ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 10, 2012

குலதெய்வங்களை வணங்கும் முறை

1. இன்றைய குலதெய்வங்கள் உருவான நிலைகள்
இன்றைய காலத்தில், குலதெய்வங்களை வணங்கும் முறைகள் அனைத்தும், அரசர்கள் காண்பித்த நிலைகளிலேயே தொடர்கின்றது. முதல் மூல குலதெய்வம், எதுவென்று கேட்டுப் பாருங்கள்? சொல்வார்கள், தீயில் மாண்டவர், எங்களுக்கு குலதெய்வமாக இருந்து, உதவிகளைச் செய்கின்றார் என்று கூறுவார்கள்.

அரச காலத்தில், அரசர்கள் தாங்கள் போர்களுக்குச் செல்லும் பொழுது, மந்திரங்களைக் கையாள்வார்கள். கூட்டமைப்பாகப் போர்களுக்குச் செல்லும் பொழுது, அதில் யாராவது ஒருவர், தங்கள் குழந்தையைக் கொடுத்து உதவி செய்வார்கள். அதனுடைய தாய், தந்தையரும் அங்கு இருப்பார்கள். இவர்களை, குலதெய்வங்களுக்குத் தாய் என்று கூறுவார்கள்.

இத்தகைய நிலைகளில் அவர்களை வளர்த்து, அதற்கு என்னென்ன சாங்கியங்களோ அதைச் செய்து, அதற்கிணையான உணர்வுகளையும் கொடுத்து, பழி தீர்க்கும் எண்ணங்களையும், எதிரிகளை வீழ்த்தும் முறைகளையும் அவர்களுடைய உணர்வில் ஏற்றுவார்கள். அதன்பின், அவர்களைத் தீயில் எரித்து, இந்த மந்திர ஒலிகளில் எடுத்து ஏவல், பில்லி, சூன்யம் என்று, எதிரிகளின் மேல் பாய்ச்சுவார்கள்.

படைகளுக்குத் தலைமை தாங்கியவர்கள், அவர்களுடைய குல வழியில் நிறையப் பிரிக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, ஆக,  ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு குலதெய்வம் என்ற நிலையாகிவிட்டது. 

அதிலிருந்து பிரிக்கப்பட்ட உணர்வுகள்தான், சாதாரண மனிதனுக்குள் நுழைக்கப்பட்டு, இன்று நாம் குலதெய்வங்களாக வணங்கி வரும் நிலைகள். இதன் வழியில் உடலை விட்டுச் சென்றவர்களை, நாம் குடும்பப் பற்றுடன் ஈர்க்கப்படும்பொழுது, குடும்பத்தில் மீண்டும், அந்த உணர்வின் தன்மை நுழையும் பொழுது, பகைமை என்ற நிலைதான் வளர்க்கின்றது.

ஒரு சமயம் ஒரு பெண், தன் குல தெய்வத்தை வணங்கும் பொழுது, அந்தப் பெண்ணிடத்தில் அருளாடல் ஏற்பட்டு, கீழே விழுந்து, கை எலும்பு முறிந்துவிட்டது. இதனை, குருநாதர் எமக்குக் காண்பித்து விளக்கினார். குலதெய்வம் என்று ஆட்டம் ஆடியது. அந்தக் குடும்பத்திற்கு, அருள் வாக்கு கொடுத்தது. ஆனால், அந்த ஆன்மா கால் பிசகி, கீழே விழும் பொழுதுதான், அந்தப் பெண்ணிற்குக் கை முறிந்தது.

எல்லோரையும் காக்க வந்த அந்த ஆன்மா, முதலில், அந்த பெண்ணைக் காக்க வேண்டுமல்லவா? என்று குருநாதர் வினாக்களை எழுப்பி, இதுவெல்லாம் எந்த வழியில் நடந்து கொண்டிருக்கின்றது? என்ற நிலையைக் காட்சிபூர்வமாகக் காண்பித்து, இந்த உணர்வுகள், எப்படி தொடர் வரிசை கொண்டு இங்கே புகுகின்றது, அவர்களுடைய எண்ணங்கள், எப்படி இங்கே செயல்படுகின்றது? என்ற நிலையைத் தெளிவாகக் காண்பித்தார்.

மனிதன் ஒருவன் இறந்தபின், அவனுடைய நிலை என்னவென்று நீங்கள் அறிதல் வேண்டும். இதனின் நிலைகளை, நாம் கண்கூடாகவும் பார்க்கின்றோம். ஒருவன் உடலில் ஆவி புகுந்தபின், ஆவியை விரட்டுகிறோம் என்று, என்னென்னவோ செய்கின்றனர். ஆனால், முடிவதில்லை.

மனித உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மா, இன்னொரு உடலுக்குள் புகுந்து, கொன்றிடும் நிலையும், புசிக்கும் நிலையும் அடைகின்றது. மனிதனின் உணர்வுகள் இப்படித்தான் மாற்றப்பட்டு, தேய்பிறை என்ற நிலைக்கே செல்கின்றது. ஆகவே, மனித வாழ்க்கையில், நாம் மீண்டும் தேய்பிறை என்ற நிலைக்குச் செல்லாது, நம் உணர்வுகளை அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில், செலுத்த வேண்டும்.

தியானவழி அன்பர்கள் அனைவரும், ஒருவருக்கொருவர், இதைப் போல தியானத்தைக் கடைப்பிடித்து, மூதாதையர்களின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து, உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்திடும் நிலையைப் பழகவேண்டும். 

இதன் தொடர்கொண்டு, நம்முடைய எண்ணங்களும், அங்கே துரித நிலையில் செல்கின்றது. விண்ணின் ஆற்றலை நம்முள் கவர்ந்து, நம் இரத்த நாளங்களில் பெருக்க உதவுகின்றது.

ஆகவே, இதன்வழி கொண்டு,  நாம் மூதாதையர்களின் உயிராத்மாக்களை, விண் செலுத்துவோம். விண் சென்ற மூதாதையர்களின் அருள் துணை கொண்டு, நாம் நம்முள் விண்ணின் ஆற்றலைப் பெறுவோம். நாம் நம்முள் அறியாது சேர்த்த இருளை அகற்றுவோம். உடல் பெறும் உணர்வை நீக்கி, பிறவியில்லாப் பெருநிலை பெறுவோம்.

எவரொருவர், இதன் உணர்வு கொண்டு தம்முள் உயர்ந்த உணர்வின் தன்மையை வளர்க்கின்றனரோ, அவர் சப்தரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து, தெளிந்த மனதுடன், மகிழ்ந்திடும் உணர்வுடன், தொழில் வளத்துடன், மன நலத்துடன், மன பலத்துடன், உடல் நலத்துடன் வாழ்ந்து, மரணமில்லாப் பெருவாழ்வு என்ற, பெருவீடு பெருநிலையைப் பெறும் தகுதியைப் பெற்று, எல்லாக் காலத்திலும் பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருள் ஆசிகள்.
முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை
நம்முடைய முன்னோர்கள் நம்மை வாழ வைத்து, மனிதனாக உருவாக்குவதற்காக, அவர்கள் உடலில் அறியாது நஞ்சைச் சேர்த்து, நஞ்சு கொண்ட உணர்வு கொண்டு, உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிராத்மாக்களை, நாம் பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.

நமக்காகப் பல துயரங்களைப்பட்ட, நம் குலதெய்வங்களின் உயிராத்மாக்களை, கூட்டமைப்பாக, வலுக்கொண்ட எண்ணங்களைக் கூட்டி, நம்மைக் காத்த உயிரான்மாக்களைப் பிறவா நிலை பெறச் செய்யவேண்டும். அவர்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து, அந்த உணர்வின் ஆற்றலைக் கலக்கச் செய்து, அடுத்து நஞ்சான உடலாகப் பெறும் உடலைக் கருக்கச் செய்து, அவர்கள் அங்கே செல்ல வேண்டும்.

பூமியின் ஈர்ப்புக்குள் சிக்கி, நம் உடல் வளர்ந்தது. பூமியின் ஈர்ப்புக்குள் வந்து, உணர்வுகள் தோன்றியது. பூமியின் ஈர்ப்புக்குள், நாம் வாழ்ந்து பழகியவர்கள்.

ஆக, இதைக் கடந்து, நாம் செல்ல வேண்டும் என்றால், இந்தப் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், சூட்சும உடலடைந்த முன்னோர்களை விண்ணுக்குத் தள்ளி, சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கச் செய்து, நம் மூதாதையர்களின் உயிராத்மாக்களை, அங்கே சுழலச் செய்வதுதான் நம் கடமை.

நம்மை ஈன்ற தாய் தந்தையை, தன்னை வளர்த்திட்ட முன்னோர்களின் உயிராத்மாக்களை, நாம் விண் செலுத்துகின்ற பொழுது, நமது எண்ணமும் அங்கே செல்கின்றது. இதுவே கூர்ம அவதாரம்.

சூரியனைச் சுற்றி மற்ற கோள்கள் சுழல்வது போல, முதல் மனிதன் அகத்தியன் துருவத்தையடைந்து, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமானான். அதன் ஈர்ப்பு வட்டத்தில், (சப்தரிஷி மண்டலம்) அவரைப் பின்பற்றிச் சென்றவர்கள், எண்ணிலடங்காது, முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்வார்கள். நாம் அனைவரும், அங்கே செல்ல வேண்டும்.
முன்னோர்களை விண் செலுத்தும் முறை
பௌர்ணமி தியானக் காலங்களில், தியானம் எடுத்துக் கொண்டவர்கள், இறந்தவர்களுடைய உயிராத்மாக்களை விண் செலுத்த வாரத்தில் ஒரு நாள், எண்ணச் சொல்கின்றோம்.

அப்படி நாம் எண்ணி, இந்த தியானம் இருந்தபின், சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும், எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு, நாம் இறந்தவர்களை எண்ணி, அந்த உயிராத்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று, நாம் எண்ணிச் சொன்னால், அந்த உயிராத்மா இன்னொரு உடலுக்குள் போய் வெளியே வந்தாலும் கூட, நாம் இதைப் போலச் சொல்லும் போது, அவர்கள் அந்த சமயம், வெளியிலே வந்தால், அந்த உயிராத்மாவை விண் செலுத்திவிடலாம்.

தியானம் எடுத்துக் கொண்ட அனைவரும் அந்த உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்களை எண்ணி, சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று, இந்த ஒளியின் தன்மையைக் கூட்டி, இந்த உணர்வின் தன்மையை எண்ணும்போது, நம் புலனறிவிற்கு, வலுக் கொடுக்கின்றோம்.

இதன் வழிகொண்டு, நாம் சரீர நிலைகளில் இருந்தாலும், உடலை விட்டுப் பிரிந்தவர்கள் சூட்சும சரீரமாக இருக்கிறார்கள். நாம் ஆத்ம சுத்தி செய்துகொண்டு, இந்த ஆத்மாக்களின் நிலைகள், சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று, உணர்ச்சியுடன் உந்தி, நாம் மேலே தள்ளுகின்றோம்.

ஆனால், மந்திரக்காரர்கள் என்ன செய்கிறார்கள்? மந்திரத்தைச் சொல்லி, ஒரு உயிராத்மாவை எந்தெந்த மணங்கள் கொண்டு, அவர்கள் ஜெபித்தார்களோ, அந்தந்தக் குணங்களுக்குத் தக்கவாறு, இன்று நாம் மந்திரத்தை ஜெபிக்கும் போது, அந்தந்த ஆத்மாவை இங்கே இழுக்கபட்டு, பிரிக்கப்பட்டு, நாம் மந்திர நிலைகளைச் செய்கின்றோம். இது ஈர்க்கும் தன்மை.

ஆனால், ரிஷிகளுடைய தன்மையோ, மெய் ஒளியின் தன்மையை எடுத்துச் செயல்படுத்தியவர்கள். இறந்த உயிராத்மாக்களின் நிலை செயலற்றது. அவர்கள் ஜெபம் பண்ணவில்லை. ஒன்றும் பண்ணவில்லை. உணர்வின் தன்மை பிரிந்திருந்தாலும், உணர்ச்சியின் தன்மை நம் உடலிலே இருக்கின்றது.

முறைப்படி இந்தத் தியானம் செய்து கொண்டவர்கள், அந்தக் குடும்ப சம்பந்தப்பட்ட உணர்வுகள் இருப்பதனால், இதை எடுத்துக் கொண்டவர்கள், இறந்தவர்களுடைய உயிராத்மாவினுடைய நிலைகளை எண்ணி, அது சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று எண்ணும்போது, அது பந்து போல உள்ளே தள்ளிவிடும். விண் செலுத்தலாம்.

இல்லையென்றால், புவியின் ஈர்ப்புக்குள்தான் நிற்கும். இப்படி நாம் விண் செலுத்தினால், எப்படி மனிதனாகப் பிறந்து ஒளியாக மாற்றி, இன்று சப்தரிஷி மண்டலத்தில் இருக்கின்றார்களோ, அந்தச் சப்தரிஷி மண்டல ஒளியலைகளுடன் நாம் கலக்கலாம்.

ஆகவே, இவ்வாறு அந்த சப்தரிஷி மண்டல ஒளியலைகளை நமக்குள் சேர்த்து, நம்மைச் சேர்ந்தவர்கள் இறந்துவிட்டால், நாம் கூட்டு ஐக்கிய தியானம் செய்கின்றோம்.

இவ்வாறு செய்தால், ஒவ்வொருவருடைய நிலைகள் நாம் பாசத்தினால், வளர்த்துக் கொண்ட நிலைகள் கொண்டு, ஆத்ம சுத்தி செய்து, இறந்தோர் வீட்டிலே, நாம் அனைவரும் சேர்ந்து, அந்த உயிராத்மாவின் நிலைகள் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும் என்று, எல்லோரும் இதே தியானமிருந்து, அந்தக் குடும்பத்தாருடன் சேர்ந்து இணைந்து, நாம் இதைச் சொல்லுவோமேயானால், இந்த உணர்வுகள் பெரும் நதியாக மாறுகின்றது.

அப்பொழுது, இந்த உயிராத்மாவை நாம் உந்தித் தள்ளி, உயிராத்மாவைப் புனிதம் பெறச் செய்யலாம். இப்படித் தான் அன்று மெய்ஞானிகள் அதைச் செய்தார்கள்.

ஒரு நூலுக்கு வலு குறைவு. பல நூலை ஒன்றாகத் திரித்து, கயிறாக மாற்றும் பொழுது, அதனின் வலு கூடுகின்றது. இதைப் போன்றுநாம் அனைவரும் மகரிஷிகளின் அருள் உணர்வின் வலிமையை நமக்குள் ஏற்றிக் கொண்டு, நம்முடன் வாழ்ந்து, வளர்ந்து, உடலைவிட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை, சப்தரிஷி மண்டலத்திற்கு உந்தித் தள்ளவேண்டும். 

அப்படியில்லாது, நாம் சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்வதற்கு, வேறு மார்க்கம் கிடையாது.

எவருக்கோ காசு கொடுத்து, முன்னோரை மோட்சத்திற்கு அனுப்புவேன் என்றால், அது முடியாது. நீங்கள்தான், உங்கள் உணர்வின் துணைகொண்டு, அருள்ஞானிகள் காண்பித்த அருள்வழி கொண்டு, மூதாதையர்களின் ஆத்மாக்களை விண்செலுத்த வேண்டும்.

ஒருவர் உங்களுடன் வாழ்ந்து, பின், உடலை விட்டுப் பிரிந்திருந்தால், 1 - லிருந்து  48  நாட்களுக்குள் அந்த ஆன்மாவைக் குறித்து, மகரிஷிகளின் அருள் உணர்வின் துணை கொண்டு, அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எண்ணி, தியானித்தல் வேண்டும்.

ஒரு இராக்கெட், உந்து விசையின் ஆற்றலால் விண்ணில் தன் எல்லையை அடைகின்றது. பின், அங்கிருந்து தான் கவரும் உணர்வுகளைத் தரை மார்க்கத்திற்கு அனுப்புகின்றது. 

நட்சத்திரங்கள், விண்ணின் ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து, பெருக்கி, விஷத்தன்மை கொண்ட கதிரியக்கப் பொறிகளை உருவாக்கும், வல்லமை பெற்றது. இப்படி உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள், மற்ற பொருள்களுடன் கலந்து, புவிக்கு வருகின்றது. இவைகளைத்தான் விஞ்ஞானி பிரிக்கின்றான், சக்தி வாய்ந்ததாக இணைத்து, இராக்கெட்டில் ஏவுகின்றான்.

உணர்வின் அதிர்வுகளில் இருக்கும் மின்னணுவின் கதிர்களை, தனியாகச் சேமிக்கின்றான். உணர்வின் அதிர்வுகளை அதற்குள் இணைக்கின்றான். எப்படி, மின்னல், ஒளியாக்கும் உணர்வுகளை பூமிக்கு அழைத்து வருகின்றதோஇதைப் போன்று, அது இயக்கும் தன்மை கொண்டு இங்கே ஈர்க்கப்பட்டு, அந்த உணர்வின் தன்மை கொண்டுவிண்ணின் ஆற்றலை அறிகின்றான் விஞ்ஞானி.

இதைப் போன்றுதான், நம்முடைய முன்னோரின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தல் வேண்டும். ஆனால், சாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருந்தால், போக முடியாது.

முதலில், உங்களிடத்தில் அருள் ஞானத்தின் நினைவாற்றலைப் பெருக்குதல் வேண்டும். அதனின் உணர்வாக, ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இதன் உணர்வின் வலுவின் துணைகொண்டு, நம்முடன் வாழ்ந்து, வளர்ந்து, உடலைவிட்டு பிரிந்து சென்ற உயிரான்மாக்களை, இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் பரவாயில்லை, நாம் தொடர்ந்து தியானிப்பதன் மூலம், அந்த உயிரான்மா இன்னொருவரின் உடலை விட்டு வந்தபின், விண் செலுத்தி, இன்னொரு உடல் பெறாத நிலைகளை உருவாக்கலாம்.

இன்றைய நிலைகளில், முன்னோர்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்தியபின்அதன் வழித் தொடர் கொண்டுதான், நாம் விண்ணின் ஆற்றலைப் பெறமுடியும்

மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்திய பின், அதன் உணர்வின் துணை கொண்டு உங்கள் குடும்பத்தில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு, அருள் ஞானியின் உணர்வை  உங்களுக்குள் துணை கொண்டால், உங்களை, அங்கே அழைத்துச் செல்கின்றது, உங்களுடைய உயிர்.

அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, யாம் உங்களுக்குள் பதிவு செய்ததன் நிலை கொண்டு, அருள் மகரிஷிகளின் அருளை எண்ணி, உங்களுடைய மூதாதையர்களின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யுங்கள், உடல் பெறும் உணர்வைக் கரையச் செய்யுங்கள்.
உடலில் உள்ள ஆன்மாக்களை ஒளிப்படுத்தும் நிலை
நாள் முழுவதற்கும், நாம் உடலிலே உழைக்கின்றோம். ஒரு பத்து நிமிஷம் நாம்மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற வேண்டும்”, “எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும்என்று ஆத்மசுத்தி செய்து நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

நம் வாழ்க்கையில், நம்மையறியாமல் நாம் தவறு செய்யாமலே, நம்முள் புகுந்து பல எண்ணங்களைத் திசைத்திருப்பும், அல்லது பிறிதொரு ஆத்மா நம் உடலுக்குள் வந்து, நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும், அல்லது பாசத்தாலே ஒருவருக்கு நன்மை செய்தாலும், அந்தப் பாசத்தின் உணர்வு கொண்டு, ஒரு ஆத்மா தனக்குள் வந்து, துன்பங்களை விளையவைத்தாலும், நாம் இந்த தியானத்தின் நிலைகள் கொண்டு, நாம் செய்த நன்மையின் தன்மையைக் காக்கவும் முடியும்.

அதே சமயம், அந்த உயிராத்மாக்களை விண் செலுத்த வேண்டும். அவ்வாறு விண் செலுத்தி விட்டால், பாசத்துடன் இருக்கக்கூடிய நிலைகள், நம் உடலிலே இருந்தாலும், அந்த இரு உணர்வின் தன்மை, நம் உடலுக்குள் ஆற்றல் மிக்கதாக மாறும்.

அவ்வாறு ஆற்றல் மிக்கதாக மாறி, நாம் அந்த சப்தரிஷி மண்டலங்களை எண்ணினோம் என்றால், அந்த இரு சக்தியினுடைய துணை இருப்பதனாலே, விண்ணிலிருந்து பல ஆற்றல்களை நாம் பெற்று, அதற்கு ஒரு மோட்சத்தை கொடுக்கலாம்.

நாம் செய்த இந்த நன்மையின் தன்மையை, நம் உடலில் பல பிணிகள் இருந்தாலும், அதை மாற்றியமைத்து, மனிதன் என்ற தன் நிலைகள் பெறலாம்.

இதைக்காட்டிலும், இதைப்போல நாம் எடுத்துப் பழகிக்கொண்டால், விஞ்க்ஞானத்தில் வந்த இந்தப் பேரழிவான நச்சுத்தன்மை, காற்றிலே மிதந்து கொண்டிருப்பதல் இருந்து, நம்மைக் காக்க முடியும்