ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 31, 2015

ஞானகுருவின் பொன்மொழிகள் - March 2015

31.03.2015
எவ்வளவு உயர்ந்த சித்துக்களை அறிந்தவராக இருப்பினும் அல்லது செல்வம் கொண்டவராக இருப்பினும் அவர் தம்மைச் சூழும் நஞ்சான தீமைகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியாது.

எவர் ஒருவர் சப்தரிஷிகளின் அருள் துணை கொண்டு தமது உணர்வை ஒளிபெறும் உணர்வாக வளர்க்கின்றனரோ அவரே தம்மைச் சூழும் நஞ்சான தீமையிலிருந்து விடுபட முடியும்.
30.03.2015
பண்படுத்திய நிலத்தில் பயிர் செழித்து வளரும்.
மகரிஷிகளின் அருள் உணர்வு பதித்த மனத்தில் ஞானம் செழித்து வளரும்.
27.03.2015
ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்கும் தன்மை பேரண்டத்தில் இல்லையென்றால் இந்தப் பிரபஞ்சம் இல்லை.

அதே போல் மனிதனின் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் சகோதர உணர்வுடன் வாழவில்லை என்றால் மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை.
26.03.2015
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதைப் போன்று நமது ஆன்மாவில் பதிந்துள்ள உணர்வின் மணம் நமக்கு முன்னே சென்று நம்மைப் பார்க்கின்றவரின் உணர்வில் கலந்து நமது உணர்வின் தன்மையை அவருக்கு உணர்த்துகின்றது.
25.03.2015
நாம் எதை எண்ணுகிறோமோ அந்த உணர்வின் அலைகள் நம் உடலைச் சுற்றிக் கவசமாக இருக்கும். ஆக, அதுதான் முன்னாடி இருந்து நம்மைச் சுவாசிக்கச் செய்து எந்த குணத்தில் நாம் இருந்தோமோ அந்த குணத்தைப் பாதுகாக்க அதன்வழி ஞானத்தைக் கொடுக்கும்.
24.03.2015
லௌகீக வாழ்க்கையில், பாசம் மனிதனைத் துன்பத்துள் ஆழ்த்தும்.

ஆன்மீக வாழ்க்கையில், பாசம் பெருவீடு பெருநிலைக்கு அழைத்துச் செல்லும்.
23.03.2015
ஆற்றல்மிக்க சக்தியான அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நெருப்புக்குச் சமம். அவர்கள் உணர்வின் எண்ணங்கள் எதிலும் ஊடுருவி எதையும் சாதிக்கவல்ல வல்ல்மை பெற்றவை. அந்த வல்லமையான சக்தி அவர்கள் வாழ்ந்த காலத்தில் இட்ட மூச்சலைகளை சிறுகச் சிறுக நாம் பெற்று அந்த உணர்வின் சத்து கொண்டுதான் நமக்குள் வளரவேண்டும்.

இன்றைய விஞ்ஞான உலகில் நாளைக்கு வரக்கூடிய விஷத் தன்மையிலிருந்து இந்தக் குறுகிய காலத்தில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து நம்மைக் காத்து, நம் உயிரான்மாவைக் காத்து நாம் விண்வெளி செல்ல வேண்டும்.
22.03.2015
தன் உடலைக் காக்கும் எண்ணத்தாலே பரிணாம வளர்ச்சியில் மனிதப் பிறப்பைப் பெற்றோம்.

இந்த மனிதப் பிறப்பில் தன் உயிராத்மாவைக் காக்கும் உணர்வை வளர்த்து ரிஷி நிலை பெறுவோம்.
21.03.2015
ஒரு மனிதன் சந்தர்ப்பத்தால் இன்னொரு உடலுக்குள் சென்றால் குழந்தையாகப் பிறப்பதில்லை. அந்த உயிரான்மா மீண்டும் மனிதனாகப் பிறக்காதபடி மற்றொரு உடலை அடைந்துவிடுகிறது. அப்படி மிருக நிலை அடைந்துவிட்டால் அவர்களை நாம் தியானித்தால் கூட விண் செலுத்த முடியாது.
ஆனால், பழிதீர்க்கும் உணர்வுடன் இந்த உயிராத்மா வேறொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் அந்த உயிராத்மா வெளியில் வந்தபின் நாம் அடிக்கடி வாரத்திற்கொருதரம் கூட்டுத் தியானமிருந்து இறந்தவர்களின் உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று தியானித்து உந்தித் தள்ளி விண் செலுத்த முடியும்.

