ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 13, 2013

என்றும் நிலையான ஒளிநிலை வேண்டுமா? மீண்டும் உடல் பெறும் இன்னல் வேண்டுமா?

1. என்றும் நிலையாக இருக்கும் ஒளிநிலை வேண்டுமா? மீண்டும் உடல் பெறும் இன்னல் வேண்டுமா?
என்னைப் பாறை மீது அமர்த்தி,
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய்.
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லா இவ்வுலகம் உனக்கு சதமா?
என்று எதை நீ சதமாக்க வேண்டும்? எதை நீ எல்லையாக வைக்க வேண்டும்? என்று கேட்கின்றார்.

இந்த மனித உடலைக் கொண்டு, எல்லையாக வகுத்து
இன்று விண்ணுலகில் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி,
இன்றும் நிலையாக இருக்கும் அந்த எல்லையை அடைகின்றாயா?

அல்லது, எல்லையற்ற நிலைகள் கொண்டு, மீண்டும் உயிரினமாக மாறியபின் எல்லையற்ற உடலுக்குள் உட்புகுந்து, பாம்பினத்தில் இருந்து மீண்டும் மனித இனத்திற்கு வரும் பொழுது, எத்தனையோ இன்னல்கள் பட வேண்டும் அதை நீ விரும்புகின்றாயா?

“எதிலே நீ போக விரும்புகின்றாய்?
இதை நீ உணர்ந்து கொள்”
என்று குருநாதர் உணர்த்தினார் மலை மீது வைத்து (ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள மலை).
2. யாம் கதையைச் சொல்லவில்லை, மனிதன் முழுமை அடையும் வழியைத்தான் சொல்கின்றோம்
யாம் எதையோ கதையைச் சொல்கிறோம் என்று எண்ண வேண்டாம். மனித வாழ்க்கையில் யார் யார் எப்படியெல்லாம் பேசினார்கள் என்று பதிவு செய்து வைத்திருக்கின்றீர்கள்.

அவன் இப்படிச் செய்தான், இவன் இப்படிச் செய்தான் என்று நினைக்கும் பொழுது இந்த எண்ணமெல்லாம் உங்களுக்குள் கஷ்டத்தையும், வேதனையையும், நோயையும், உண்டாக்கிக் கொண்டுள்ளது.

இதைப்போல, சாமி (ஞானகுரு) சொன்னார் என்று நினைக்கும் பொழுதெல்லாம்
அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் புகுந்து,
உங்களையறியாது வந்த தீமைகளை நீக்க இது உதவும்.

அருள்ஞானிகள் நம்மைக் காக்க எத்தனையோ வகையான ஆற்றல் மிக்க சக்திகளை அவர்களுக்குள் கவர்ந்து, அதை வளர்த்து வெளிப்படுத்தியுள்ளார்கள்.

நமக்குள் வரும் தீமையை அகற்றிட, அருள் ஞானிகளின் ஆற்றலை நம்மையறியாது எண்ணி ஏங்கும் பொழுது, அந்த உணர்வுகள் நமக்குள் புகுந்து, தீமையை அகற்றிடும் சக்தியாக செயல்படுகின்றது.

அத்தகைய சக்திகளை நீங்களும் பெறவேண்டும் என்றுதான், நமது குருநாதர் ஒரு பித்தனைப் போன்ற நிலையிலிருந்து எமக்கு அருளியதை உங்களுக்கும் உபதேசிக்கின்றோம்.