1 ஞானகுருவின்
தவம்
யாம் உள்ளத்தாலே, எல்லோரையும் தெய்வமாகத்தான் மதிக்கின்றோம். யாரையுமே. மனிதன் என்ற நிலைகள் கொண்டு, அவர்கள் எந்தத் துன்பப்பட்டு, எந்த இன்னல்கள்படுகின்றார்களோ, அந்த இன்னலிலிருந்து மீளவேண்டும் என்றுதான், யாம் இந்த ஜெபம் எடுத்தது.
ஜெப காலங்களில் நல்ல அலைகளைப் பரப்பி, அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கவேண்டும் என்றுதான், அத்தனை பேருக்குமே, எல்லோருடைய நிலைகளிலும்,
அவர்கள் அறியாமல் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கக்கூடிய
இன்னல்களிருந்து மீட்க வேண்டும் என்பதற்காகத்தான்,
ஆதிசங்கரர் வழியில், அபரிமிதமாகக் கொடுத்தது.
சிக்கலிலிருந்து விடுபடாதபடி, நம் சிந்தனையின் நிலைகளில், நாம் மீளமுடியாத நிலைகளில் இருக்கிறோம். இதைப்போன்ற நிலைகளில் எல்லாம், நாம் எடுக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறும் சந்தர்ப்பங்களை, நாம் பயன்படுத்துவதற்குத்தான், யாம் ஜெபத்திலிருந்தோம்.
எம்முடைய நிலைக்கு இருக்கும்போது, வேறோரு நிலை. ஆனால், மகரிஷிகளின் அருள் ஒளி வரப்படும்பொழுது, எல்லோரும் அந்த நிலை பெறச் செய்வதற்குத்தான், இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியதுதானே தவிர, எமக்காக இல்லை.
எம்மீது பாசத்தைச் செலுத்தும்போது, அந்தப் பாசத்தின் நிலைகள் கொண்டு, எமக்கு அளவு கடந்த பாசம் இருக்கும். அந்தப் பாசத்தின் நிலைகள் கொண்டுதான், நீங்கள் ஒவ்வொருவரும் சிரித்த முகத்துடன் இருந்தால்தான், எமக்கு அந்த சக்தி என்று, பலமுறை யாம் சொல்லியிருக்கிறோம்.
யாரையும் குறை கூறியோ, அவர் செயல்களின் நிலைகளையோ செயல்படுத்துவதற்கு அல்ல. ஆக, இதைத்தான்
யாம் ஒவ்வொரு நிமிடமும்,
யாம் குருவிடம் வணங்குவதெல்லாம்,
யாம் ஜெபம் பண்ணுவதெல்லாம்,
ஒவ்வொரு மனிதனுடைய உயிரைத்தான்,.
அவர்கள் நல்லவராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும்.
நீங்கள் வளர வேண்டும் என்றும், உங்களிடத்தில் யாம் மகிழ்ச்சியைத்தான் எதிர்பார்க்கின்றேனே தவிர, ஒருவருக்கு ஒருவர் முகம் கோணி, முகம் சுருங்கி இருப்பதைப் பார்ப்பதற்காக வேண்டி, யாம் இதைச் செய்யவில்லை.
ஆக, பல இன்னல்களை யாம் பட்டோம். மகரிஷிகளின் அருள் ஒளியை யாம் பெற்றோம். அதை நீங்களும் பெறுவதற்குத்தான், அதற்குத்தான் உங்களிடம் யாம் உபதேசிப்பது.
நமது குரு, எமக்குப் பல ஆற்றலான சக்திகளைக் கொடுத்தாலும், காட்டிற்குள் எம்மை அங்கு துன்புறச் செய்து, இந்த உணர்வின் எண்ணங்கள் மற்ற மிருகங்கள் பக்கம் அது சாடும்போது, அதனுடன் நிலைகள் என்னவாகிறது? என்று காட்டினார்.
அதனுடைய உணர்வின் தன்மையை, நமக்குள் இருக்கக்கூடிய சக்தியைக் கொண்டு, அதைத் துன்புறுத்தக்கூடாது என்றார்.
அதைப்போன்றுதான், இப்போது ஒருவருடைய உடலிலிருந்து துன்பமூட்டுவது ஒரு ஆன்மா என்றால், கடுமையான நிலைகள் கொண்டு வாக்காக, அதிகமாக எண்ண அலைகளைப் பாய்ச்சினால், இது போய் அதை அடக்கும்.
ஆனால், அவருடைய உடலிலுள்ள நல்ல குணங்களை அது மாற்றிவிடும். அந்த மாதிரித் தொல்லையும் உண்டு. ஆக, அதற்காக
அந்த மெய்ஞானியினுடைய அருள் ஒளியை,
எண்ணத்திற்குள் எண்ணச் செய்து,
அதைச் சுவாசிக்கச் செய்து,
இந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கச் செய்வதற்குத்தான்,
இதைச் செய்கின்றோம்.