வெளியில் வந்தபின் இன்னொரு உடலுக்குள் சென்றுவிட்டால் ஒன்றும் செய்யமுடியாது. அந்த உடலின் நிலையே அதனுடைய கதி. மீண்டும் அவர்கள் மனிதனான நிலைகளில் அடிபட்டுத்தான் வரவேண்டும்.
20.03.2015
குரு அருள்கின்ற வாக்கு வித்தாக நம்முள் பதியும் என்பதை நாளும் பேணி வளர்க்க அது நலம் தரும் ஒளியின் தன்மையாக நமது உயிரில் விளையும்
19.03.2015
மனிதனாகப் பிறப்பது அரிது. மிக அபூர்வம்.

அனைத்தும் அறிந்துணர்ந்து செயல்படும் ஆற்றல் தியானவழிகளில் கிடைத்தும் மகரிஷிகளின் அருள் ஒளியை மற்றும் இயற்கையின் பேருண்மைகளை அறிந்துணர்ந்த பின்பும் நாம் இந்தச் ச்ந்தர்ப்பத்தை நழுவவிடாது இநத உடலிலிருந்தே உயிரைப் போன்றே ஒளியின் தன்மை பெற்று ஒளி சரீரம் பெறும் தகுதியைப் பெறவேண்டும்.
18.03.2015
நாம் வீட்டை எவ்வளவுதான் சுத்தப்படுத்தினாலும் குப்பைகள் சேர்ந்துவிடும். அதே போன்று வெள்ளைத் துணியை நாம் போட்டிருந்தாலும் அதில் சேரும் அழுக்கைத் துவைக்கவில்லை என்றால் வெள்ளை வராது. அழுக்கு அதிகாகச் சேர்ந்தபின் அதைத் துவைத்தாலும் துணி கிழிந்துவிடும்.

அது போன்று நம் வாழ்க்கையில் இன்னல்கள், துன்பங்கள் தீமையான உணர்வுகள் வரும்பொழுதெல்லாம் ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்திப் பழகவேண்டும்.
17.03.2015
சொர்க்கபூமியான இந்த உடலில் நாம் ஒவொரு நிமிடமும் நரகலோகமான நிலையை அனுபவிக்க வேண்டியுள்ளது.
நம்மை யாரும் திட்ட வேண்டாம்; இம்சைப்படுத்த வேண்டாம். நாம் எடுக்கும் இந்த உணர்வின் அலைகளே நம் உடலுக்குள் வேதனையை உருவாக்கிவிடுகின்றது.

ஆதலால், முறைப்படி ஆத்மசுத்தியை எடுத்து ஒரு ஆயுதமாகக் கடைப்பிடித்துக் கொள்ளுங்கள்.
16.03.2015
மற்றவர்கள் நம்மை வெறுத்துப் பேசும் உணர்வுகள் அதையே நாம் சுவாசித்துக் கொண்டிருந்தோம் என்றால், நாம் வீட்டில் அமர்ந்திருக்கும் பொழுது நம் உடலிலிருந்து வெளிப்படும் இந்த வெறுப்பின் உணர்வின் சத்தை நம் வீட்டிலிருக்கும் தரை, சுவர் ஈர்த்துக் கொள்கின்றது.

இப்படி வெளிப்படுத்தும் அந்த உணர்வின் சத்தை, வெளிப்படுத்தும் அந்த அலைகள் வீட்டில் படர்ந்து நம்மையறியாமல் சங்கடத்தையும், சோர்வையும் நமக்கு ஏற்படுத்தும்.
15.03.2015
தொடர்ந்து சீராகத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் அனைவரும் தங்களைச் சுற்றிலும் நல்ல நறுமணங்கள் படர்வதை உணரமுடியும்.

