ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 7, 2012

தொழில் செய்யும் இடங்களில் வரும் தீமைகளும் நீக்கும் வழிகளும்


1. சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் உணர்வுகள், நம் வியாபாரத்தை எப்படிக் கெடுக்கின்றது?
நாம் ஒரு ஜவுளி வியாபாரத்திற்குப் போகின்றோம். ஜவுளி வியாபாரத்திற்குப் போகும் பொழுது, கடைகளில் ஆர்டர் சேகரிப்பதற்கு, சில மாதிரிகள் மட்டுமே எடுத்துச் செல்கின்றோம்.

கடைகளுக்குச் சென்று, நாம் எடுத்துச் சென்ற, "மாதிரித் துணிகளை" (sample) காண்பித்தவுடனே, கடைக்காரர்களும், மாதிரித் துணிகளைப் பார்த்துவிட்டு, ஒன்றிரண்டு மாதிரிகளைப் போன்று, சரக்கு அனுப்பும்படி நம்மிடம் கேட்கின்றனர்.

நாமும் கடைக்காரரிடம் ஆர்டர்களைச் சேகரித்துக் கொண்டு, நமது ஊருக்குக் கிளம்பி வந்து, கடைக்காரர் ஆர்டர் செய்த சரக்குகளைத் தயார் செய்து, அவரது கடைக்கு அனுப்புகின்றோம். சரக்கை அனுப்பி வைத்துவிட்டு, ஓரிரு நாள்கள் கழித்து, பண வசூலுக்காக அவருடைய கடைக்குச் செல்கின்றோம்.

அவருடைய கடைக்குச் செல்ல வேண்டுமென்றால், (city) பஸ்ஸில் பயணம் செய்துதான், போக வேண்டும். ஆனால், பஸ் கிடைக்கவில்லை. அதனால், நடந்தே செல்கின்றோம்.

அப்போது சந்தர்ப்பம், ஒரு குடும்பத்தில் பலகாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். பலகாரம் செய்து கொண்டிருந்த சமயத்தில், எண்ணெய் தீர்ந்துவிட்டது.

வீட்டிலிருந்த சிறுவனை அழைத்து, “சீக்கிரம் எண்ணெய் வாங்கி வாடா…” என்று அவசரப்படுத்தி அனுப்பி வைக்கின்றார்கள். சிறுவனும் எண்ணெய் வாங்கி வருவதற்காக, வேகமாக கடைக்குச் செல்கின்றான்.

சிறுவன் கடைக்குச் சென்று, “எண்ணெய் கொடுங்கள், எண்ணெய் கொடுங்கள்என்று அவசரப்படுத்துகின்றான்.

ஆனால், கடைக்காரரோ இவனைப் பார்த்து, “பொறு, பொறுஎன்று அடுத்தவர்களுக்கே சரக்கு கொடுத்து அனுப்புகின்றார். சிறுவனுடைய அவசரத்திற்குச் செவி சாய்க்க முடியாமல் போய் விடுகின்றது. சிறுவனுக்கோ, நேரம் கடந்து கொண்டிருக்கின்றது.

அது சமயம், சிறுவன் நேரமாகிக் கொண்டு இருக்கின்றது, வீட்டில் பலகாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள், ஆகவே, எண்ணெய் சீக்கிரம் கொடுங்கள், தாமதமானால் வீட்டில் என்னைத் திட்டுவார்கள்என்று கூறுகின்றான். இருந்தாலும்,  சிறுவனுடைய ஆவேச, அவசர உணர்வுகள், அங்கே எதிர்நிலையாகின்றது.

எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக், அதாவது, கடைக்காரரின் உணர்வும் சிறுவனுக்குச் சீக்கிரம் சரக்கைத் தந்து அனுப்ப மறுக்கின்றது.  இப்படித் தாமதமாகும் பொழுது, “நேரமாயிற்றே, நேரமாயிற்றேஎன்ற இந்தப் பதட்டத்திலேயே சிறுவன் இருக்கின்றான். சிறிது தாமதத்திற்குப்பின், சிறுவனும் எண்ணெயை வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு வேகமாக வருகின்றான்.