இவையெல்லாம் மற்றவர்கள் பேசுவது போன்று, நாம் ஜோசியம் சொல்லி சாமியாராக வந்து மற்றவரிடம் புகழ் தேடுவதற்காக அல்ல. நீங்கள் ஒவ்வொருவரும், மகிழ்ச்சியான எண்ணங்களை எப்பொழுது வெளியிடுகிறீர்களோ, அந்த மகிழ்ச்சியான எண்ணத்திலேதான், எமக்குள் எடுத்துக் கொண்ட சக்தியின் தன்மையை, யாம் பார்க்க முடியும்.
அதுவரையிலும், “எம்மைத் திட்டினாலும், திட்டுபவரைத் திட்டியதாக எண்ணுவதில்லை”. ஆக, அங்கே உணர்வின் தன்மை மெய் ஒளியின் நிலைகளில், மகிழ்ச்சியைக் காணுவதுதான் என்னுடைய வழி.
ஆக, யாருடைய நிலைகளையும் புண்படுத்துவதில்லை.
புண்படும் நிலைகளுக்கு விடமாட்டேன். அதற்காக வேண்டி,
அந்த உடலில் இருக்ககூடிய,
உயிரின் தன்மையைப் பிரார்த்திப்பேன்.
ஆக அந்த உடலின் நிலைகளை மகிழ்ச்சியின் நிலைகளுக்கு பெற வேண்டும். இருள் சூழ்ந்திருக்கும் நிலைகளிலிருந்து விடுபட்டு, ஒவ்வொரு நிமிடத்திலும், நமக்குள் மகிழ்ச்சியின் நிலைகள்தான் தோன்ற வேண்டும்.
இந்த உணர்வின் நிலைகள், இன்று சூரியன் ஒளியாகச் சென்றாலும், இன்று சப்தரிஷி மண்டலங்கள் ஒளியாகச் சென்றாலும், பாசத்தின் நிலைகளிலேதான், பல ஆயிரம் மக்களின் நிலைகளில், எண்ணங்கள் உருவாக்கச் செய்து, அந்த உணர்வின் அலையை எடுத்துத்தான், இங்கு மனிதர்களாக வாழ்ந்தார்கள், மகரிஷிகள்.
மகரிஷிகள், அவர்களுக்குள் எண்ணத்தின் நிலையை ஒளியாக மாற்றி, விண் சென்றார்கள். அத்தகைய நிலைகளைத்தான், உங்கள் அனைவரையும் அடையச் செய்யவேண்டுமென்று, ஒவ்வொரு நிமிடமும் யாம் செயல்படுகின்றோம். எமது அருளாசிகள்.
2. ஞானகுருவின்
மகிழ்ச்சி
நீங்களெல்லாம் நன்றாக மகிழ்ச்சியாக
இருப்பதுதான், எமது குறிக்கோளே தவிர, பிறர் மாதிரி, என்னை நீங்கள் கௌரவமாக மதித்துப்
போற்ற வேண்டுமென்பதல்ல.
எப்பொழுது நீங்கள் சந்தோஷமாகச் சொல்கிறீர்களோ, அதுதான் எமக்கு
மகிழ்ச்சி. எம்மைக் கண்டவுடன்,
“அப்படி இருக்கிறது, இப்படி இருக்கிறது” என்று பெருமை பேசுவதற்கு அல்ல.
நாளை அதே நிலையை எதிர்ப்பார்த்து
இருந்து,
அது இல்லையென்று சொன்னால்,
பெருமை ஒரு நொடிக்குள் போய்விடும்.
எமக்குள் இருக்கக்கூடிய பெருமை,
எப்பொழுதுமே நீங்கள் எல்லாம் மகிழ்ந்து,
“நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்.
மகிழ்ச்சியான நிலையில் தொழில்
செய்கிறோம்,
மகிழ்ச்சியான நிலைகளில் இருக்கிறோம்”
என்று சொல்வதுதான் அது ஒரு
பெருமை.
அந்தப் பெருமையைத்தான் நான்
எதிர்ப்பார்க்கிறேனே தவிர, எம்மைப் போற்ற வேண்டுமென்பதற்காக வேண்டி அல்ல. உங்களில்
தவறிருந்தால், அதை நிவர்த்திக்க வேண்டி ஏதாவது செய்துதான் ஆக வேண்டும்.
அதற்காக வேண்டி, தவறை வளர்க்கச்
சென்றால், அப்பொழுது நான் புகழுக்கு எதிர்ப்பார்க்கிறேன் என்றுதான் அர்த்தம். எப்படி இருந்தால் என்ன? நீங்கள் எம்மை
மதித்தால் போதும், என்ற இந்த மதிப்பு அல்ல.
