ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 7, 2012

பகைமையை அகற்றும் வழி


1. பிறருடைய தவறைச் சுட்டிக் காட்டும் பொழுது, ஏற்படும் நிலைகள்
நாம் ஒரு மனிதனிடத்தில், நீ செய்யும் தவறுகளிலிருந்து விடுபட்டு, மீண்டு, இந்த வழியில் செல்என்று கூறினால், உடனே அவரிடத்தில் எதிர் நிலையாகின்றது. 

தனக்கு விரோதமாக ஒருவர் சொல்லும் பொழுது, அவர், தமது தாய் தந்தையராக இருந்தாலும் வெறுக்கின்றார். சகோதரனாக இருந்தாலும் வெறுக்கின்றார். நண்பராக இருந்தாலும் வெறுக்கின்றார்.

ஏனென்றால், மனிதர் தமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ, அதன் வழியே அவரை அழைத்துச் செல்கின்றது. ஆனால், அப்படி ஒருவர். மற்றவர்களை வெறுக்கும் தன்மைக்குக் காரணம் என்ன?

குழந்தைகள் விளையாட்டில் ஆர்வமாக இருப்பவர்கள். அதனால், நமது குழந்தையிடமும் விளையாட்டுக் குணம், அதிகமாக இருக்கின்றது. இதனால் அவன் விபத்தில் சிக்குவான், கல்வியில் ஞாபகம் இருக்காது. ஞானம் வராது என்று, நாம் அவனைத் திட்டினால், அப்போது அங்கே எதிர் நிலையாகின்றது.

நாம் கோபமாகப் பேசினால், அவன் நம்மை எதிர்த்து பேசும் நிலை வருகின்றது. இதைப் போன்று,  அவன் நம்மை எதிர்த்துப் பேசும் நிலை வரும் பொழுது, நமக்குள் வெறுப்பின் தன்மை இயக்கி,  அவனின் வெறுப்பைத் தணிப்பதற்கு மாறாக, நாம் வெறுப்பின் உச்சக்கட்டம் அடைந்து,  அவனை உதைக்கும் தன்மை வருகின்றது.

ஆனால், நாம் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வுக்கொப்ப, நமது உயிர் நம்மை இயக்குகின்றது.  நுகர்ந்த உணர்வுக்கொப்ப, உயிர் நம்மை இயக்கினாலும், நமது ஆறாவது அறிவால், நமது உயிரான்மாவை, நம் வழிக்கு கொண்டு வரமுடியும்.

நாம் இதைக் காட்டிலும்,  வலுவான உணர்வுகளை நுகர்ந்தோம் என்றால்,  நமது உயிர்  அவ்வுணர்வின் வழி, நம்மை வழி நடத்தும்.

தீமைகளை நீக்கும் உணர்வுகளை நாம் நுகர்ந்தறிந்தால், நமது உயிர், நம்மிடத்தில் தீமைகளை நீக்கும் உணர்ச்சிகளை ஊட்டி, நமது அங்கங்களைச் செயல்படுத்தும். தீமைகளை நீக்கும் அருள் உணர்ச்சிகள், நமது இரத்தத்தில் அணுவாக உருவாகும்.

இதை போன்று, தீமைகளை நீக்கும் அரும் பெரும் சக்திகளை நாம் நுகர்ந்து, அதன் உணர்ச்சிகளை நம்முள் இயக்கினால், நமது சொல்லில் நயமும், நமது சொல்லைக் கேட்பவரிடத்தில் இனிமையும், நமது சொல்லை ஏற்றுக் கொள்வோரிடத்தில் மகிழ்ச்சியும் வருகின்றது.

2. நமக்குத் தீமை செய்பவருக்கு, நாம் என்ன செய்ய வேண்டும்?
தீமையானவற்றை நாம் காணும்பட்சத்தில், "மகரிஷிகளின் அருள்சக்தி நாம் பெறவேண்டும்" என்று எண்ணி ஏங்கும் பொழுது, நம்மிடத்தில் உணரப்பட்ட தீமை துடைக்கப்படுகின்றது. இதைத்தான் “தெய்வச் செயல்” என்பது.