இப்படி, சிறுவன் வேகமாக வரும் பொழுது, அவனுடைய எண்ணம் முழுவதும் நேரமாகி விட்டதே, நேரமாகி விட்டதேஎன்று செலுத்துகின்றான். இதனால், சாலையில் மேடு பள்ளங்கள் தெரியாதபடி சென்று, தவறி விழுந்து விடுகின்றான்.

ஏனென்றால், அவனுடைய எண்ணம் நேரமாகி விட்டதே, நேரமாகி விட்டதேஎன்று இருக்கின்றது. இதனால், அவனுக்குச் சாலையில் மேடு பள்ளம் தெரிவதில்லை.  எப்படியும், எண்ணெயைக் கொண்டு போய்ச் சீக்கிரம் கொடுத்து விடவேண்டும் என்று இருக்கின்றான். இதன் அவசரத்தால், போகும் வேகத்தில், இவனும் தவறி விழுந்து, பாட்டில் நொறுங்கி, எண்ணெயும் வீணாகி விடுகின்றது.

சிறுவன், எண்ணெய் வீணான வருத்தத்தில், உடைந்த பாட்டிலை சாலை ஓரமாகத் தள்ளிவிடாதபடி, சாலையில் அப்படியே விட்டுவிட்டுச் சென்று விடுகின்றான்.

அதே சமயம் நாம், அதே சாலை வழியில், (ஜவுளி) சரக்கை அனுப்பிய கடைக்கு, நடந்து செல்கின்றோம். போகும் வழியில், நாம் நமது வியாபாரம் பற்றிய எண்ணத்துடனே செல்கின்றோம். ஆகவே, நமது நினைவு முழுவதும் வியாபாரம் பற்றிய சிந்தனையில் இருப்பதால், சாலையில் உடைந்து கிடக்கும் பாட்டிலைக் கவனிக்காமல், உடைந்து கிடக்கும் பாட்டிலை, நம்மை அறியாமலே உதைக்கின்றோம்.

உடைந்த பாட்டில் காலில் பட்டவுடன், பாவிப் பயல்கள்நடக்கும் ரோட்டில் பாட்டிலைப் போட்டு உடைத்துள்ளார்களேஎன்று, வெறுப்பான உணர்வுகள் வருகின்றது.

உடைந்த பாட்டிலில் நம் கால் மோதிய போதும், நமது காலில் காயம் எதுவும் இல்லை. ஆனால், “இந்நேரம், உடைந்த பாட்டில் காலில் குத்தியிருந்தால், என்னவாயிருக்கும்…?” என்ற உணர்வுகள் வருகின்றன.

சரிநாம் தான் உடைந்த பாட்டிலைப் பார்த்தோம். உடைந்த பாட்டில்களை ஓரமாகத் தள்ளிவிடுவோமா? என்றால், செய்ய மாட்டோம். இதே பாட்டில், அடுத்தவரின் காலில் குத்த வாய்ப்பிருக்கின்றது. ஆகவே, உடைந்த பாட்டிலை ஓரமாகத் தள்ளிவிடுவோம் என்று, உடைந்த பாட்டிலை ஓரமாகத் தள்ளி விட்டிருந்தால்,  நம்மிடம், சிறிது நல்ல மனம் இருக்கின்றது என்று இருக்கும்.

ஆனால் நாம் என்ன செய்கின்றோம்? வியாபார நோக்கத்திலேயே போகின்றோம்.  ரொம்ப அறிவு கெட்டதனமாக இருக்கின்றது” என்று மற்றவர்களைக் குறை கூறும் உணர்வுகளை, எடுத்துக் கொண்டு போகின்றோம்.

இப்படி, இதன் உணர்வுகளுடன் கடைக்குச் சென்றபின், “சரக்கு அனுப்பியிருந்தோம், சரக்கைப் பார்த்தீர்களா?” என்று கடைக்காரரிடம் கேட்போம்.

நம்மைக் கடை முதலாளி பார்க்கின்றார். ஆது சமயம், சாலையில் நடந்த சம்பவத்தால் உண்டான வெறுப்பின் மணம், நமது உடலிலிருந்து வெளிப்படும் நிலையில், இதன் மணத்தை, முதலாளி நுகர நேருகின்றது. நுகர்ந்தபின், நாம் அனுப்பியிருந்த சரக்குக் கட்டுகளைப் பிரித்துப் பார்க்கின்றார்.

கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய். வெறுப்பின் உணர்வுகளை நுகர்ந்து, சரக்கைப் பார்க்கும் பொழுது,  வித்தியாசமாகத் தெரிகின்றது. 

