1. நல்லதைக் காத்திடும் வழியறியாது பலர் வாடிக்
கொண்டிருக்கின்றார்கள்
நல்ல குணங்கள்
கொண்டு, பலருக்குப் பல நன்மைகள் செய்கின்றோம். இருந்தாலும், நம்மையறியாமலே வாழ்க்கையில்
என்ன செய்வது என்று வாடித் தவித்துக்கொண்டு, வேதனையே உருவாகி, குடும்பத்திற்குள் ஒற்றுமை
இல்லாது, இன்னல்கள் பல பட்டு, துன்பத்தின் எல்லையிலே இன்று எத்தனையோ பேர் வாடிக்கொண்டிருக்கின்றோம்.
அப்படி வாடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும்
இந்த மகரிஷிகளின்
அருள் சக்தி பெற்று,
அறியாது சேர்ந்த
தீமைகளை நீக்கிடும் நிலையாக,
அந்த மெய்ஞானிகளின்
உணர்வுகள் உங்களுக்குள் நுழைந்து,
வாழ்க்கையில்
இருளைப் போக்கி,
மெய் ஒளியின் தன்மையாக நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான்
இதை உபதேசிக்கின்றோம்.
2. நல்லதைக் காத்திடும் அருள் வித்தை உங்களுக்குக்
கொடுக்கின்றோம்
விஞ்ஞான அறிவின்
துணை கொண்டு, பல சக்திவாய்ந்த தாவர இனத்தை, சக்தியற்ற தாவர இனத்துடன் இணைத்து, ஓர்
புது வித்தாக உருவாக்கியுள்ளார்கள். அதனின் பலனாக அதிகமான வித்துக்கள் கிடைக்கின்றது.
அதிகமாக அந்த
வித்தின் தன்மை விளைந்து வரும் பொழுது, அதை நாம் உணவாக எடுத்து உட்கொள்ளும்படி, நம்மைக்
காத்திடும் நிலையாகச் விஞ்ஞானிகள் செய்கின்றனர்.
இதைப் போன்றுதான்
மெய்ஞானிகள் மனிதனைக் காத்திடும் நிலைகளுக்கு, அருள்ஞானத்தின் தன்மைகள் கொண்டு, வேகா
நிலை பெறச் செய்கின்றனர்.
நமது குருநாதர்
ஈஸ்வராய குருதேவர், மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எமக்குள் பெறச் செய்து,
எனக்குள் இருந்த பலவீனமடைந்த உணர்வுக்குள்
மகரிஷிகளின் உணர்வை இரண்டறக் கலக்கும்படி
அவர் உபதேசித்தருளினார்.
அந்த மகரிஷிகளின்
உணர்வின் எண்ணங்களை எமக்குள் இணையச் செய்து, ஊர் உலகம் சுற்றச் செய்து, அருள் ஞானத்தை
எமக்குள் வளர்க்கச் செய்தார்.
எமக்குள் வளர்ந்திட்ட,
எமக்குள் பெருக்கிய
அந்த நல்வித்தினை
உங்களுக்குள்
பதியும் வண்ணம்தான் இதை உபதேசிக்கின்றோம்.
3. நல்லதைக் காத்திடும் சக்தி (வழி)
கூட்டுத் தியானத்தில்
விளையச் செய்யும் சக்தியின் துணைகொண்டு, எந்த நிமிடமும் “ஓம் ஈஸ்வரா” என்று உங்கள்
உயிரை வேண்டி, அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கினீர்கள் என்றால்,
அந்த அருள் சக்தி உட்புகுந்து,
துணியில் உள்ள அழுக்கினை,
சோப்பினைப் போட்டுப் பிரித்து எடுப்பது
போல,
நம் உணர்வுக்குள்
கலந்த தீமையின் உணர்வுகளைப் பிரித்துவிடும். இதை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
இந்தச் சக்தியை வளர்த்துக் கொள்ளவில்லை என்றால், நாம் எவ்வளவு நன்மைகள் செய்தாலும், நாம் ஒவ்வொரு
நாளும் எடுக்கும் மற்ற தீமையான உணர்வுகள் நல்ல உணர்வுடன் இரண்டறக் கலந்து, நமது நல்ல
குணத்தை மறைத்துக் கொண்டே வரும்.
ஆகவே, இதைக்
கேட்டுணர்ந்தவர்கள் அனைவரும் கூட்டுத் தியானங்களில் கலந்து கொண்டு, மகரிஷிகளின் அருளாற்றலை
உங்களுக்குள் விளையச் செய்து, அருள் வாழ்க்கை வாழ்ந்து, மகரிஷிகளின் அருள் வட்டத்தில்
என்றென்றும் நீங்கள் இணைந்து வாழ்ந்திட எமது அருளாசிகள்.