ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 27, 2013

நாம் அடைய வேண்டிய எல்லையைப் பற்றி திருமூலர் வெளிப்படுத்திய பாடல்

ஓடிடும் போது ஒருமித்து வாசியை
நாடிடு திக்கை நலமாய் இதைஎண்ணி
கூடிடு மார்க்கத்தில் கோடி காணசித்தர்கள்
ஆடிடு மார்க்கத்தில் அறிந்துகொள் மூலமே
--திருமூலர்
1. ஓடிடும் போது ஒருமித்து வாசியை
நாம் எதை எதையெல்லாம் கண்களால் பார்க்கின்றோமோ, காதால் கேட்கின்றோமோ, அதற்குத் தக்கவாறுதான் நம் நினைவுகளும் எண்ணங்களும் செல்கின்றது.

ஆக, கீழ் நோக்கிய சுவாசமாக, மூக்கின் வழியாகவே நாம் சுவாசிக்கின்றோம். அப்படிப்பட்ட சுவாசமானது பல வகைகளிலும் அலைந்து கொண்டே இருக்கின்றது.

சுவாசத்தை (மனதை) ஒரு நிலைப்படுத்த வேண்டுமென்றால், புருவமத்தியில் வீற்றிருந்து நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் நம் உயிரை,
“ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று எண்ணி
உயிரான ஈசனிடம் நிலை நிறுத்த வேண்டும்.
எப்பொழுதும் உயிரின் நினைவாகவே, அவனுடன் இணைந்தே நாம் சுவாசித்துப் பழகவேண்டும். பல நூல்களை ஒன்றாகத் திரித்துச் சேர்க்கப்படும் பொழுது எப்படி அது வலுவான கயிறாக மாறுகின்றதோ, அதைப் போன்று நாம் சுவாசிப்பது அனைத்தும் உயிருடன் இணைந்தே இயங்கும்.
2. நாடிடு திக்கை நலமாய் இதைஎண்ணி
பரிணாம வளர்ச்சியில், பல கோடிச் சரீரங்களிலிருந்து, பல வலுவான ஆற்றல்களைச் சேர்த்துச் சேர்த்து, இன்று நம்மை முழு முதல் கடவுளாக மனிதனாக உருவாக்கியது, ஆதிமூலமாகிய நம் உயிர்தான் என்ற பேருண்மையை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

பரிணாம வளர்ச்சியில் வளர்ச்சி பெற்று, பூமியில் தோன்றிய முதல் மனிதன் அகஸ்தியன். பூமி துருவத்தின் வழியாகக் கவரும் ஆற்றல்களை, பூமி கவர்வதற்கு முன் அகஸ்தியன் சுவாசித்தான்.

நஞ்சினை வென்றான், உயிருடன் ஒன்றினான்
ஒளியின் சுடராக மாற்றினான்
துருவ நட்சத்திரமாக “என்றும் பதினாறு” என்ற நிலை அடைந்து இன்றும் வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டுள்ளான்.
அகஸ்தியன் விண்ணின் ஆற்றலைச் சுவாசித்த, அதே வட  துருவத்தின் வழியாக நாம் சுவாசிக்கும் பொழுது, விண்ணிலே தோன்றிய நம் உயிர் பத்தாவது நிலையாக "கல்கி" என்று பேரொளியாக அடைய முடியும்.
3. கூடிடு மார்க்கத்தில் கோடி காணசித்தர்கள்
உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றிய, துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் ஒளியான அணுக்களை யார் யாரெல்லாம் நுகரும் சந்தர்ப்பம் பெற்றார்களோ, அவர்கள் அனைவரும்
முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று
சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

சப்தரிஷி மண்டலம் என்பது ஒரு பெரிய உலகம். இன்று நாம் மனித உடலில் எப்படி வாழுகின்றோமோ, அதைப் போன்று, அவர்கள் “ரிஷி, ரிஷிபத்தினி”  என்ற நிலையில் கணவன் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைந்து, ஒளி உடலாக அழியாத நிலையில், இனி ஒரு பிறவியில்லை என்று வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

நாம் அனைவரும் அப்பேர்ப்பட்ட கோடிக்கணக்கான ரிஷிகளுடன் இணைந்து, அவர்கள் வேறல்ல நாம் வேறல்ல என்ற நிலையை எய்துவோம்.
4. ஆடிடு மார்க்கத்தில் அறிந்துகொள் மூலமே
பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தை அடைவதே, நமது இந்த மனித வாழ்வின் எல்லை என்று அறிந்து, அதை நாம் பற்றுடன் பற்றுவோம்.

ஆகவே, அந்த எல்லையை அடையும் விதமாக எத்தகைய துன்பம் வந்தாலும், நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உயிர் வழி சுவாசிப்போம். உயிரான ஈசனுக்குச் செய்யும் சேவையாக நாம் செயல்படுத்துவோம்.

நமக்குள் இருக்கும் தீயவினைகள், சாபவினைகள், பாவ வினைகள், பூர்வ ஜென்ம வினைகளை அனைத்தையும் அகற்றுவோம். நம் எண்ணம் சொல் செயல் புனிதம் பெறுவோம். நாம் பார்க்கும் அனைவரும் அந்த மகரிஷிகள் அருள் சக்தி பெறத் தவமிருப்போம்.