உடனே கடை முதலாளி, “ஜவுளி மாதிரி (sample), அன்று காண்பிக்கும் பொழுது ஒரு விதமாக இருந்தது, ஆனால், இன்று சரக்கு வேறு விதமாக இருக்கின்றதேஎன்று கூறுவார்.

ஏனென்றால், நுகர்ந்த வெறுப்பின் உணர்வின் மணத்திற்கொப்ப, அங்கே வெறுப்பு உணர்ச்சியையே, காண்பிக்கின்றது. ஆனால்,  அன்று காண்பிக்கப்பட்ட மாதிரிப் பொருளும், இன்று காண்பிக்கும் சரக்கும் ஒன்றுதான். ஆனால்,  நுகர்ந்த உணர்வுகள்,  இன்று வேறு விதமாகக் காண்பிக்கின்றது.

நாம், “நான் அனுப்பியது நல்ல சரக்குதான்நன்றாகப் பாருங்கள்என்று கூறுவோம்.

உடனே கடை முதலாளி, எனக்குக் கண் இல்லையா? நன்றாகப் பார்த்துவிட்டுத் தான் சொல்கின்றேன்என்று கூறுகின்றார்.

நாமும், இரண்டு தரம் நல்ல சரக்குதான்என்று கூறுவோம்.

அதற்குக் கடை முதலாளி, “இப்படி நாணயம் (நேர்மை) கெட்டுவிடக் கூடாதுஎன்று கூறுவார்.

ஏனென்றால், நாம் நுகர்ந்த உணர்வுகளின் இயக்கம் இப்படி இருக்கின்றது.  இதை மாற்றுவதற்கு வழி என்ன? சந்தர்ப்பத்தால் வரும், தீமைகளைத் துடைப்பதற்குச் சக்தி வேண்டுமே.

அதற்குத்தான்,  தியானத்தைக் கடைப்பிடிக்கச் சொல்வது.  துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து,  அறியாது வரும் தீமைகளை, உடனுக்குடன் நீக்கிப் பழக வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் அருளிய அருள் வழியில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம்முள் பெற்று, மெய்பொருள் காணும் திறனை நமக்குள் வளர்த்துக் கொண்டால்,  நமது வாழ்க்கையில், ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கொப்ப,  நல் ஞானங்கள் உதயமாகி,  நம்மை வழி நடத்திச் செல்லும். 

இதன் தொடர் கொண்டு, அகண்ட அண்டத்தின் இயக்கமும், நமது உடலான பிண்டத்திற்குள், எப்படி இயக்குகின்றதென்றும், உணர்வுகள் எப்படி எண்ணங்களாக ஆகின்றதென்றும்,  எண்ணங்கள் எப்படி உணர்ச்சிகளாக மாறுகின்றதென்றும்,  உணர்ச்சிகள் எப்படி நம்மை இயக்குகின்றதென்றும், நமக்கு நாமே அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றலை,  குருவின் வழியில் நாம் எல்லோரும் பெற வேண்டும்.

அவ்வாறு, குரு காட்டிய அருள் வழியில் உங்களை நீங்கள் அறிந்து, அருள் வழி வாழ்ந்து, அருள் வாழ்க்கை வாழ்ந்து, அருள் வழியில் தொழில் வளம் பெற்று, செல்வம் செல்வாக்கு பெற்று, அனைவரும் மகிழ்ந்து வாழ்ந்திட, எமது அருளாசிகள்.

2. தொழிலில் நஷ்டம் வராமல் தடுக்க, நாம் என்ன செய்ய வேண்டும்?
மிளகாய் காரம் என்றால், தூக்கி எறிந்து விடுகின்றோமோ? அதைச் சேர்த்துச் சுவையாக மாற்றுகின்றோம்.

அந்தக் காரம் என்ற உணர்வு, கோபப்படுபவர்களை, வேதனைப்படுபவர்களை, வெறுப்படைபவர்களை, துயரப்படுபவர்களைஇந்த மாதிரி சங்கடங்களைக் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது, தெரிந்து கொள்கின்றோம்.

தனித்துவிட்டால், அந்த உணர்வின் தன்மை நமக்குள் சேர்த்து, கார உணர்ச்சிகள் அதிகமாகி, நம் அணுக்களில் பெருக்கிவிட்டால், இதன் நிலைகளில் ரூபம் மாறிவிடும்.