அதே போன்று இரவில் தூக்கத்தில் இருக்கும் பொழுது திடீரென்று விழிப்பு வரும் பொழுது உங்களுடைய உடலிலிருந்து “பளீர்” என்று ஒளி வீசுவதைக் காண முடியும்.
14.03.2015
ஒரு செடி பிறிதொரு செடியின் மணத்தைத் தன்னருகில் நெருங்கவிடாது.

அதேபோன்று மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நம்முள் வளர்த்துவிட்டால் அது தீய உணர்வுகளை தீய எண்ணங்களை நம் அருகில் நெருங்கவிடாது.
13.03.2015
ஆண்டவனை ஜெபித்துக் கொண்டேயிருந்தால் நமக்குக் கொடுப்பான் என்றால் முடியாது. ஆண்டவன் உயிராக இருந்து நம்மை ஆண்டு கொண்டிருக்கின்றான்.
அவனுக்குள் நாம் எந்த உணர்வின் சக்தியைச் சேர்க்கின்றோமோ அந்தச் சத்துக்கொப்பதான் நம்மை ஆளுகின்றான்.
ஆகவே, இந்த உயிரின் தன்மை இருக்கும்பொழுதே மெய் ஒளியின் தன்மையை வளர்த்து, இந்த உணர்வின் ஒளியை நம் உயிருடன் சேர்த்துத்தான் ஒளியாக மாற்ற முடியும்.
12.03.2015
இந்த வாழ்க்கையில் நாம் பல மந்திர தந்திரங்களைக் கற்கவேண்டும் என்று எண்ணினாலும், அதிலே தன்னைப் பெரிய மனிதனாகக் காட்டவேண்டும் என்று நினைவைச் செலுத்தினாலும் அதன்வழி இட்டுச் செல்லும். 
இந்த உடலுக்குப் புகழ் தேடும். ஆனால், புகழுக்குள் மறைந்து நாம் எடுத்த உணர்வின் தன்மை உடலுக்குள் வேதனையைத் தான் கொடுக்கும்.
11.03.2015
கோவில்களில் காளி மாரி சரஸ்வதி என்று உருவம் அமைத்து கையிலே திரிசூலத்தை வைத்துக் கதைகள் எழுதியிருப்பார்கள். நாம் பார்த்திருப்போம்.
திரிசூலத்திற்குள் இருக்கக்கூடிய சக்தியின் தன்மைகள் ஒன்று ஈர்ப்பு சக்தி. மையத்திலிருக்கக்கூடியது வெப்பசக்தி. இது ஈர்த்துத் தனக்குள் அணைத்து தான் சேர்த்துக் கொண்ட சத்தான நிலைகள் ஞானம் என்று மூன்றும் சேர்த்து இயக்கசக்தி.
முதலில் லட்சுமி, வெப்பம் அதற்கடுத்து நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை ஞானம். இதற்குப் பெயர்தான் திரிசூலம்.
10.03.2015
நமக்குள் நல்ல உணர்வுகளைச் சுதந்திரமாக இயங்கவிட வேண்டும். வெறுப்பு, வேதனை, கோபம், குரோதம் போன்ற நஞ்சான உணர்வுகளுக்கு நமது நல்ல உணர்வுகளை அடிமைப்படுத்திவிடக் கூடாது.
09.03.2015
கொன்றால் பாவம் தின்றால் போகும் என்பார்கள். இது தவறு.

