ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 11, 2013

எந்தத் தெய்வமும் நம்மைச் சோதிப்பது இல்லை

1. எந்தத் தெய்வமும் நம்மைச் சோதிப்பது இல்லை
எல்லோருக்கும் நன்மை செய்தேனே, என்னை ஆண்டவன் இப்படிச் சோதிக்கின்றானே, தெய்வம் இப்படிச் சோதிக்கின்றதே என்றுதான் வேதனைப்படுகின்றோமே தவிர, ஆறாவது அறிவின் துணை கொண்டு அதை நீக்கிடும் நிலைகளைக் காட்டிய அந்த மெய்ஞானிகளின் வழிகளை நாம் பின்பற்றவே இல்லை.

நாம் ஆலயங்களுக்குக் செல்கின்றோம். ஆனால், ஆலயத்தை எதற்காகக் கட்டினார்கள் என்று உணரவில்லை.

நமக்குள் இருக்கக்கூடிய குணம், மனிதன் வரையிலும் எவ்வாறு உருவாக்கியது என்ற நிலையும், நல்ல குணத்தை எவ்வாறு காத்திட வேண்டும் என்பதற்குத்தான் ஆலயங்களைக் கட்டினார்கள்.

நம் உடலுக்குள் மறைந்துள்ள நல்ல குணங்களை ஆலயத்துக்குள் கல் சிலையாக வடித்து, கதைகளாக எழுதி, இந்தத் தெய்வ குணம் உனக்குள் உண்டு. அதைக் காத்திடும் நிலை எது?
நம்மைக் காத்திட்ட
அந்த நல்ல குணத்தைக் காத்திடவே
அங்கே சிலையாக உருவாக்கினார்கள் ஞானிகள்.

இவ்வாறு அந்த மெய்ஞானிகள், நமக்குள் நல்ல குணம் உள் மறைந்திருப்பதைப் புறத்தால் காட்டி, அதனைச் சிலையாக வடித்து, நல்ல குணத்தைக் காத்திடும் தெய்வம் என்று உணர்த்தினார்கள்.
2. உடல் உறுப்பின் இயக்கத்தையும், அதனின் செயலாக்கத்தையும்தான் தெய்வமாகக் காட்டினார்கள் ஞானிகள்
உதாரணமாக, கசப்பின் தன்மை அதிகமான மணம் கொண்ட ஒரு அணு, மற்ற கசப்பற்ற நிலைகளில் மோதும் பொழுது,
கசப்பிற்குள் கசப்பற்ற உணர்வின் அணு நுழைந்து,
அதற்குள் இறையாகி,
இவ்வாறு ஒன்றை ஒன்று விழுங்கி, ஒன்று வலுப்பெறும் பொழுது,
அது, இதைப் போல மற்றதை விழுங்கி
மற்ற நிலைகள் மாறிக் கொண்டே வந்ததுதான்
உணர்வின் மாற்றங்கள் அடைந்த நிலை.

அந்த உணர்வின் மணங்களுக்கொப்பத்தான் உடலின் அமைப்பு அமைந்தது.
அந்த உடல் உறுப்புகளுக்கொப்பதான்,
மணங்களுக்கொப்பதான் எண்ணங்கள் வருகின்றது.
இதனைத் தெள்ளத் தெளிவாக வியாசகர் மகாபாரதப் போர் என்று காண்பித்துள்ளார்.

அதாவது உணர்வின் இயக்கத்தால் மோதும் நிலை (போர் நிலை) கொண்டு, கண்ணின் நினைவலைகள் எவ்வாறு உடலுக்குள் அறிந்திடும் உணர்வாகக் கண்ணாக விளைந்து,
கண் கொண்டு, கண்ணனாக விளைந்திடும் நிலைகள்
உடலுக்குள் உறுப்பாக, ஒரு அங்கமாக இயங்கத் தொடங்கியது
என்ற நிலையைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

ஆனால், அதைக் காவியமாகத்தான் படிக்கின்றோமே தவிர, அதனின் உட்பொருளின் கருத்தை அறிந்து, நுகர்வது இல்லை.

ஒவ்வொரு உறுப்பின் இயக்கத்தைக் கடவுளாக உணர்த்தி, அதனின் செயலாக்கத்தை ஆக்கபூர்வமாக உயர்த்திப் பேசி, அதற்கு ஒரு நாமம் இட்டு, இதுதான் கடவுள் என்று மெய்ஞானிகள் காட்டினார்கள்.

ஆனால், அதனையே நாம் கடவுளாக்கி,
நமக்குள் இயக்கும் இந்த உறுப்பினை நாம் மறந்துவிட்டோம்.
இயற்கையில் இணைந்திட்ட உறுப்பின் செயலாற்றல்களை,
அது எவ்வாறு இயங்குகின்றது? என்ற நிலையை
அன்று மகா ஞானிகள் உணர்த்தினாலும், அது காலத்தால் மறைந்துவிட்டது.

இனியாவது நாம் ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது, ஞானிகள் காட்டிய வழியில் நம்மைக் காத்திடும் அந்த தெய்வ குணத்தை வளர்ப்போம்.

அந்த மெய்ஞானிகள் சென்ற வழியில், தெய்வ சக்தியைப் பெறுவோம். தெய்வீக நிலையாக, இந்த உடலுக்குப் பின் அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

ஆலயம் வரும் அனைத்து மக்களும், அந்த தெய்வீக குணம் பெறத் தவமிருப்போம். எமது அருளாசிகள்.