ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 5, 2015

நாரதனை நாம் நட்பாக்கிக் கொண்டால், தீமைகளிலிருந்து நம்மை விடுபடச் செய்வான்

1. பிறரைக் கெடுக்கும் உணர்வை நாம் எடுத்தால், அது நம்மைத் தான் கெடுக்கும்

உதாரணமாக, ஒருவர் நமக்கு இடைஞ்சல் செய்தால்,
அவருடைய உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.
அவர் செய்யும் இடைஞ்சல்களிலிருந்து
நம்மை மீட்டுக்கொள்ளும் நிலையாக
அவருக்கு நாம் தொல்லைகள் செய்ய ஆரம்பிக்கிறோம்.

அவருக்கு நாம் தொல்லைகள் செய்யும்போது, “அவர் இனி நமது வழியில் வரமாட்டார், நமக்குத் தொல்லைகள் தரமாட்டார்”, என்று எண்ணித்தான் செய்கின்றோம்.

ஆனால், இப்படி மற்றவருக்கு தீமைகள் செய்து அவரைக் கெடுக்க வேண்டும் என்ற உணர்வுகளை எடுக்கும் பொழுது, அதனின் உணர்ச்சிகள் நம்மையும் கெடுக்கும் நிலைக்குப் போகின்றது.

ஆகவே, பிறரைக் கெடுக்கும் நிலைக்குப் போகும் பொழுது, நம்மை நாம் கெடுத்துக் கொள்ளும் நிலைதான் வருகின்றதே தவிர, நம்மை நாம் காக்கும் நிலை இல்லை. இதுதான் சிவதனுசு’.

ஆகவே, நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மைத் தாக்கும் நிலை வருகின்றது. நம்முள் இருள் சூழும் நிலையே வருகின்றது. இதிலிருந்து நாம் மீள வேண்டுமல்லவா?
2. வாலியை வெளியே வராதபடி அடைக்க வேண்டும்
இதற்குத்தான் அன்று சாஸ்திரங்கள் கூறியது, துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நாம் எடுத்து, நமது உடலுக்குள் செலுத்தி, அதனின் உணர்ச்சிகளைத் தூண்டப்படும் பொழுது இது விஷ்ணுதனுசு”.

உயிரால் விஷ்ணுதனுசு என்ற உணர்வுகள் ஊட்டப்படும் பொழுது, இது விஷத்தின் தன்மையை முறிக்கின்றது.

இதை இராமாயணத்தில், “இராமன் வாலியை மறைந்திருந்து தாக்கினான்” என்று ரைக்கப்பட்டிருக்கும். வாலி யார் என்றால், சூரியனின் பிள்ளை.

உதாராணமாக, நமக்கு வியாபாரம் சரியாக நடைபெறவில்லை என்றால், நமக்குள் வேதனையாகின்றது. வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் வந்தபின் வாலியாகின்றது. வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் வந்தபின் நாம் நம்மிடத்திலுள்ள நல்ல குணங்களைச் செயலாக்க முடிகின்றதா? இல்லை.

ஒருவர், தான் வேதனையின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது, அதனை சூரியனின் காந்தப்புலனறிவுகள் கவர்ந்து வைத்துக் கொள்கின்றன. ஆகவேதான், வாலியை சூரியனின் பிள்ளை என்கிறோம்.

ஆகவே, அவருடைய வேதனைப்படும் உணர்வுகளை, நாம் உற்றுப்பார்த்து நுகரப்படும் பொழுது, அந்த வேதனையின் உணர்வுகள் நமக்குள் வரும்போது, வாலியாகின்றது.

வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் சென்று விட்டால், இரண்யன் ஆகின்றது. அது நம்மிடத்திலுள்ள நல்ல குணங்களைக் கொல்கின்றது என்று காண்பிக்கின்றனர்.

இராமாயணத்தில், குகைக்குள் இருக்கும் வாலி வெளியே வராதபடி, மேலே இருக்கும் பாறையைக் கீழே தள்ளி, மூடிவிடுகின்றனர். இப்பொழுது வாலி வெளியில் வரமுடியவில்லை என்று எடுத்துரைக்கின்றனர்.

இதைப்போன்றுதான், நாம் என்ன செய்ய வேண்டும், நாம் வேதனையின் உணர்வைப் பார்க்கும் பொழுது, ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி, நமது கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்த வேண்டும்.
அப்படிச் செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாங்கள் பெறவேண்டும் என்ற உணர்வின் தன்மையை எடுத்து, அதுங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், என்ற இவ்வுணர்வின் தன்மையை உடல் முழுவதும் படரவிட வேண்டும்.

அப்படிப் படரவிடும் பொழுது, தீமை என்ற வாலியை இங்கே அடைத்து விடுகின்றோம். உள்புகாது தடுத்து விடுகிறோம் என்ற நிலையைத்தான் இராமாயண காவியத்தில் தெளிவுப்படுத்தினார்கள்.
3. இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்
அதே சமயம், வாலி எவரைப் பார்த்தாலும் சம வலுவைப் பெறுவார் என்றும், ஆனால் சுக்ரீவன் எல்லோருக்கும் உதவி செய்யும் பண்பு கொண்டவர் என்றும் காவியம் கூறுகின்றது.

