நமக்குள் எவ்வளவு
பெரிய நல்ல குணங்கள் இருந்தாலும், சண்டை போடுபவர்களைப் பார்த்துக்கொண்டே
இருந்தால் போதும். நீங்கள் ஒன்றும் பேசவேண்டியது இல்லை.
சண்டை போடுபவர்களின் உணர்வை நீங்கள் சுவாசித்தால்
உங்களுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுடன் அது சேர்ந்து விடுகின்றது.
அப்பொழுது உங்களுக்குள் கை கால் குடைச்சல் ஆகின்றது. உங்களை
அறியாமலேயே பல தொல்லைகள் ஏற்படுகின்றது.
நம் வாழ்க்கையில் நல்லது கெட்டதை, நடந்ததைத்தான்
பார்க்கின்றோம். மற்றவர்களுடைய துயரங்களைப் பார்க்கத்தான் செய்கிறோம்.
பத்திரிக்கை வாயிலாகவும் படிக்கின்றோம்.
அரசியல் நிலைகளிலும் பார்க்கின்றோம்.
அக்கம் பக்கம் உள்ளோர் நிலைகளையும் பார்க்கின்றோம்.
ஆனால், இன்றைய நிலைகளில் நல்லதை எண்ணும் போது அவர்கள்
செய்யக்கூடிய ஒவ்வொன்றிலும் குறையினுடைய
உணர்வுகளை நாம் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.
ஆக நீங்கள் ஒவ்வொரு நிமிடமும் நல்லதை நினைக்கும்போது மற்றவர்கள்
செய்யும் தப்பைத்தான் அறிந்து கொள்கிறோம். அந்தத் தப்பை உணர்ந்து அடுத்து,
“இப்படிச் செய்யாதே” என்று சொல்லித்தான் ஆக வேண்டும்.
பிள்ளையாக இருந்தாலும், யாராக இருந்தாலும் சரி.
அதே சமயம் நாம் சுவாசித்த இந்தத் தப்பான உணர்வுகள் நம்
உடலில் சேரத்தான் செய்கின்றது. அதே சமயத்தில் தப்பு நடந்துவிட்டது என்று அடுத்து
ஆத்திரமான நிலைகள் வரப்படும்போது அந்த ஆத்திரமான உணர்வுகள் நம் நல்ல
குணங்களுக்குள் பதியத்தான் செய்கின்றது.
இதையெல்லாம் நாம் மாற்றப் பழக வேண்டும்.
நாம் எந்த சங்கடமான வார்த்தைகளைக் கேட்டோமோ, சங்கடமான
செயல்களை பார்த்தோமோ, இதைப்போன்ற நேரத்தில் எல்லாம் இந்த ஆத்ம சுத்தி செய்து
சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்
அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நாங்கள் பெறவேண்டும்.
எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும்.
எங்கள் செயலிலே நலம் பெறவேண்டும்.
எங்கள் மூச்சிலே எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை
நீங்கள்
ஒலிபரப்பிக்கொண்டேயிருக்க வேண்டும்.
ஆத்ம சுத்தியைச் செய்து கொள்ள வேண்டுமென்றால் துருவ
நட்சத்திரத்தின் பேரருளைப் பெற ஒவ்வொரு நாளும் பத்து நிமிடமாவது, துருவ
நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்றால்தான், இப்பொழுது
யாம் சொல்லும் ஞானியரின் அருள் சக்தியைப் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை எடுத்துக் கொண்டால்
தான் அந்த ஆத்ம சுத்தி செய்யும் போது, அந்த ஆத்ம சுத்தியின் சக்தி உங்களுக்கு
கிடைக்கும்.
அப்பொழுது ஞானியரின் அருள் ஒளி கிடைக்கும் பொழுது எங்கள்
ஜீவாத்மா பெறவேண்டும் என்று, அடிக்கடி சொல்லும்போது உங்கள் உடலுக்குள் துன்ப
அலைகள் இருந்தாலும் இது அதை மாய்த்து, ஆற்றல் மிக்க நிலைகளாக உணர்வின் சத்தாக
மாற்றுகின்றது.
இன்று கோயிலிலே சென்று யாகமோ, மற்ற நிலைகளில் போய்ச்
செய்கிறார்கள்.
அதைப் போல நீங்கள் எந்த நிமிடமானாலும் சரி “ஓம் ஈஸ்வரா”
என்று உங்களுக்குள் இயக்கிக் கொண்டிருக்கும் உயிரை எண்ணுங்கள். அவ்வாறு
எண்ணிவிட்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் ஏங்குங்கள்.
அந்த மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும்
என்று
உயிரான யாக
குண்டத்திற்குள்
இந்த உணர்வின்
சத்தான நிலைகளை இங்கே கூட்டுங்கள்.
இதை அடிக்கடி நாம் கூட்டும் போது, இந்த உணர்வின் சத்து
நமக்குள் கூட்டி விடுகின்றது.
இந்த மனித வாழ்க்கையில் மிக மிக ஆபூர்வமான நிலைகளில்
பிறந்திருக்கின்றோம். ஆனால் நமது உடல் ஒரு சொர்க்க பூமி, எப்படி இந்த பூமியில் உயிரினங்கள்
வாழுகின்றதோ, அதைப்போல நாம் இந்த உடலான பூமிக்குள் சொர்க்கத்தை
அமைத்திருக்கின்றோம். எல்லா மகிழ்ச்சியும் அனுபவிக்கின்றோம்.
ஆனால் அனுபவிக்கும் இந்த சொர்க்க பூமியிலிருந்துதான்
ஒளிசரீரம் பெற்று, என்றும் 16 என்ற நிலையான சரீரம், ஒளி சரீரம் பெற முடியும்.
இந்தச் சரீரத்திலிருந்து ஒளிச்சரீரம் பெறமுடியவில்லை என்றால்
எடுத்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப
இன்னொரு மாற்று உடலைப் பெற்றுவிட்டால்
நாம் வேறு எதுவும்
செய்ய முடியாது.
ஆக மீண்டும் மனிதனாகப் பிறப்பது, மிக மிக அபூர்வ நிலைகள்
இருப்பதினாலே, நீங்கள் ஒவ்வொருவரும் இதை நினைவு கூர்ந்து எந்தத் துன்பம்
வந்தாலும், எப்படிப்பட்ட நிலைகளில் வந்தாலும் அதை மாற்றுவதற்கு இந்த ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை
எடுத்துத் தடுத்துக் கொள்ளுங்கள்.