மேலும், யார் நமக்குத் தீமை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றாரோ,  அவரிடத்தில் "நல்ல உணர்வுகள் வளர வேண்டும்" என்று எண்ணி அதனின் உணர்வை நாம் பரப்பும் பொழுது,  அங்கே கடும் சொல் வராது,  

அது கனிந்திடும் நிலையாகக்  கேட்போரின் உணர்வில் இனிமையானதாகப் பாய்ந்து,  அவரிடத்தில் இருக்கும் தவறை மாற்றி, அவர் நம் மீது கொண்ட பகைமையை நீக்கி,  நட்பினை வளர்க்கும்.  

பிறவிப் பெருங்கடல் நீந்தி,  தன் ஞானத்தால் பிறவி இல்லாப் பெரு நிலையை அடைந்து,   உயிருடன்   ஒன்றி, ஒளிச்சரீரமாக,  இன்றும் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த  மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் ஏக்கத்துடன்,  நமது நினைவின் ஆற்றல் அடிக்கடி அவர்கள் பால் செல்லும்பொழுது,  அவர்களிடம்  நமது  உயிரான்மா இணைந்து, அங்கே சுழலும்  சக்தியாகப் "பிறவா நிலை" என்னும் நிலையை, அடையச் செய்கின்றது.

அவ்வாறில்லாமல்,  நமக்கு தீங்கு செய்பவரைப்   பற்றியே நாம் எண்ணிக் கொண்டிருந்தால்,  இந்த உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா,  இந்த உடலில் வாழ்ந்த காலத்தில் எவரைப் பற்றி என்ணிக்கொண்டிருந்தோமோ,  அவரின் உடலுக்கு இந்த உயிரான்மாவை அழைத்துச் சென்றுவிடும், 

பின், அந்தத் தீங்கின் விளைவை அனுபவிக்கச் செய்து, அதன் மூலம் அவரிடத்தில் விளைந்த உணர்வின் சத்தை, இந்த உயிரான்மா கவர்ந்து, அவரின்  உயிரான்மாவையும் வீழ்த்தி,  இதுவும் வீழ்ந்து, பிறிதொன்றைக் கொன்று புசிக்கும், உயிரினங்களின் ஈர்ப்பிற்குள் சிக்கி,  அதனின் சரீரத்தை இந்த உயிரான்மா பெறுகின்றது. 

ஆகவே, நாம் தேய்பிறை போன்று இல்லாது, வளர்பிறையாக, நமது மெய்ஞானத்தை வளர்க்கும் விதமாக, மெய்ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து,  வாழ்வில் வரும் தீமைகளை ஒடுக்கி,  விண்ணில் நிலைத்த ஒளி சரீரத்துடன் இருந்து வரும் மகாஞானிகளின் ஈர்ப்பில் கலந்து,  நாமும் அந்த ஓளிச்சரீரமாக வாழ்வோம் என்ற பேரவாவுடன் கூட்டுத்  தியானங்களில் ஏங்கி தியானிக்கும் அனைத்து உயிராத்மாக்களுக்கும், எமது ஆசீர்வாதங்கள்.


3. பகைமையை அகற்றிய மகாத்மா காந்திஜி
 ஒருவன் குற்றம் செய்தால், அவனைத் தண்டிக்கின்றோம். இது அரசர்கள் காட்டிய வழி. ஒருவன் ஒரு தவறு செய்கின்றான் அல்லது பிறருக்கு இம்சைகளைச் செய்கிறான் என்றால், அவனுக்கு இம்சை தரக்கூடிய தண்டனைகளையே தந்தனர், அரசர்கள்.

ஆனால் மகரிஷிகளோ, ஒருவர் உடலில் அறியாது புகுந்த, தீமை விளைவிக்கக் கூடிய உணர்வினை நீக்கி, உயர்ந்த கருத்தினை அவரினுள் செலுத்தி,  அவர்தம் உடலில் வரும் தீமையினை அடக்கி, அதற்கு தண்டனை அளித்து, இணைந்து செயல்படும் உணர்வினை, வளர்த்துக் கொண்டார்கள். அதையே மக்களுக்கு உணர்த்தினார்கள்.

மகாத்மா காந்தி, நம்மை இயக்கும் தீய உணர்வுகளில் இருந்து, நாம் விடுபடவேண்டும் என்றும், அதே சமயம், “ஆங்கிலேயர்களும் நம் சகோதரர்களே என்று சொல்லி, அவர்களிடம் இருக்கும், “மற்றவர்களை அடிமைப்படுத்தும் உணர்வைத்தான் விலக்க வேண்டும்  என்று மகாத்மா காந்தி பாடுபட்டார்.

உலக மக்கள் அனைவரும், ஒருவருக்கொருவர் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து, அந்த உடலில் இருக்கும் நல்ல உணர்வின் தன்மையை, சகோதர உணர்வுடன் பாவிக்க வேண்டும் என்பதைத்தான் ராம ராஜ்யம்என்றார்.

நாம் எடுக்கும் உயர்ந்த குணங்கள் எதுவோ, அது மகிழ்ந்திடும் நிலையாக நமது செயல் இருக்கும் பொழுதும், நம் உடலில் இருக்கும் சலிப்பு, சங்கடம், கோபம், குரோதம் போன்ற உணர்வுகள் அனைத்தையும் நீக்கி, மகிழ்ச்சி என்ற உணர்வுகளில் நாம் எண்ணும் பொழுது, நமக்குள் அது ஒருக்கிணைந்து, நம்மை மகிழ்விக்கச் செய்கின்றது. இதுதான் ராம ராஜ்யம்.

வான்மீகி மகரிஷிகள் கொடுத்தருளிய, இராமாயணக் காவியத்தின் உண்மையின் தன்மை கொண்டுதான், காந்திஜி, தமது உயிர், உடலை விட்டுப் பிரியும், கடைசி நொடி வரையிலும் வாழ்ந்தார்.

எல்லோரையும், எல்லாவற்றையும் காக்கும் பல உணர்வுகளுடனும், பிறரைத் துன்புறுத்தா நிலைகளிலும், அஹிம்சைத் தத்துவத்தைக் கடைப்பிடித்து, தென்னப்பிரிக்காவில் வாழும் மக்களுக்கு, நீதி பெற்றுத் தந்தபின், இந்திய நாட்டைக் காக்க வேண்டுமென்ற ஆசை, காந்திஜிக்கு வந்தது.

இந்திய மக்கள், அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால், பல உயிர்கள் பலியாக வேண்டியிருக்கின்றது என்ற உணர்வினை காந்திஜி  உணர்ந்து,  சாந்தத்துடன், ஞானத்துடன், விவேகத்துடன் மக்களை நல்வழிப்படுத்தினார். 

அதாவது, அன்னிய நாட்டிடமிருந்து, நமது மகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வினை மீட்டு, அதை மக்களுக்குக் கிடைக்கச் செய்து, மக்களை நல்வழியில் வாழச் செய்ய வேண்டுமென்ற முடிவை, காந்திஜி தமக்குள் எடுத்து, இந்திய மக்களைப் பண்படும்படி செய்தார்.

காந்திஜி உலக மக்கள் அனைவரும் நம் சகோதரர்என்பதை தமது எண்ணம், சொல், செயலில் வைத்து, இந்திய மக்கள் அனைவரும் தங்களிடமுள்ள பகைமை உணர்வுகளை நீக்கி, அனைவரையும் அரவணைக்கும் தன்மை பெறவேண்டும் என்று எண்ணி, அவர் தனது மன உறுதி கொண்டு, இந்திய மக்களைச் சீர்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படுத்தினார். இதனால், காந்திஜி உலக அரங்கில், அனைவருடைய உள்ளத்திலும் இடம் பிடித்தார்.

