ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 13, 2013

தனித்த நிலையில், நாம் சக்தியைப் பெற முடியாது

1. யாம் எப்படி உங்களைச் சக்தியைப் பெறச் செய்கின்றோம்?
பிறவிக் கடலை நீந்தி விண் உலகில் இன்று ஒளியாகச் சுழலும், அந்த மகரிஷிகள் வெளிப்படுத்தும் உணர்வின் சத்தினைச் சாதாரண மனிதன் கவரும் நிலையில்லை.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் உங்களுக்கு உபதேசித்து, இந்த உணர்வினை உச்சநிலை அடையச் செய்து, மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று அனைவரும் ஏகோபித்த நிலையில் ஒரே நிலை கொண்டு ஏங்கும் பொழுது, அந்தச் சக்தி வாய்ந்த உணர்வலைகள் நமக்கு முன் படர்ந்திருப்பதை,
அந்த மகரிஷிகளின் உணர்வுகளை
நீங்கள் கவரும் திறன் பெறுகின்றீர்கள்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி, அந்த உணர்வினைத் தூண்டச் செய்து, இந்த முறைப்படி தியானிக்கச் செய்யும் பொழுது, அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் படர்கின்றது.

நீங்கள் சுவாசிக்கும் பொழுது உங்கள் உடலுக்குள் சென்று ஜீவான்மாக்களுடன் இணையச் செய்கின்றது. அப்படி உடலுக்குள் இணைந்த நிலைகள் கொண்டு, அது இணைய வேண்டும் எனபதற்குத்தான் கூட்டுத்தியானம்.
2. தனித்த நிலையில், நாம் சக்தியைப் பெற முடியாது
தனித்து ஆண்டவனை ஜெபித்துப் பெறுவேன் என்றால், அது ஒருக்காலும் நடக்காது. மந்திர ஒலிகளால் இவர்களது எண்ணங்களை ஒருமித்து, அந்த எண்ணத்தை அதாவது, எந்தக் குணமோ அதை வளர்த்துக் கொள்ளலாமே தவிர முழுமை பெறமுடியாது.

நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, அந்த உணர்வின் சக்திவாய்ந்த நிலைகள் கொண்டு, மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும், அறியாது வந்த இருள்கள் போகவேண்டும் என்ற உணர்வின் எண்ணத்தை ஒலிபரப்பும் பொழுது, இவை அனைத்தையும் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

அதே சமயத்தில் இந்த ஒலி அலைகளை எழுப்பும் பொழுது, கூட்டுத் தியானத்தில் அமர்ந்தவர்கள் செவிப்புலனில் தாக்கப்படும் பொழுது, எல்லோருடைய உணர்வுகளும் தூண்டப்பட்டு, எல்லோரும் நலம் பெறவேண்டும் என்ற உணர்வு உடலுக்குள் புகுந்து, ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எல்லோரும் பெறவேண்டும். அவர்கள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். உடல் நலம் பெறவேண்டும், மனவளம் பெறவேண்டும், தொழில் வளம் பெறவேண்டும், செல்வம் பெறவேண்டும், செல்வாக்கு பெறவேண்டும், என்று அனைவரின் எண்ணமும் ஏகோபித்த நிலைகளில் நமக்குள் பதிவாகும் பொழுது,
அனைவருடைய ஒத்துழைப்பும்,
நம் வாழ்க்கையில் எதிர்ப்பற்ற நிலையும்,
பக்குவத்துடன் நடந்திடும் நிலையும்,
பண்புடன் வாழும் நிலையும் நமக்குள் சீராக அது விளையும்.
அவ்வாறு விளையச் செய்வதற்குத்தான் கூட்டுத் தியானங்களைச் செய்வது.