சில வீடுகளில், “இப்படிப் பேசுகிறானே, உருப்படுவானாஎன்று சொல்லிச் சொல்லி, இவர்களே உருப்படாமால் பண்ணிக் கொள்வதைப் பார்க்கலாம்.

இந்த மாதிரிப் பேசுகிறவர்கள் உடல்களிலே, நிறைய சங்கடங்கள் வரும். குடும்பத்தில் சண்டை வரும். குழந்தைகளிடம் வெறுப்படைவார்கள். இவர்கள் எண்ணமே, உதவி செய்வதற்கு மாறாகப் பிரித்துவிட்டுவிடும்.

நண்பர்களிடமும், இதே போன்ற உணர்வுகளைத் தோன்றச் செய்து, பிரித்துவிடும். எப்பொழுது பார்த்தாலும், இதேபோலஉருப்படுவானா?” என்று சொல்வதைக் கேட்டு, நண்பர்களுக்கும், இவன் உருப்படுவானா? என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துவிடும்.

ஆக அவர் இவ்வாறு, காரம் என்ற நிலைகளை எடுத்தால், நோய் என்ற நிலைகள் விளைகின்றது. அதனை நாம் எடுத்தால், நமக்குள்ளும் அதே நிலையாக மாற்றும். ஆகையினால், நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால், நமக்குப் பாதுகாப்பு தேவை.

ஒவ்வொரு நொடியிலும், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இதை எடுத்து வளர்த்துக் கொண்டால், இதன் வழி நமக்கு, இந்த உண்மையின் நிலைகள் வரும்.

நாம் தொழிலுக்குச் செல்லும் பொழுது, இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்துவிட்டு, நம்மிடம் வேலை செய்பவர்கள் அனைவரும், மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும், பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும். தொழிலில் நல்ல நாட்டம் வரவேண்டும், தெளிவான மனம் பெறவேண்டும், தெளிவாகத் தொழில் செய்யும் அந்த எண்ணம் வரவேண்டும், என்று உங்கள் இடத்திலே உட்கார்ந்து, ஒரு பார்வை பார்க்க வேண்டும். நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ, அதே போன்று, நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

யாராவது தவறு செய்கிறார்கள் என்றால், இயற்கையில் அவர்களது குடும்பத்தில், எத்தனையோ விதமான நிலைகள் இருக்கும். பொருளாதாரத்தில் குறை இருக்கலாம். சொந்தத்திற்குள் யாராவது குறையாகப் பேசியிருக்கலாம்.

இந்த மாதிரி குறைகளைப் பேசி, அவர்களுக்குள் வெறுப்பான நிலைகள் இருந்தால், நம்மிடம் வேலை பார்க்கும் பொழுது, சிந்தனையிழந்து வேலை செய்யும் நிலை வரும். அப்பொழுது, நம் பொருள்களுக்கு நஷ்டம் வரும்.

அவ்வாறு வராதபடி செய்ய வேண்டுமென்றால், நாம் அவருக்கு, அருள் உணர்வுகளைப் பாய்ச்சி, மகரிஷிகளின் அருள் சக்தியால், “நீ நன்றாக வேலை செய்ய வேண்டும்”, மகரிஷிகளின் அருள் சக்தியால், “நல்ல முறையில் உடல் ஆரோக்கியத்துடனும், சிந்திக்கும் சக்தியும் பெற்று நலமாக இருப்பாய்என்று சொல்லி அனுப்ப வேண்டும்.

இதைப் போல, நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள், தினம்  தினம் அவருக்குச் சொல்ல சொல்ல, அவர் காதிலே கேட்கக் கேட்க, (தினமும் வேலைக்கு வந்தவுடன் அவரிடம் சொல்லிவிட வேண்டும்). “மகரிஷிகள் அருள் சக்தியால் நீ நன்றாக இருப்பாய், தொழிலில் சிறந்து விளங்க வேண்டும்என்று வாக்குகள் கொடுத்து, இதே போன்று செய்யச் சொல்லிவிடுங்கள்.

