந்தார் என்றால் அவர்கள் ஈர்ப்புக்குள் சென்று நம் உயிராத்மா அந்த உடலுக்குள் சென்றுவிடுகிறது.

அங்கே சென்றபின், பக்தியின் நிலைகள் கொண்டு அருளாடி அந்த உடலுக்குள் சின்னாபின்னமாகி எப்படி வியாதிகள் நமக்குள் வந்ததோ, அதைப் போன்றே சென்ற உடலையும் நோயாக்கி வீழ்த்துகின்றது.

அதே சமயத்தில், வித்தைகள் பல செய்த உயிராத்மாக்களின் நிலை என்ன?

சாதாரண உயிராத்மாக்களும் அவர்கள் எடுத்துக்கொண்ட குணங்களுக்குத் தக்க, பழி தீர்க்கும் உணர்வுடன் நாம் இருப்போமேயானால் இந்த உடலைவிட்டுச் சென்றபின், வித்தைகள் கற்றுக்கொண்டவர்கள்
நான்தான் எல்லாவற்றிற்கும் தவவலிமை கொண்டவன்,
அனைத்தையும் அறிந்துணர்ந்தவன் என்று
பிறருடைய எண்ணங்களை அறிந்துணர்ந்து,
தன் மந்திரத்தால் அறிந்துணர்ந்து
இப்படி எல்லா சக்திகளும் அறிந்துணர்ந்தவன் எனும் நிலையில்
தனக்குள் உயிராத்மாவை ஒன்றாகச் சேர்த்து
உயிரின்தன்மை இந்த உடலைவிட்டுச் சென்றபின்,
கூடுவிட்டு கூடு பாயும் வித்தைகள் பெற்றவர்கள்
அன்று அரசர் காலத்தில் நிறைய உண்டு.

இதையெல்லாம் அறிந்தபின், தான் இன்னொரு உடலுக்குள் புகுந்து அந்த உடலுக்குள் நின்று பலருடைய சக்திகள் ஆற்றல்களைப் பெறமுடியும் என்று இருந்தவர்கள் பலர்,

அந்த அளவுக்குச் சென்றாலும், ஒரு உடலுக்குள் ஊடுருவி பாம்பு உடலிலேயோ, மற்ற மனிதனுடைய உடலிலோ சென்றாலும் அந்த உடலிலே வாழப்படும்போது அந்த சந்தர்ப்பத்திற்கொப்ப
கடினமான எண்ணங்கள் வந்துவிட்டால் அதைச் சுவாசித்தபின்
கூடுவிட்டு கூடுபாயும் நிலைகள் மாறிவிடுகிறது.

அதாவது, ஒரு சாதாரண மனிதன் தான் வளர்த்துக்கொண்ட நிலைகளுக்கொப்ப ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு, அதே நிலைகளில் ஏங்கியிருந்தால் இங்கே செல்லும்.

இவ்வாறு முதலிலே கூடுவிட்டு கூடு பாய்ந்துவிடலாம். ஆனால் அந்த உடலிலிருந்து அவன் எடுத்துக்கொண்ட அசுத்தத்தினுடைய நிலைகள் மறுபடி கூடுபாயும் சக்தியை இழந்துவிடுகின்றது.

அடுத்து மறு கூட்டினுடைய நிலைகள் கொண்டு எந்த உடலைப் பெறுகின்றதோ, அந்த உடலின் உணர்வின் சக்தி கலக்கப்பட்டு அந்த உணர்வின் ஆத்மா தேய்ந்து கட்டெறும்பாகத்தான் ஆகின்றது.

அப்படித் தேய்ந்ததுதான் பல வித்தைகளைச் செய்கின்றது. இன்று நாம் பார்க்கின்றோம். பலர் அருளாடுகின்றனர்; பல சித்தர்கள் அவர் உடலிலிருந்து செயல்படுகின்றார்கள் என்று சொல்வதெல்லாம் இப்படித்தான்.

அதன்வழி அந்த உடலிலிருந்து செயல்பட்டாலும், இந்த உடலுக்கொப்ப இந்த ஆசைகள் தூண்டப்பட்டு இன்றைய வாழ்க்கைக்குக் காலத்தை வேண்டுமென்றால் தள்ளலாம்.

ஆனால் அதேசமயம், அறிதல் என்ற நிலைகளில் முன்கூட்டி நோயும் மற்ற நோய்களையும் வருவோரிடம் அளந்தறிந்து அவர்கள் துன்பத்தை அறிந்துணர்ந்து அவைகளைச் சுவாசித்துச் சொல்வார்களேயானால்
அவர்களுடைய உணர்வுகள் அனைத்தும் அவர் உடலிலே சேர்ந்து,
உணர்வின் சத்து அவர் உடலுக்குள் சேர்கின்றது.

ஆனால் பலருடைய துன்பத்தின் நிலைகள் அவர் உடலிலே சேர்க்கப்பட்டு, நஞ்சான நிலைகள் கொண்டு நஞ்சைப்பெறும் உடலின் அமைப்பைத்தான், நஞ்சை உடலாக்கிக் கொண்ட உடலின் சரீர அமைப்பைத்தான் பெறமுடியும்.

ஆனால், மந்திரத்தாலே, மக்கள் மத்தியிலே, நான் அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேனென்று இருந்தாலும், இன்று அந்தத் தாய் செய்கின்றது இந்தத் தாய் செய்கின்றது என்று சொல்வார்கள்.

அந்தத் தாய் என்பது எது?
எடுத்துக்கொண்ட உணர்வின் சக்தியைத்தான் தாய் என்கின்றார்கள்.

அந்த சக்தியின் தொடர் வரிசையின் நிலைகள், ஒரு மனிதனுக்குள் எந்த நிலைகளை வளர்த்துக் கொள்கின்றாரோ அந்த சக்தியின் செயல்கள் தான் செயல்படுகின்றன.

ஆக இதைப்போன்ற நிலைகள் நாம் கண்டுணர்ந்த பின்னும் நாம் எடுக்க வேண்டிய சக்தி எது? என்ற நிலையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாம் உடலின் இச்சை கொண்டு ஒரு உடலுக்குள் விளைந்த உணர்வின் சக்தியை எடுக்கக்கூடாது.

வாழ்ந்த காலத்தில் உடல் பெறும் உணர்வுகளை மாற்றி உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி, விண்ணின் ஆற்றலைப் பெற்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்தியையே நாம் எடுக்க வேண்டும்.

அதை நாம் வளர்த்தால் அந்த மகரிஷிகள் சென்ற எல்லையை துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழலும் சப்தரிஷி மண்டல எல்லையை அடையலாம். அழியா ஒளி சரீரம் பெறலாம்.

இதுதான் நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி.