ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 5, 2015

மனிதனான பின் கடைசி எல்லை – பிறவியில்லா நிலை

பல கோடி சரீரங்களைக் கடந்து கோடிக்கரை என்ற மனிதனானபின், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் நாம் எப்படிச் செயல்படவேண்டும்?

மனிதனுக்குள் பல கோடித் தீமைகளிலிருந்து விடுபடவேண்டும் என்ற உணர்வைச் சேர்த்து, நஞ்சினை மலமாக மாற்றிடும் சக்தி பெற்று நம் உடலிலிருந்து வரக்கூடிய மணத்தை
தீமை என்று அறிந்தபின் தீமையை நீக்கிடும்
ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வுகளை சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து நம் பிரபஞ்சத்தில் பரவச் செய்து கொண்டிருப்பதை நமது பூமி கவர்ந்து பூமிக்குள் கொண்டு வருகின்றது.

அதனை நம் ஆறாவது அறிவின் எண்ணத்தால் நுகர்ந்து, நமது வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகரும் தீமையை விளைவிக்கும் உணர்வுகளை மாற்றியமைத்தல் வேண்டும்.

நாம் தங்க நகையில் திரவகத்தை ஊற்றினால் செம்பும் வெள்ளியும் கரைந்துவிடுகின்றது. தங்கம் சுத்தமாகின்றது.

இதைப் போன்று, நம் உடலுக்குள் தீமைகள் புகுந்தாலும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் இருக்கும் நம் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று நுகர்ந்து நம் ஆன்மாவை அவ்வப்பொழுது தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உடலில் அழுக்குப்பட்டால் குளித்து உடலைத் தூய்மைப்படுத்துகின்றோம். இதைப் போல
நம் வாழ்க்கையில் நாம் கேட்டுணர்ந்த, பார்த்துணர்ந்த தீமைகளை
தீமை என்று அறிந்தாலும் அந்தத் தீமையின் உணர்வுகள்
நமக்குள் விளைந்திடாமல் தடுக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும்
நாம் நுகர்ந்து அதைச் சுவாசித்து
தீமைகள் விளைவிக்கும் உணர்வினைத் தூய்மைப்படுத்தி இந்த வாழ்க்கையில் மகிழ்ந்த நிலையையும் சிந்தித்துச் செயல்படும் நிலையையும் நாம் பெறமுடியும்.

நமது எண்ணங்களைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதிலே நிலை நிறுத்தி அதன் வலு கொண்டு நாம் இந்த வாழ்க்கையை வாழ்ந்தால் இந்த உடலுக்குப்பின் பிறவியில்லை என்ற நிலையை அடையலாம்.

இல்லையென்றால், நமது வாழ்க்கையில் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அன்பு, பாசம் கொண்டு குழந்தையின் மேலோ அல்லது நண்பன் மேலோ இந்த எண்ணங்களைச் செலுத்தி இந்த உடலை விட்டு வெளிவந்தால்
அவன் உடலுக்குள் சென்று
இந்த உடலிலுள்ள நோயை உருவாக்கி
அதை வீழ்த்திவிட்டு மனிதனல்லாத பிறவிக்குச் செல்ல நேரும்.

எனவே இதைப் போன்ற நிலையிலிருந்து மீண்டு மனிதனான பின், கடைசி எல்லை, பிறவியில்லா நிலை என்ற நிலையை அடைய நமது குரு காட்டிய அருள்வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறுவோம்.

நாம் எதையெல்லாம் எண்ணி ஏங்குகின்றோமோ, அவையனைத்தையும் நம் உயிர் ஓம் நமச்சிவாய என்று நம் உடலாக உருவாக்கும்.

நாம் ஏங்கிய உணர்வு அனைத்தையும் “ஓ” என்று ஜீவ அணுவின் கருவாக நமது உயிர் மாற்றி
நமக்குள் இந்திரலோகமாக மாற்றி அதையே
சொர்க்கலோகமாக மாற்றும் அச்சக்தியைப் பெறுவதற்காக
துருவ தியானத்தையும் ஆத்மசுத்தியையும் கடைப்பிடியுங்கள்.

ஆக, அப்படி மெய்ஞானிகளின் ஒளி வட்டத்தில் இணைத்துக் கொள்ளும் வண்ணம் நம் உணர்வினை வலுப்படுத்தி வரும் அனைவரும் எமது அருளாசிகள்.