ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 21, 2015

யாம் சொல்லும் தியானத்தை எடுத்துக் கொண்டால் எதையும் மாற்றி அமைக்கலாம்

எனக்கு வியாபாரம் ஆகவில்லையே, யாரும் வரவில்லையே, எனக்குச் சொந்தம் பந்தம் யாரும் இல்லையே என்ற நிலைகள் வரும்பொழுது அந்த உணர்வின் தன்மைதான் வெறுக்கச் செய்கின்றது.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் உணர்வுகளைத் தூண்டி இந்த தியானத்தை எடுக்கும் பொழுது சிக்கலை நீக்கி உங்கள் சொல்லுக்குள் இனிமை கிடைக்கின்றது.

அப்பொழுது உங்களிடம் வியாபாரம் வாங்கிச் செல்பவர்களும் நல்லதாக இருக்கின்றார்கள்.

ஆனால், சரியாக வியாபாரம் ஆகவில்லை என்று சோர்வடைந்து நீங்கள் உணவு சாப்பிடும் பொழுது, சாப்பிட்ட ஆகாரம் உடலுக்குள் சென்று நோயாக மாறுகின்றது.

மற்றவர்களிடம் பேசும்போது சொற்களின் தன்மையும் வேறு நிலைகளுக்குச் செல்லுகின்றது. உங்களுக்குள் அதைக் குறுகச் செய்கின்றது.

இது அனைத்தையும் செயலாக்குவது யார்?

உயிர் நாம் எண்ணியதை எண்ணியவாறு உணர்வாகச் சேர்க்கின்றது. அந்த உணர்வின் நிலைகள் கொண்டுதான் நம்மைச் செயலாக்குகின்றது நமது உயிரான ஈசன்.

அந்த உணர்வின் நிலைகள் கண்ணுக்குள் பட்டவுடன் அந்த ஒளியின் தன்மை கொண்டு அந்த உணர்வுக்குத் தக்கவாறு அதைக் காட்டுகின்றது. கண்ணாக நின்று நம் கண் வேலை செய்கின்றது.

நமக்குள் நல்ல குணமான நிலைகளை நினைத்து இனிமையாகப் பேச வைக்கின்றது. அந்த இனிமையான நாதம் பிறருடைய செவிகளில் பட்டவுடன் அவர்களை மகிழச் செய்கின்றது.

இது ஞானம். அந்த ஞானத்தின் நிலைகள் கொண்டு மற்றவர்களைக் கவரச் செய்கின்றது. இது லட்சுமி. அது தாக்கியவுடன் நமக்குள் நல்ல குணத்தை வளரச் செய்கின்றது.

இந்த உடலுக்குள் உடலான சிவம் எதைக் கொடுத்தாலும் சக்தியாகத் தாங்கி, ஒவ்வொரு நிமிடமும் நாம் எண்ணியதைச் செயலாக்கச் செய்கின்றது.

ஆகவே நமக்குள் உயிர் ஈசனாகவும், நம் கண் கண்ணாகவும், உடல் சிவமாகவும் இருக்கின்றது.

உதாரணமாக, மான் புலியைப் பார்க்கின்றது.
மானின் கண் புலியைக் காட்டுகின்றது. இது சித்திரம்.

புலியின் உணர்வுகள் மானின் உடலுக்குள் புத்திரனாகி, சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாகிறது. சித்திர புத்திரன்.

சித்திர புத்திரனின் கணக்கின்படி மானின் உயிரான்மா அடுத்து புலியாகப் பிறக்கும் நிலை வருகின்றது. இதைப்போன்று பரிணாம நிலைகளில் வளர்ந்து இன்று மனிதனாக நாம் தோன்றி இருக்கின்றோம்.

மனிதனாகத் தோன்றிய நிலையில் நாம் என்ன செய்யவேண்டும்? நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

அந்த மெய் ஞானிகள் காட்டிய நிலைகள் மாமகரிஷின் ஈஸ்வராய குருதேவரின் அருள் ஒளியை எனக்குள் கவர்ந்து
என்னை ஆட்டிப்படைக்கும் நிலையிலிருந்து
மீட்டிக்கொள்ளும் உணர்வின் அந்தச் சத்தைக் கலக்கச் செய்து,
அதன் வழியில் அறிந்துணர்ந்து என்னை மீட்டிக் கொண்டேன்.

அப்படி மீட்டிக் கொண்ட அதே உணர்வின் சத்தை உங்களுக்குள்ளும் அருள் ஒளியாகப் பதியச் செய்து கொண்டிருகின்றோம்.

எப்பொழுதெல்லாம் உங்களுக்குத் துன்பங்கள் ஏற்படுகின்றதோ, அந்த நேரத்தில் துன்பத்தை நீக்கிடும் உணர்வின் ஆற்றல் உங்களுக்குள் தோன்றி,
உங்களைப் பாதுகாக்கும் எண்ணத்தின் வலுவைக்
கூட்டச் செய்வதற்குத்தான் இந்த உபதேசமே.

நான் அதைச் செய்வேன்... இதைச் செய்வேன்...! என்று சொல்ல வரவில்லை. குருநாதர் காட்டிய ஆற்றலால்தான் நான் அதைக் கவர முடிந்தது.

குருநாதர் காட்டிய அருள் வழிகளை உபதேச வாயிலாக வெளிப்படுத்தும்போது செவி கொண்டு நீங்கள் கேட்கும் பொழுது உங்களுக்குள் பாசத்தில் நல்லதைப் பெறவேண்டும் என்ற உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது.

துன்பம் வரும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன் என்று ஏங்கும்போது உங்களுக்குள் அது வளர்ச்சி பெறுகின்றது. இது தான் தியானம். (நல்லதை எண்ணி அதை நமக்குள் சேர்த்துக் கொள்வதே தியானம்)

ஆகவே, உங்கள் வாழ்க்கையில் இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்டால் எதையும் மாற்றி அமைக்கலாம்.