காந்திஜி, எதிரிகளையும் கடவுளாக மதித்தார். அவர், தனக்குள் பகைமை உணர்வுகள் இயக்காதபடி தடுத்து, சாந்தம், ஞானம், விவேகம், எனும் நல்லுணர்வுகளை, தமது உடலுக்குள் சுதந்திரமாக்கினார். 

ஞானத்தின் வழிகொண்டு, நல் உணர்வுகளைத் தமக்குள் சுதந்திரமாக்கி, அனைவரையும் அன்புடன் அரவணைக்கும் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வினை, காந்திஜி தனக்குள் ஓங்கி வளரச் செய்தார்.

காந்திஜியின் உணர்வுகளை நாம் நுகர்ந்தோமென்றால், உலகைக் காத்திடும் பேரருளை, நாம் அனைவரும் பெறுவோம்.  காந்திஜியின் வழியில் சென்றோமென்றால், நமது குடும்பத்தில் பகைமை அகற்றி, ஒன்றுபட்டு வாழும் தன்மை பெறமுடியும்.

காந்திஜி, மதங்கள், இனங்கள் என்ற பேதமில்லாது, நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்றும் சீதாராமாஎன்றும் சொல்லத் தொடங்கினார்.

சீதாராமாஎன்று நாம் மகிழ்ச்சியான உணர்வை நுகர்ந்தால், நம்மிடம் மகிழ்ச்சியின் தன்மை வெளிப்படுகின்றது. மகிழ்ச்சியான சொல் வெளிப்படும் பொழுது, கேட்போர் உணர்வுகளிலும் மகிழ்ச்சி அடைகின்றது.

இதைத்தான், காந்திஜி ஹரேராமா…” என்று அடிக்கடி சொன்னார்.  பிறரைத் துன்புறுத்தி வாழ்வதைக் காட்டிலும், அனைவரையும் இன்புறச் செய்து வாழ வேண்டும்என்ற உணர்வை ஓங்கி வளர்த்தவர் காந்திஜி.

எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வை, நாம் எடுத்தால், அதன் உணர்ச்சிகள் நமது உடலுக்குள்ளும் நல்லதாகச் செய்யும்,. மக்களுக்கும் நல்லது செய்யும், என்று காந்திஜி எண்ணினார். அதன்வழி, அவருடைய சொல்லும், அவருடைய செயலும் ஒன்றாக இருந்தது.

மக்கள், ஏகோபித்த நிலையில் தவறு செய்யும் நிலை வரும் பொழுது, காந்திஜி உண்ணாவிரதம் இருந்தார். காரணம், உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் மக்களிடையே, தம் மீதான பாசத்தை வரவைத்து, அதன் வழியில் மக்களுக்கு உண்மைகளைப் புரிய வைத்து, பிறருக்குத் தீங்கு செய்யாத நிலைகளையும், தீண்டாமை என்ற நிலைகளை மறக்கச் செய்து, அனைவரையும் அரவணைத்து வாழும் தன்மையும் பெறவேண்டும், என்ற உறுதி கொண்ட உணர்வைமக்களுக்கு ஊட்டினார்.

நாம் ஒவ்வொரு ஞானியரையும், போற்றித் துதிக்கின்றோம். காந்திஜியையும் போற்றித் துதிக்கின்றோம். ஆனால், அவர்கள் காட்டிய அறவழிகளை, நமது வாழ்க்கையில் கடைபிடிப்பதில்லை.

ஒவ்வொரு காலத்திலும், மகான்கள் தோன்றுகின்றனர். ஆனால், மகான்கள் இருக்கும் வரை போற்றுகின்றோமே தவிர, அவர்கள் மறைந்த பின், அவர்களைச் சுத்தமாக மறந்து விடுகின்றோம்.