நீங்கள், எப்பொழுதுமே மகிழ்ச்சியான
நிலைகளில் இருக்கிறீர்கள் என்றால், அதுதான்
எமக்கு பெருமையும், புகழுமே தவிர வேறொன்றுமில்லை. இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக்
கொள்ளுங்கள்.
எல்லோரையும் போல, உங்களிடம் மகிழ்ச்சியை எதிர்ப்பார்க்கிறோம்.
“சாமி” உங்களிடம்
இப்படி இருக்கிறார், அப்படி இருக்கிறார் என்று புகழ்ந்து பேசி, அந்தப் புகழ்ச்சியினுடைய
மறைவில், அது ஒரு நிமிடம் கூட நிற்காது. அதை யாம் எதிர்ப்பார்க்கவே இல்லை.
ஆக எமது குருநாதர் காட்டியபடி,
அவர் ஏழ்மையாக இருந்து, ஒரு பைத்தியக்காரத்தனமாக இருந்து, எல்லா நிலைகளையும் சுட்டிக்காட்டி,
உலகம் இப்படி இருக்கிறது, குப்பையிலிருந்துதான் மரம் சத்து எடுக்கிறது,
அதைப் போல, குப்பையான இந்தச்
சரீரத்திலிருந்து, சத்தான எண்ணங்களைக் கூட்டுவோம். நீ சரீரத்தைக் குப்பையாக எண்ணினாலும், உனக்குள் இருக்கக் கூடிய
அந்த நல்ல எண்ணத்தை, அந்த வைரத்தை, குப்பையான சரீரத்திலிருந்து விளையச் செய், அதுதான் சொந்தம் என்றார் குருநாதர்.
ஆக ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும்
எத்தனையோ துன்பங்கள் இருக்கிறது. அந்தத் துன்பங்களை விளைவிக்கக் கூடிய எண்ணங்கள் இருக்கிறது.
அந்தத் துன்பத்தை விளைவிக்கக் கூடிய எண்ணங்களிலிருந்து அவர்களை மீட்க வேண்டும்.
ஆகவே, “அவர்களிடமிருந்து
நீ மகிழ்ச்சியை எதிர்பார். அந்த மகிழ்ச்சியே உனக்குச் சொர்க்கம்” என்ற நிலைகளை நமது
குருநாதர் எமக்குச் சொன்னதினாலே, நீங்கள் மகிழ்ந்து, என்றைக்கு எம்மிடத்தில் சந்திக்கின்றீர்களோ,
அதில்தான் யாம் சொர்க்கத்தைக் காண்கிறோம்.
ஆகையினாலேதான் சிலருடைய நிலைகளில்
திடீரென்று சொன்னவுடன், நாம் யாரையுமே முதலில் பழித்துப் பேசிவிடக்கூடாது.
ஆக, அந்தக் குறைபாடுகள் இருந்தாலும், நாம் அணுகி, நிவர்த்தி
பண்ணுவதற்கு என்ன வழியோ, அதற்கு நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
சொல்லிப் பார்ப்போம்,
முடியவில்லை என்கிற பொழுது,
அது அவருடைய சந்தர்ப்பம்.
அதற்காக வேண்டி, முடியவில்லையே,
அவர் தவறு செய்கிறார் என்ற உணர்வை,
நமக்குள் எடுத்துக் கொள்வதற்கல்ல.
ஆனால், தவறின் நிலையில் அவர்கள்
இப்படிச் செய்கிறார்களே என்று நாம் எண்ணினோமானால், அவர்களுடைய உணர்வை நமக்குள் வளர்த்துக்
கொள்கிறோம்.
நாம் செய்ய வேண்டியது என்ன?
யார் எதைப் பேசினாலும், குறைத்துப் பேசினாலும்,
அவர்கள் வாழ்க்கையிலே அவர்கள்
உயர வேண்டும்,
அவர்களை அறியாமல், அவர்களுக்குள்
துன்பத்தைத் தோற்றுவிக்கும்
அந்த உணர்வுகளிலிருந்து மீள
வேண்டும் “ஈஸ்வரா”
என்று உங்களுக்குள் நின்று,
உயிரான நிலைகளில் நேசிக்கும்,
நம் உயிரை எண்ணி நாம் சுவாசிக்கும்
பொழுது,
இந்த உணர்வு நமக்குள் விளைகின்றது.
அந்த நிலைகளில், நாம் அடிக்கடி
செய்தோமானால், அவர்களை அடிக்கடி எண்ணத் தொடங்கினோமேயானால், அவர்களுக்குள் நல்லது
உண்டாகும். இதைத்தான் யாம் உங்களிடம் எதிர்பார்ப்பது.