ஒரு நோயாளியைப் பார்க்கப்படும் பொழுது, அவர் மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும், அவர் உடல் நலம் பெற வேண்டும், என்று  இரண்டு உணர்வுகளையும் கலந்து சொல்லாக வெளிப்படுத்தும் பொழுது, இதை சூரியனின்  காந்தப் புலனறிவுகள் கவர்ந்து வைத்துக் கொள்ளும்.

எதன் உணர்வைக் கவர்ந்து, அவர் நலமாக வேண்டும் என்று சொல்லாகச் சொல்கின்றோமோ, “இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்”, இந்த ணர்வின் தன்மை, “வாயுப்புத்திரன்”.

அந்தச் சொல்லின் தன்மை நோயாளியாக இருப்பவர் செவிகளில் பட்டு, நீ மகரிஷிகளின் அருள்சக்தியால் நலமாவாய்என்று உணர்ச்சிகளைக் கூட்டப்படும் போது, அவருடைய கண்கள் இதைக் கவர்ந்து, நுகரச்செய்து, உயிரில் பட்டபின், தீமை என்ற நிலைகளிலிருந்து விடுபடும் சிந்தனையை அங்கே கூட்டுகின்றது.

அருள் உணர்வுகள் உடலுக்குள் சென்றபின்,
அங்கே தீமையிலிருந்து விடுபடும் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
அப்படித் தூண்டினால்,
அதுதான் இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்.
ஆகவே, அவன் ஒரு மந்திரி.

ஆனால், வேதனையின் உணர்வுகளைச் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது, அதைக் கேட்போர் உணர்வுகளில் வாலியாகி விடுகின்றது. ஆக இராமாயணமோ, மற்ற காவியங்களோ எதுவும் குறையில்லை. இவைகள் நம்மைத் தெளிவுபடுத்தவே உருவாயின.
4. நாரதனை நட்பாக்கினால், தீமைகளிலிருந்து நம்மை விடுபடச் செய்வான்
ரிஷியின் மகன் நாரதன், நாராயணனின் அபிமானப்புத்திரன் நாரதன். அகஸ்தியர் தம் வாழ்நாளில் அணுவின் இயக்கத்தை அறிந்தார். துருவத்தை நுகர்ந்தார். துருவத்தின் ஆற்றலை தம்முள் பெருக்கினார். துருவ மகரிஷியானார்.

கணவனும், மனைவியும் இரு மனமும் ஒரு மனமாக ஒன்றிணைந்து, இருளை வென்று உணர்வின் தன்மையினை ஒளியாக்கினார்கள், துருவநட்சத்திரமாக ஆனார்கள். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும், உணர்வின் ஒளியலைகளைத் தான் நாரதன் என்றார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வலைகளை, சூரியனின் காந்தப்புலனறிவுகள்  கவர்ந்து, இப்புவியில் படரச்செய்கின்றது. அது மட்டுமல்லாமல், சூரியனின் காந்தப் புலனறிவுகள் செடிகள் மற்ற நிலைகளிலிருந்து வெளிப்படும் உணர்வுகளைக் கவர்ந்து, மற்றொன்றிற்கு உணவாக எடுத்துச் சென்று, மற்றொன்றை வளர்த்து நன்மை செய்கின்றது. இது யார்? சுக்ரீவன். சுக்ரீவனும் சூரியனின் பிள்ளைதான்.

ஆக, துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை சூரியனின் காந்தப்புலனறிவுகள் கவர்ந்து வரப்படும் பொழுது,
இதை நாம் நுகர்ந்தால், ரிஷியின் மகன் நாரதன்.
அது நமக்குள் வந்தபின்,
நம்மிடம் உள்ள பிடிவாதமான நிலைகள்,
தவறான நிலைகள் நம்மிடம் செயல்படுவதை
நமக்கு உணர்த்தி,
இது தப்பு, இது குற்றம்,
இதிலிருந்து நீ மீள வேண்டும்
என்ற உணர்ச்சிகளை ஊட்டி நல்வழிப்படுத்துகின்றது.

சூரியனின் புத்திரன் சுக்ரீவன் என்பது, எல்லாவற்றையும் கவர்ந்து யார் எதை எண்ணுகின்றனரோ, அவர்களுக்கெல்லாம் அதன் நிலையில் உதவும் பண்பு கொண்டது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து கொண்டால், “ரிஷியின் மகன் நாரதன்”. மனிதனாக இருந்து, உணர்வினை ஒளியாக சிருஷ்டித்துக் கொண்டவர். எதனையும் உருவாக்கக்கூடியவர். ”ரிஷிஎன்ற நிலை கொண்டு, தமக்குள் எதனையும் உருவாக்கும் வல்லமை கொண்டவர்.

அதனின் அருளுணர்வுகளை நமக்குள் நுகர்ந்து பெருக்கினோம் என்றால், நமக்குள் வரும் தீய உணர்வுகளை மாற்றி, இருள் என்ற நிலைகளை நீக்கி, உயிருடன் ஒன்றிய உணர்வினை ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதியினை, நம்மிடத்தில் உருவாக்குகின்றது.

ஆகவே, நாம் நம்முள் துருவ நட்சத்திரத்தின் அருளுணர்வை இணைத்து, தீமைகளை அகற்றி,
உயிர் என்ற ஒளியின் தன்மையை,
என்றுமே ஒளியாக வைத்திருக்கும்
விஷ்ணுதனுசு எனும் நிலையைப் பெறுவோம்.