இன்று மனிதர் ஒவ்வொருவரும், தனக்குச் செல்வத்தைத் தேட, எத்தனையோ வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். செல்வத்தைச் சேர்த்தபின், அவர்களின் குடும்பத்திற்குள் செல்வத்திற்காகப் போரிட்டு, குடும்பத்திற்குள் ஒற்றுமையற்ற நிலை உருவாகி, செல்வத்தைச் சீரழிக்க செய்யக்கூடிய போர் முறைகள் நடக்கின்றன. இது போன்ற நிலைகள், பெரிய செல்வந்தர்கள் வீடுகளில், இப்பொழுதும் இருப்பதைக் காணலாம்.

இப்போர் முறைகளினால் செல்வம் கரைகின்றது. அந்த உணர்வுகள் வளர்கின்றன. அன்பு, பண்பு என்ற நிலைகள் மறைகின்றன. இது போன்ற நிலைகள், உலகம் முழுவதற்கும் இருக்கின்றது.

இவையெல்லாம் யாம் ஏன் சொல்கிறோம் என்றால், நமது நூற்றாண்டில் வாழ்ந்த காந்திஜி, ஒரு மகான் என்பதை விட "ஒரு ரிஷி" என்றே சொல்லலாம்.

உலக மக்கள் அனைவரும் தெளிந்த நிலைகள் கொண்டு, சகோதர தத்துவத்துடன் வாழ வேண்டுமென்று, ஒரே நிலையில் இருந்தவர் காந்திஜி.

காந்திஜியே ஒரு சமயம், “அன்னியனே வெளியேறுஎன்று சொல்லும் தன்மை வந்துவிட்டது. சாந்தமும், விவேகமும் காந்திஜி கொண்டிருந்தாலும், அன்னியருடைய ஆட்சி, மிகவும் கடுமையான நிலைகளில் வரும் பொழுது, காந்திஜி எல்லா மக்களையும் ஒன்று திரட்டி, “அன்னியனே வெளியேறுஎன்ற கோஷத்தை எழுப்பினார்.

அன்னியன் என்றால், தீமை செய்வோர்,  தீமை செய்யும் சக்திகளை ல்லாம் வெளியேற்றி, அன்புடன் அரவணைக்கும் நிலையினை, நமது நாட்டில் உருவாக்க வேண்டும், என்று காந்திஜி கூறினார்.

காந்திஜி, யாரையும் அன்னியமாக எண்ணவில்லை. மற்றவரை, யார் பகைமை உணர்வுடன் பார்க்கின்றனரோ, அவர்கள் தான் அன்னியர் ஆகின்றனர். இந்த அன்னியத்தில் இருந்துதான் விடுபட வேண்டும் என்று, “அன்னியர்கள் வெளியேற வேண்டும்என்று சொன்னார்.

ஆகவே, நாம் அனைவரும் காந்திஜியின் கொள்கைகளை, நமது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். நாட்டைக் காக்கும் பண்புகள், நமக்குள் வளர வேண்டும்.

நாட்டில், அன்பு கலந்த உணர்வுகள் வளர வேண்டும் என்ற அருள் உணர்வுகளைத் தங்களிடத்தில் வளர்க்கும் அன்பர்கள் அனைவரும், மகாத்மா காந்திஜியின் அருள் சக்தி பெற்று, அனைவரையும் அரவணைத்து வாழும் அருள் சக்தி பெற்று, இந்த வாழ்க்கையில் சாந்தத்துடன், ஞானத்துடன், விவேகத்துடன் வாழ்ந்து, தெளிந்த ஞானமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெற்று, பேரானந்த பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருளாசிகள்.

4. பகைமையை அகற்றினால்தான் மகிழ்ந்து வாழமுடியும்
ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்கும் தன்மை, பேரண்டத்தில் இல்லையென்றால், இந்தப் பிரபஞ்சமே இல்லை.