தின்றது எந்த ஜீவனின் மாமிசமோ அதனின் உணர்வின் மணம் தின்றவரின் உடலில் இணைகின்றது. அதனின் உணர்வின் மணத்தை அவர் தனக்குள் அதிகமாக்கியபின் அவருடைய உடலைவிட்டுப் பிரியும் உயிரான்மா நேராக அந்த ஜீவனின் ஈர்ப்பிற்குச் சென்று, அந்த ஜீவனின் ரூபமாக சரீரம் பெறுகின்றது.
08.03.2015
உயிரின் ஈர்ப்பில் பல பல உணர்வுகளே சேர்ந்து உடலாகி உயிரின் இயக்கத்தால் உடலின் உணர்வுகள் ஆத்மாவாக இயங்கி இந்த உணர்வின் ஆற்றலே எண்ணம் சொல் செயல் ஆகின்றது.
07.03.2015
மரண பயத்தை வென்றவர்கள் மரத்தை வென்றவர்கள் ஆவார். அவர்கள் மரணமில்லாப் பெருவாழ்வை மட்டுமே எண்ணியவர்கள்.
06.03.2015
ஆதியில் பேரண்டத்தில் பரவியிருந்த ஆற்றல்கள் சக்தி. ஆற்றல்களின் தொடர் கொண்டு உருவான பொருள் பரமசிவம். சிவமான பொருளிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் மற்றொன்றுடன்  மோதி புதுப் பொருளாக புது ஆற்றலாக உருவாகின்றது.
இப்படிச் சக்தியின் துணை கொண்டு சிவமும், சிவத்தின் துணை கொண்டு சக்தியும் பேரண்டத்தில் வளர்ச்சி நிலை கொண்டு புதுப் புது நிலைகளாக வெளிப்படுகின்றன.
சக்தியும் சிவமும் ஒன்றுக்கொன்று துணை கொண்டு வளர்ச்சி பெறுவதால் ஞானிகள் சக்தியில்லையேல் சிவமில்லை. சிவமில்லையேல் சக்தியில்லை என்று காவியங்களில் உரைத்தார்கள்.
05.03.2015
பேரண்டத்திற்குள் இருப்பதற்கு இல்லாமை கிடையாது. இருப்பவைகள் ஒன்றுடன் ஒன்று மோதி கலந்து இணைந்து புதுப் புது நிலைகளாக மாற்றிக் கொண்டேயிருக்கும்

அனைத்திற்கும் மூலமாக இருப்பது விஷம், வெப்பம், காந்தம், மணம், உணர்வு
04.03.2015
சாபம் என்பது கொடிய விஷம் போன்றது. சாபம் கொடுத்தவரும் கெடுவார். சாபம் பெற்றவரும் கெடுவார்.

காலில் ஏறிய விஷம் தலை வரை பாய்வதைப் போன்று சாபம் பெற்றவர் மட்டுமல்லாது சாபம் பெற்றவரின் வாரிசுகளும் கெட்டழிவர்
03.03.2015
விநாயகர் ஆலயத்தில் அரச மரமும் வேப்ப மரமும் இருக்கும்.
வேப்ப மரம் கசப்பான உணர்வைக் கொண்டது. கசப்பின் தன்மை தன்னுடன் இணைந்த பொருள்களைக் கசப்பாக மாற்றுகின்றது. இதே போன்று வேதனை கொண்ட மனிதந் தன்னைப் பார்த்தோரையும், தன் சொல்லைக் கேட்போரையும் வேதனை கொள்ளச் செய்கிறான்.
அரச மரம் காற்றில் கலந்திருக்கும் சத்தினைத் தன் உணவாக எடுத்து, கடினமான கருங்கல் கட்டிடங்களுக்கு இடையே கூட விளைந்து கட்டிடங்களைப் பிளந்து ஓங்கி வளரும் ஆற்றல் கொண்டது.
இதைப் போன்று, நாம் நம்முள் வேதனைப்படச் செய்யும் உணர்வுகளைச் சிறுக்கச் செய்து அரசைப் போன்று காற்றில் படர்ந்துள்ள மகரிஷிகளின் அருளுணர்வுகளைக் கவர்ந்து நம்முள் ஓங்கி வளரச் செய்யவேண்டும்.
02.03.2015
குரு வழி என்பது உயிர் வழி ஈஸ்வரா என்று நமது உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.
அப்படி எண்ணும்பொழுது இதனின் உணர்வுகள் நமது சுவாசத்தில் கலந்து வரும் தீமைகளை இடைமறித்துத் தடுத்து, தீமைகள் வராது காக்கும் அருளுணர்வுகளை நம்முள் விளையச் செய்யும்.
01.03.2015
நமது உயிர் எலக்ட்ரிக்காக இருக்கின்றது.

நாம் எத்தகைய குணத்தை எண்ணுகின்றோமோ அதனின் உணர்வை நம் உயிர் எலக்ட்ரானிக்காக மாற்றி அதனின் உணர்வின் தன்மை எதுவோ, அதுவாக நமது உடலில் இயக்குகின்றது.