ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 2, 2013

நமது உயிர் ஒரு டாக்டர்

1. நமது உயிர் ஒரு டாக்டர் தான்
நீங்களும் ஒரு டாக்டர் தான்,  உங்களுடைய உயிர்தான், டாக்டராக இருக்கின்றது.

உங்கள் உயிரான டாக்டரிடம்,
உணர்வுகளைச் சொன்னீர்களென்றால்,
அதற்குத் தகுந்த மாதிரி,
உயிரான டாக்டர் உங்களை இயக்கி,  
உங்களை நல் வழிப்படுத்துவார். 

ஆனால், நாம் வேதனை, வெறுப்பு என்ற உணர்வுகள் நம்மிடம் வரும்பொழுது,  உயிரான டாக்டரை மதிக்காதபடி இருந்துவிடுகின்றோம்.

உயிர், நமக்கு நல்லது கெட்டது போன்றவைகளைக் காண்பிக்கின்றது. கெட்டது என்று தெரிந்தும் அதை உள்ளே விடாதபடி தடுக்கவில்லை என்றால், என்னவாகும்?
டாக்டர்கள், ஒன்றைச் சாப்பிடாதீர்கள் என்று சொல்லியிருந்தும்,
அதைச் சாப்பிட்டோம் என்றால், உடல் நோயாகும்.

இது போன்றுதான்,  நாம் ஒருவர் வேதனைப்படுவதைப் பார்த்து,  “நல்ல மனிதர் இப்படி ஆகிவிட்டாரேஎன்று வேதனைப்படுகின்றோம். அப்பொழுது என்ன செய்கின்றோம்?

வேதனையின் உணர்வுகள், நம்முள் நுழைவதற்கு ஏதுவாக, திறந்து வைத்துவிடுகின்றோம். இதனால், வேதனை உணர்வுகள் நம்முள் புகுந்து விடுகின்றது.
2. தீமைகள் நமக்குள் பதிவாகாதபடி மூடி வைக்க வேண்டும்
ஆகவே, நாம் எப்பொழுதும் தீய உணர்வுகள் நம்முள் நுழையாதவண்ணம் கதவுகளை மூடி வைக்கவேண்டும்.

உதாரணமாக, காற்று பலமாக உள்ள பொழுது என்னவாகும். தூசி, நாற்றம், அனைத்தையும் அடித்துக் கொண்டு வரும். அப்படி வரும் பொழுது, அவை அனைத்தும் நம்முள் நுழைந்துவிடும். ஆகவே, நாம் கதவை மூடி வைத்திருக்கப் பழக வேண்டும்.

நாம் ஒரு உணர்வை மூக்குவழி நுகரும் பொழுது, அது நம் உயிரில் மோதுகின்றது. நமது கண் ஒன்றைப் பார்க்கும் பொழுது, கருவிழி ருக்மணி என்ன செய்கின்றது?

கவர்ந்த உணர்வை, நமது உடலில் உள்ள விலா எலும்புகளில் உள்ள ஊனில் பதிவாக்கிவிடுகின்றது. வேதனைப்பட்ட உணர்வை நுகர்ந்து, நமது எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றது.

இவைகளெல்லாம் சுவாசித்தல் மூலம் நம்முள் செல்வதில்லை. சுவாசத்தில் இல்லாமலே, கருவிழி பார்த்த ஒன்றைப் படமாக்கி நம்முள் பதிவாக்கி விடுகின்றது.

எக்ஸ்ரே படம் எடுத்தால், உடனே படமாகக் காட்டுவதைப் போன்று, கருவிழி பார்த்தவுடனே, நமது உடலில் உள்ள விலா எலும்புகள் கடிகாரம் மாதிரி படபடவெனதுடித்து இழுக்கும்.  இழுத்து உடனே தன்னுள் பதிவாக்கிக் கொள்கின்றது.

இவ்வாறு பதிவான பின்னே என்ன செய்கின்றது? கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் அதனின்று வெளிப்படும், வேதனை உணர்வைக் கவர்ந்து, அவ்வுணர்வை இயக்ககூடிய அணுக்களாக மாற்றுகின்றது.

வேதனையின் உணர்வுகள், நமது உடலுக்குள் வலுவானபின், அதன் அருகில் இருக்கக் கூடிய நல்ல அணுக்களைப் பலவீனப்படுத்தும். மேலும், அந்த நல்ல அணுக்களை உணவாக எடுத்துச் சாப்பிடத் தொடங்கும். பின் நாம் நலிவடைய வேண்டியதுதான்.

எனவே,  இதைப் போன்ற நிலைகளை நாம் தடுக்க, நாம் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில், 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை,
உயிர் வழி கவர்ந்து,
நம் உடலை உருவாக்கிய அணுக்களனைத்திற்கும்
உணவாகக் கொடுக்க வேண்டும். 

இவ்வாறு நாம் செய்து வர, நாம் அனைத்துத் தீமைகளிலிருந்தும் விடுபட முடியும். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ முடியும்.