ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 16, 2015

தியானம் செய்யும் போது நம் எண்ணத்தை எந்த இடத்தில் வைக்கவேண்டும்...?

1. நம் உயிரான ஈசனிடம் எப்படி எதைக் கேட்க வேண்டும்?
ஞானிகள் காட்டிய முறைப்படி, யாரும் தெய்வத்தை வணங்குவதில்லை. அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும். அந்த தெய்வமாக ஆக வேண்டும் என்று யாருமே எண்ணுவதில்லை.

ஞானிகள், சாதாரண மக்களுக்குக் கிடைக்க வேண்டுமென்றுதான், இதையெல்லாம் சொன்னார்கள். அரசன் ஒரு வகையில் மதங்களை உருவாக்கி, மதத்திற்கு ஒரு தெய்வம், மதத்திற்கு ஒரு கடவுள் என்று உருவாக்கினாலும், ஞானிகள் தன்னை உணரந்தவர்கள்.

தன் இன மக்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று காவியங்களைப் படைத்துக் கொடுத்திருக்கின்றார்கள். வழிபடும் முறையும் சொல்கிறார்கள். அதை, யாரும் கோவிலில் போய் அப்படிச் செய்வதில்லை.

நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி, அவர் எமக்குக் கொடுத்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது, தீமையை அகற்றிடும், இந்த மூலத்தைப் பதிவு செய்திடும் பொழுது, பிறர்படும் தீமையான உணர்வுகளைக் கண்டுணர்ந்தாலும், இந்த உணர்வுகள் முன்னனியில் வந்து, நமக்குள் அவர்களுடைய உணர்வுகளைச் செயலாக்க விடாது.

அப்படி, தீமைகளைத் தடைப்படுத்த வேண்டும். அதற்கு வேண்டிய சக்தி நமக்கு இருந்தால் தான், இதைச் செயல்படுத்த முடியும். உங்களுக்கு இந்த சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான், இதையே உருவாக்குவது.

ஒருவருக்கு மேல்வலி வந்துவிட்டதென்றால்,
“அம்மம்மா…” என்றால்,
இந்த உணர்வு, அதற்கு சாப்பாடு கொடுத்துவிடும். சந்தோஷமான வார்த்தையைச் சொல்லி, நிவர்த்தி பண்ணலாம் என்றால், முடியாது. அது எதிரியாகிவிடுகின்றது.

இந்த எதிரியை வென்றவர்கள் யார்? இந்தச் சந்தோஷத்தை ஊட்டியவர்கள் யார்? அந்த மகரிஷிகள்தான். ஆகவே, அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நாம் எண்ணும் பொழுது, நமக்குள் அந்த ஆகாரத்தைக் கொடுத்தவுடனே, வலுப் பெறச் செய்கின்றது.

நம் உயிரான ஈசனிடம் எதைக் கேட்க வேண்டும்? உங்களுக்குள் பதிவு செய்ததை, நினைவிற்குக் கொண்டுவரவேண்டும்.

அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தியை, நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்ற நினைவை, புருவ மத்தியில் செலுத்திப் பழக வேண்டும்.
2. அகக் கண், புறக் கண்
பிறர் செய்யும் தீமைகளை, நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது,
அது நமது ஆன்மாவாக மாறி,
அதிலிருந்து சுவாசித்து, இந்த உணர்வுகளை
உயிர் அகக் கண்ணாக இருந்து நமக்கு உணர்த்துகின்றது.
ஆக, உயிர் “அகக் கண்ணாக” இருந்து பதிவு செய்து, மீண்டும் நினைவிற்குக் கொடுக்கின்றது.

ஆனால், அதே சமயம், நம் கண்கள் “புறக் கண்”
அதைப் படமெடுத்து, ஆன்மாவாகி,
உயிருடன் ஒன்றும் பொழுதுதான்,
அந்த உணர்வை அகக்கண்ணான கண் காட்டுகின்றது.

ஆனால் அதே சமயம், அந்த துருவ மகரிஷியின் உணர்வை நமக்குள் பதிவு செய்து, அதை மீண்டும் நினைவு கொண்டு, உயிரான அகக் கண்ணுடன் இணைக்கப்படும் பொழுது, இந்த ஆன்மாவிலிருந்து வரக்கூடியதைத் தடைப்படுத்துகின்றது.

உதாரணமாக, வேதனை அதிகமாக இருக்கின்றது என்றால், “ஈஸ்வரா” என்று நம் உயிரை வேண்டி, அந்த துருவ மகரிஷியின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று நினைவை அங்கே செலுத்தும் பொழுது, அந்த உணர்வைச் சிறிது நேரம் ஏங்கிச் சுவாசித்து விட்டால், இந்த வேதனயோ, மூச்சுத் திணறலோ, மற்ற வலியினாலும், அதை எண்ணும் பொழுது, அதைக் கூட்டும் பொழுது, இது குறையும்.

முதலில் நம்மை எடுக்கவிடாது. துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, எங்கள் ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் எனறு உயர்ந்த சக்தியின் எண்ண அலைகளைப் பரப்பும் பொழுது, மற்றவைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.
3. விஷ்ணு வரம் கொடுக்கின்றான், பிரம்மா உருவாக்குகின்றான், சிவனோ அரவணைக்கின்றான்
இதற்குமுன் இது தெரியாது. இது பதிவாகியிருக்கின்றது. அதற்குச் சாப்பாடு வேண்டும். உணர்ச்சிகளைத் தூண்டும். அதை நுகர்ந்து, ஆன்மாவாக மாற்றும்.
நமது உயிர், ஆன்மாவில் இருப்பதை எடுத்து,
எது எதற்கு என்னென்ன வேண்டுதோ,
அதற்குச் சாப்பாடாகக் கொடுக்கும்.
உயிருடைய கடமை அது.
இதுதான் “விஷ்ணு” - வரம் கொடுக்கின்றான், “பிரம்மா” -  உருவாக்குகின்றான் என்பது.

உயிரில் இருக்கும் காந்தம் இழுத்து, விஷ்ணு என்ற உயிரின் வெப்பத்தோடு சேர்க்கப்படும் பொழுது, அது ஒரு புது அணுவாக உருவாகின்றது. இதுதான் விஷ்ணுவின் மகன் பிரம்மா.

இந்த அணுவின் தன்மை உறைந்துவிட்டால், அந்த உணர்வின் மலம் நம் உடலாகின்றது. ஆக, சக்தியாக இருக்கும் நிலைகள், கண்ணுக்குப் புலப்படுவதில்லை. அணுவின் தன்மை அடைந்தபின், அந்த அணுவின் மலத்தின் தன்மை உறைந்து, உடலாக சிவமாகின்றது.

மகிழ்ச்சியின் தன்மை வரும் பொழுது, மகிழ்ச்சியின் உடலாக மேனி அழகாக இருக்கின்ரது. வேதனையின் தன்மை அணுவின் தன்மையாகும் பொழுது, உடல் குறுகுகின்றது. இதைத்தான்
விஷ்ணு வரம் கொடுக்கின்றான்,
பிரம்மா உருவாக்குகின்றான்,
சிவனோ அரவணைக்கின்றான் என்று, மெய்ஞானிகளால் காட்டப்பட்டது.