ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 25, 2015

ஒளிசரீரம் பெறுவதற்குத்தான் இந்த முயற்சி - ஞானகுரு

இப்பொழுது நாம் எதையெல்லாம் தியானம் செய்கின்றோம்?

நமது வாழ்க்கையில் ஒருவர் நமக்குத் துன்பத்தைச் செய்துவிட்டால் துன்பம் செய்துவிட்டார் என்று அந்த நினைவைத்தான் தியானிக்கின்றோம்.

அந்தத் துன்பம் செய்தவருடைய உடலை நமக்குள் ஜெபித்த பின் இந்த உடலைவிட்டுச் சென்றால், நமக்குத் துன்பத்தைக் கொடுத்தவருடைய உடலுக்குள் செல்லும். அவ்வாறு சென்றவுடன் வெளியிலிருந்து எந்த இம்சைகளைச் செய்தோ அதைப்போன்று அந்த உடலுக்குள் செய்யும்.

அவரின் குடும்பத்தையும் கஷ்ட நிலைகளுக்கு ஆளாக்கி,
அந்த உடலையும் இழிநிலைப்படுத்தும்.
இப்பொழுது நாம் எப்படிப் பேசுகின்றோமோ, அதுபோன்று அந்த உடலுக்குள் நின்று பேசும்.

அப்படிப் பேசச் செய்து அங்கும் பல துன்பங்களை உண்டாக்கி, பல வியாதிகளை உண்டாக்கி அதில் ஏற்படக்கூடிய விஷமான சத்தை இந்த உயிராத்மாவும் பெறும். இரண்டு உயிராத்மாவும் இறந்தபின் மிருகங்களாகப் பிறக்கும்.

ஆகவே அப்படிச் செய்யும் தியானங்கள் மீண்டும் ஒரு மனித உடலுக்குள் புகுந்து மனித உடலையும் சீரழிக்கச் செய்து அங்கும் குழந்தையாகப் பிறக்க முடியாமல் பல நிலைகள் கொண்டுதான் போகும்.

துர் மரணம் அடைந்தது ஒரு உடலுக்குள் வந்து அது எந்தெந்த வேதனைகளைப்பட்டதோ அந்த உடலுக்குள்ளும் காட்டுகின்றது. இதை நாம் இப்பொழுது பார்க்கின்றோம்.

பக்தியின் நிலைகளில் வாழ்ந்த உயிராத்மாக்கள் வேதனையை உருவாக்கி குடும்பத்தில் எனக்குத் தொல்லைகள் கொடுத்தான் என்ற நிலைகள் வருகின்றதோ அதைப்போன்று பல உயிராத்மாக்கள் பல உடல்களில் சேர்ந்து அருளாடுவது போன்று செயல்படுகின்றது.

இதைப்போன்று நாம் எந்த உடலைச் சிருஷ்டிக்கின்றோமென்றால், மனித உடலுக்குள் சென்று மீண்டும் மனிதனாகப் பிறக்க முடியாத நிலைகளைத்தான் உருவாக்குகின்றோம்.

இரு உன்னை நான் அழித்து விடுகின்றேன் என்று எண்ணுகின்றோம். அந்த உணர்வைப் பதிவு செய்து கொண்டபின் அதே உணர்வுடன் இறந்து அந்த உடலுக்குள் சென்று, அந்த உடலையும் அழித்து நம்மையும் நாம் அழித்துக் கொள்கின்றோம்.

மனிதன் சிந்தனை கொண்ட நிலைகளில் வந்தாலும், சிந்தனையற்ற நிலைகளைப் பதிவாக்கி நாம் இறந்துவிடுகின்றோம்.

நம்மை அணுகி வளரும் ஆடு மாடு, மற்றும் எந்தெந்தப் பிராணிகளை வளர்க்கின்றோமோ, அவைகளுக்கு ஆகாரத்தைக் கொடுக்கும் பொழுது, ஆகாரத்தைப் புசித்த உயிரனங்கள் நம்மைப் பார்த்து ஏங்கிக்கொண்டே இருக்கும்.

மனிதராக இருக்கும் நாம் வெளியிட்ட ஒலி அலைகள் அந்த மிருகங்களுக்குள் பதிவாகி, அந்த சொல்லைச் சொன்னவுடனே அந்த மிருகங்கள் நம் மேல் பாசமாக இருக்கின்றது. அந்தப் பாசத்தின் அடிப்படையில் அது நாம் கூப்பிடுவதற்குள் ஓடி வரும்.

