ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 27, 2015

தீமையிலிருந்து விடுபடும் சக்தியை எடுப்பது ஒரு கஷ்டமா...? - ஆதிசங்கரர்

உங்களுக்குத் தோஷம் பிடித்திருக்கிறது என்று சொன்னால்;
தோஷம் நீங்கவேண்டும் என்றால்
நீங்கள் 48 நாட்கள் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
மிளகாயைச் சாப்பிடக் கூடாது
இப்படியேதான் இருக்க வேண்டும் என்று சொன்னால்
நீங்கள் 48 நாட்களுக்கு வேறு வழியில்லாமல் இருப்பீர்கள்.

உங்களுக்காக வேண்டி யாகம் செய்கிறோம் அதற்காக வேண்டி ரூ.1000/- தட்சணை கொடுக்க வேண்டும்.

அப்படிச் செய்துவிட்டு அதற்கு 2 பட்டுச்சேலை அது, இது என்றும் இன்னும் நூறு பேருக்குத் தர்மம் செய்ய வேண்டும். அப்போதுதான் உங்கள் பாவமெல்லாம் போகும் என்று சொல்வார்கள்

இது அனைத்தும் துவைதவாதிகள் செய்த வேலை.

அன்று அத்வைதவாதியான ஆதிசங்கரர் சொன்ன தத்துவமோ நீ எதை நினைக்கின்றாயோ அதை எந்தெந்த உணர்வுடன் எடுக்க வேண்டும் என்ற தத்துவத்தைச் சொன்னார்.

தியானம் செய்பவர்கள் ஒவ்வொரு நிமிடமும் ஆத்மசுத்தி செய்துவிட்டு, மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

யாராவது ஒருவர் கஷ்டமென்று சொன்னாலும்,
குழந்தைகள் சொன்னபடி கேட்கவில்லை என்றாலும்
உடனே இருந்த இடத்தில் இருந்து நீங்கள் ஆத்மசுத்தி செய்யுங்கள்.

உங்கள் வாக்கு கெட்டவர்களிடமிருந்து தப்பவும் செய்கின்றது. இந்த உணர்வை நீங்கள் சேர்த்துப் பழகுங்கள்.

இது ஒரு கஷ்டமா?

உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குள் இருக்கும் ஆற்றல் மிக மிக சக்தி வாய்ந்தது.

உங்கள் உயிரை ஈசனாக மதித்து
உங்களுக்குள் தீமையான உணர்வு உட்புகாது,
அவைகளைத் தடுக்கவேண்டுமென்ற எண்ணத்தை
எப்போது நீங்கள் முன்னிலைப் படுத்துகின்றீர்களோ
நிச்சயம் நல் ஒளியின் தன்மையை நீங்கள் சுவாசிக்க முடிகின்றது.
மெய்ஞானியின் அருளையும் நீங்கள் பெற முடிகின்றது.

ஆகவே, இதைப்போன்று அந்த நல்ல உணர்வின் தன்மைகளை உங்களுக்குள் பாதுகாப்பாகக் கொண்டு வருவதற்குத்தான் யாம் திரும்பத் திரும்ப அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பதிவு செய்கின்றோம்.