அதே போல், மனிதனின்  வாழ்க்கையில், ஒருவருக்கொருவர் சகோதரத் தத்துவத்துடன் வாழவில்லை என்றால்,  மகிழ்ச்சியும் இல்லைஎன்பதை அனைவரும் உணரவேண்டும்.

ஒன்றை நாம், நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் மிகவும் நெருக்கமாக இருப்பினும், அதில் சிறு பகைமை ஏற்பட்டுவிட்டால், அது கடும் விஷவித்தாக நம்முள் பதிந்து, நம்மையறியாமலே அவர்களைப் பகைத்துதீமையின் உணர்வாக நம்முள் வளர்ந்து கொண்டிருக்கும்.

இவ்வாறு, பகைமையுணர்வுகள் நம்முள் வளரும் பொழுது, அது நம்முள் உள்ள நல்ல குணங்களையும் பகைமையாக்கிக் கொண்டே ருக்கும். 

நமது உடலுக்குள்உணர்வுகள் ஒன்றுக்கொன்று பகைமையாகும் பொழுதுநமது உடலின் தன்மை குன்றுகின்றது. நம்முடைய எண்ணங்களும் மாறுகின்றது.

எனவே, சூரியக் குடும்பம் ஓர் ஒழுங்குடன் அமைதியாக இயங்குவதைப் போன்று, நாமும் பகைமை உணர்வுகள் இல்லாமல், ஒற்றுமை உணர்வுடன் மகரிஷிகளின் அருள் சக்தியின் துணைக் கொண்டு, வாழத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் வாழும் தெருவில் உள்ள அனைவரையும், நமது குடும்பத்தினரைப் போலக் கருதி, “அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும், இருள் நீங்கிப் பொருள் காணும் திறன் பெறவேண்டும், வாழ்வில் என்றும் மகிழ்ந்த நிலை பெறவேண்டும்என்று எண்ணி, நமது தெருவில் வாழும் மற்ற குடும்பத்தினருக்காகத் தியானிக்கும் பொழுது, அவர்களும் நம்முடன் ஒன்றுபட்டு வளரும் நிலை, உருவாகிறது.

நாம் அனைவரும் ஒன்று கூடி, கூட்டுத் தியானமிருந்து, இதனின் எண்ண அலைகளை ஒருமித்த நிலையாக வெளியிடும் பொழுதுஇதனைச்  சூரியனின் காந்தச்சக்தி கவர்ந்து, இந்த பூமியில் படரச் செய்கின்றது.

மேலும், இந்த உணர்வின் அலைகள் இவ்வுலக மக்களின் உணர்வில் கலந்து, அவர்களிடத்தில், மகிழ்ச்சியின் தன்மையை வளர்க்கின்றது. பகைமையற்ற மனிதர்களாக, அவர்களை மாற்றுகின்றது.

பேரண்டத்திலும், பூமியிலும், மனிதரிடத்திலும் நடைபெறும் இயற்கையின் இயக்கங்களை, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்த அருள் வழியில், உங்களுக்கு உபதேசித்து வருகின்றோம்.  இதில் உங்களின் கருத்தினைச் செலுத்தி, உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த நாடும், உலகமும், ஊரும் என்றும் மகிழ்ந்த நிலையாக இருக்க வேண்டும் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள். நாடும், உலகமும், ஊரும் மகிழ்ந்த நிலை பெறவேண்டும் எனும் பொழுது, மகிழ்ச்சியின் உணர்வுகள் உங்களிடத்தில் பெருகுகின்றது.

மகிழ்ந்த உணர்வின் துணைக் கொண்டு, மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியின் துணைக் கொண்டு, துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில், சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்துடன் நாம் அனைவரும் இணைய வேண்டும்.

இவ்வாறு, இந்த உணர்வின் எண்ணங்களை நாளும் வளர்த்துக் கொள்ளுங்கள்.  நாளும் நல்ல உணர்வுகளை வளர்ப்போர் அனைவருக்கும், எமது ஆசீர்வாதங்கள்.