ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 15, 2012

ஈஸ்வராய குருதேவர் ஞானகுருவிற்கு இட்ட கட்டளைகள்

குருநாதர் எமக்கு உரைத்த அருளுரைகள்
(1)மனிதருடைய உடலைக் கோவிலாக மதி. உடலுக்குள் இருக்கும் உயிரைக் கடவுளாக மதி. உடலைக் கோவிலாக மதித்து, உடலில் நற்சுவையாக சுவைக்கச் செய்யும், உணர்வின் ஆற்றல் மிக்க நிலையாக, ஒவ்வொரு உடலையும் நீ மதித்திடல் வேண்டும்”.

(2)ஆறாவது அறிவின் தன்மையை, இந்த மனித உடலில் நாம் பெற்ற பாக்கியத்தை இழந்திடாது, எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்றும், நீ சந்திக்கும் அனைவரும் தங்களுக்குள் அறியாது சேர்த்த நஞ்சினை நீக்கி, அருள்ஞான உணர்வை தங்களுக்குள் விளைய வைக்கவேண்டும் என்றும் எண்ணவேண்டும்”.

(3) நான் (ஈஸ்வராய குருதேவர்) கொடுத்த அருள் சக்தியின் துணைகொண்டு, இப்புவியின் காற்றில் பரவி படர்ந்து இருக்கும் அருள்ஞானிகளின் உணர்வுகளை நீ பெற்று, உன்னை அறியாது உனது ஆறாவது அறிவில் கலந்த, அழுக்கினைத் துடைத்திடல் வேண்டும்.

(4) அழுக்கினைத் துடைத்திட்ட,  அருள் உணர்வின் ஆற்றல் மிக்க சக்தியை நினைவு கூர்ந்து,  ஒவ்வொரு உயிரையும் ஈசனாக மதித்து, ஈசனுக்கு அபிஷேகம் செய்வதாக நினைவில் கொண்டு, நீ சொல்லும் உணர்வின் நிலைகlளைக் கூர்மையாக கவனிக்க வைத்து, அந்த உணர்வுகளைச் சுவாசிக்கச் செய்.

(5) அங்கே உடலுக்குள் வீற்றிருந்து
உடலை இயக்கிக் கொண்டிருக்கும்,
உடலைக் காத்துக் கொண்டிருக்கும்,
உடலை உருவாக்கிக் கொண்டிருக்கும்,
உணர்வுகளை வளர்த்துக் கொண்டிருக்கும்,
உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொண்டிருக்கும் ஈசனை உயர்ந்த நிலைகளை எண்ணி,  மெய்ஞானிகளின் அருள் உணர்வுகள் அங்கே விளைய வேண்டும், அருள் உணர்வின் தன்மை அங்கே பெருக வேண்டும், அருள்ஞான சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று அவர்களுடைய உடலை எண்ணி,  உடலில் வீற்றிருக்கும் உயிரான ஈசனுக்கு, இவ்வருள் உணர்வுகளை நீ அபிஷேகம் செய்ய வேண்டும்

இப்படி, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்த அருள்வழியில், யாம் பார்க்கும் ஒவ்வொருவரின் உயிரையும் ஈசனாக மதித்து, உடலை ஆலயமாக மதித்து, அவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், அவர்களுக்குள் அறியாது சேர்ந்த நஞ்சுகள் நீங்கி, இவ்வாழ்க்கையில் தெளிந்த ஞானமும், மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள்சக்தியும் பெற்று, பிறவியில்லா நிலை பெரும் நிலையாக, பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திடும் நிலைகள் பெறவேண்டும் என்று,
எமது அருள் உணர்வுகளைப் பரவச் செய்து,
அவர்களை நுகரச் செய்து,
அவர்கள் உயிரில் இணையச் செய்து வருகின்றோம்.

இதன்வழி, யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைக் கூர்ந்து கவனித்து, தங்களில் விளைய வைத்து வெளிப்படுத்தி வரும் அன்பர்கள் அனைவரும், தங்களில் தீயவினைகள் நீங்கி, சாபவினைகள் நீங்கி, பாவவினைகள் நீங்கி, பூர்வ ஜென்மவினைகள் நீங்கி, உடல் நலம், மனநலம், மனபலம், மனவளம், செல்வம், செல்வாக்கு, சொல்வாக்கு அனைத்தும் பெற்று, தொழில் வளமும், செல்வச் செழிப்பும் பெற்று,  பிறவியில்லா நிலை பெறும் அருள்ஞானம் பெற்று, பிறவியில்லா நிலை பெறும் அருள் வாழ்க்கையாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருளாசிகள்.