சில வெறுப்பான நிலைகளோ, சிந்தனையிழக்கும் நிலைகளோ அதிகம் இருந்தால், விபூதியைக் எடுத்து கையில் கொடுத்து, இதே போல சொல்லச் சொல்லி, வேலை செய்யச் சொல்லுங்கள்.

இவ்வாறு செய்யச் சொன்னீர்கள் என்றால், தொழில் நன்றாக இருக்கும். மேலும், “எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியால், நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

சில சமயம் இதெல்லாம் மீறி, நமது தொழிலில் சில குறைபாடுகளைக் கண்டால், அந்தக் குறை நம்மை இயக்கிவிடக்கூடாது.

அந்தக் குறை உணர்வு வந்தவுடன், நமக்குக் கோபம் வரும் அல்லது வேதனைப்படுகின்றோம். நாம் இதை நுகர்ந்தவுடனே, நமது உயிர் இந்த உணர்வை, உணர்ச்சியால் உடல் முழுவதும் பரப்புகின்றது. நமது இரத்தநாளங்களில் கலக்கின்றது. அப்பொழுது என்ன செய்கின்றது?

நமது உடலில் உள்ள நல்ல அணுக்களில், விஷத்தன்மை போன உடனே அதை ஏற்க மறுக்கும். நாம் தைரியமாகச் செய்யக் கூடிய எண்ணங்களும் பலவீனமடையும்.

ஆகையினால், அவ்வாறு விடாதபடி, அடுத்த நிமிடம்ஈஸ்வராஎன்று சொல்லி, உங்கள் உயிரை எண்ணி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும், எங்கள் இரத்தநாளங்களில் படரவேண்டும் என்று இரண்டு நிமிடம் எடுத்துவிட்டு, அவர் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும், அவர் தெளிவான மனம் பெறவேண்டும், தொழிலில் சிந்தித்துச் செயல்படும் அந்தச் சக்தி  பெறவேண்டும் என்று நாம் இங்கே உருவாக்கிவிட வேண்டும்.

அப்பொழுது, அவரின் உணர்வு இங்கே சிறுத்துவிடுகின்றது. பின் அவரைக் கூப்பிட்டு, “பார்த்துச் செய்வீர்கள், சிந்தனையுடன் செய்வீர்கள், நன்றாக நீங்கள் செயல்படுவீர்கள்என்று சொல்லிவிடுங்கள். இதனை ஒரு பழக்கத்திற்குக் கொண்டுவரவேண்டும்.

ஏனென்றால், அவர் குடும்பத்தில் இருக்கும் சிக்கலால், அவர் அறியாமல் செயல்படும் பொழுது, அவர் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால், நமது உடலிலும் கலக்கின்றது.

சேற்றில் விழுந்து வருபவர்களைக் கட்டித் தழுவினால், எப்படி இருக்கும். நம் உடலிலும் சேறாகிவிடும். ஆகையினால், அந்தச் சேற்றை நீக்கக் கூடிய அளவிற்கு, நம் உடலில் ஒட்டிவிடாதபடி, அதனைச் செயல்படுத்த வேண்டும். தொழிலில், இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

இவ்வாறு, ஒவ்வொரு நிமிடமும் அந்த துருவ நட்சத்திரத்தை எண்ணும் பொழுது, ஒவ்வொரு கெட்ட குணத்திலேயும், அதை அடக்கக்கூடிய சக்தியாக, “நமது எண்ணம்வருகிறது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள், நம் உயிரில் பட்டவுடன், இது கலந்து அவர் நல்ல குணம் வளரவேண்டும் என்கின்ற பொழுது, இதையே நமது உயிர், நல்ல அணுக்களாக நமது உடலில் மாற்றுகின்றது.

நமது உடலில் உள்ள நல்ல அணுக்கள் அனைத்திலுமே, அந்த உணர்வு அனைத்தையும் சேர்த்து, இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமையின் நிலை வந்தாலும், மிளகாய் தனியாகக் காரமாக இருந்தாலும், குழம்பில் போட்டவுடன் ருசியாகிவிடுகின்றது. உப்பு தனியாகக் கரித்தாலும், குழம்புடன் சேர்க்கப்படும் பொழுது, தணிந்து விடுகின்றது.

இதே போல நாம் தொழில் செய்யும் இடங்களில் பலவிதமான நிலைகள் இருந்தாலும், நாம் இது போன்று, செய்து பழக வேண்டும். தொழிலில் இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.