நாம் எந்தெந்த குணங்கள் கொண்டிருந்தோமோ அதற்குத்தக்க அது ஆடும். ஆனால் அதனிடம் பழகாதவர் வந்தால் உடனே சீறும். நாம் எப்படிச் சீறுகின்றோமோ அதுபோன்று சீறும். பாசமுடன் வளர்த்தவர்களிடம் அணுகி வரும்.

அது மரணம் அடையும் பொழுது இவர்கள் மேல் ஏக்கமாக எண்ணும். நாம் வளர்ந்தவர்களும் நம்மேல் பாசமாக இருந்தது என்று அதன் மேல் எண்ணத்தை செலுத்தியவுடன் அந்த உயிராத்மா நாயோ, பூனையோ, புறாவோ, கோழியோ, ஆடோ, மாடோ,

அது இறந்தபின், நமக்குள் வந்து நம் சத்தை எடுத்து மனிதனாக, நம் குழந்தையாகப் பிறக்கின்றது.

நாம் ஒருவர் மேல் பாசமாக இருக்கும் பொழுது, அவர் நோயாலோ அல்லது வேறு எதனினாலோ வேதனைப்பட்டுக் கொண்டிருப்பதைப் பாசத்தால் துடித்து பார்த்தால், அந்த உணர்வுகள் பார்த்தவரின் உடலில் பதிவாகிவிடுகிறது.

அந்த நோய்வாய்பட்டவர் இறந்தபின், அந்த உயிரான்மா பாசமாக எண்ணியவர் உடலில் வந்துவிடும். இங்கு வந்தபின் சதா அவரை எண்ணி ஏங்கி அழுது இவருக்குள்ளும் நோயாகி, அந்த விஷத்தின் நிலைகள் கொண்டு இவரையும் மடியச் செய்துவிடும்.

மனிதனுக்குள் மனிதன் பாசத்தின் நிலைகள் கொண்டு பாசத்தைச் செலுத்தும் பொழுது அந்த உணர்வின் அலைகள் நம் உடலில் இயக்கிவிடுகின்றது.

ஆனால் மிருகங்களோ அந்த பாசத்தின்பால் வரும் பொழுது அதற்குள் எண்ணத்தை இயக்கும் நிலைகள் இல்லை.

நாம் கொடுக்கும் உணவைச் சாப்பிட்டு அந்தச் சாப்பிட்ட உணவிற்காக நாம் சொல்வதைக் கேட்டு,
பாசத்தின் நிலைகள் நம்மிடம் அணுகி வந்து,
இறந்தபின் பாசத்தால் நமக்குள் வந்தாலும்
நம் சத்தான நிலைகள் அதற்குள் பட்டு,
மனிதனாக உருபெறும் நிலைகள் பெறுகின்றது.

இதைப்போன்றுதான் இயற்கையின் நிலைகள் மாறுபட்டு வருகின்றது.

மனிதனின் இந்தப் பாச உணர்வுகள் எவ்வாறு செயல்படுகின்றது? ஒரு உயிராத்மா அணுவிற்குள் அணு சென்று எவ்வாறு செயல்படுகிறது என்று நேரடியாக குருநாதர் உணர்த்தி என் கண்களால் பார்க்கச் செய்தார்.

இதைப்போன்ற நிலைகள், கண்டறிந்த உண்மைகளின் நிலைகளில் மனித வாழ்க்கையில் எப்படி இருக்கின்றோம் என்பதை உங்களுக்குப் படம் பிடித்தது போன்று
குருநாதர் காட்டிய அருள்வழிப்படியே
உங்களுக்கு உணர்த்தி வருகிறோம்.

உங்களை அறியாமல் ஆட்டிப் படைக்கும் தீய உணர்வுகளில் இருந்து மீட்டு, மெய் ஒளியான ஞானியின் அருள் ஒளியைப் பெறுவதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

மனிதர்களாக பிறந்த நாம் இந்த உடலைவிட்டுச் சென்றால் அடுத்த இருள் உடலான நிலைகள் பெறாதபடி ஒளிசரீரம் பெறுவதற்குத்தான் இந்த முயற்சி. எமது அருளாசிகள்.