ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 10, 2012

இராமேஸ்வரத்தின் உண்மைத் தத்துவம்

1. முன்னோர்களை கங்கையில் ரைக்கச் சொன்னதின் உண்மைநிலை
இறந்தவர்கள் இன்னொரு உடலுக்குள் சென்றாலும், அவர்களையும் விண் செலுத்தலாம். இந்த தியானம் எடுத்துக்கொண்டவர்கள், அந்த உயிராத்மாவை எண்ணி சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று இந்த ஒளியின் தன்மையைக் கூட்டி, இந்த உணர்வின் தன்மையைக் எண்ணும் போது, நம் புலனறிவுக்கு வலு கொடுக்கின்றோம்.

இதன் வலு கொண்டு நாம் சரீர நிலைகளில் இருந்தாலும், அவர்கள் சூட்சும சரீரமாக இருக்கிறார்கள். நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டு, இந்த ஆன்மாவின் நிலைகள், சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று உணர்ச்சியுடன் உந்தி, நாம் மேலே தள்ளுகின்றோம்.

ரிஷிகளின் தன்மையோ, மெய் ஒளியின் தன்மையைத் தனக்குள் எடுத்து, இறந்தவர்களுடைய உணர்வுடன், ஏனென்றால் அவர்கள் செயலற்ற நிலைகளில் இருப்பவர்கள் ஜெபம் பண்ணவில்லை, உணர்வின் தன்மை பிரிந்திருந்தாலும், உணர்ச்சியின் தன்மை நம் உடலிலே இருக்கின்றது.

இந்த முறைப்படி தியானம் செய்து கொண்டவர்கள், அந்தக் குடும்ப சம்பந்தப்பட்ட உணர்வுகள் இருப்பதனால், இதை எடுத்துக் கொண்டவர்கள் இறந்தவர்களுடைய உயிராத்மாக்களுடைய நிலைகளை எண்ணி, அவை சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்திட வேண்டும் என்று எண்ணும் பொழுது, அது பந்து போலே உள்ளே தள்ளிவிடும்., விண் செலுத்தலாம்.

இல்லையென்றால், புவியின் ஈர்ப்புக்குள்தான் நிற்கும். இப்படி நாம் விண் செலுத்தினால், எப்படி மனிதனாகப் பிறந்து ஒளியாக மாற்றி, இன்று சப்தரிஷி மண்டலத்தில் இருக்கின்றார்களோ, அந்த சப்தரிஷி மண்டல அலைகளுடன் நாம் கலக்கலாம்.

அவ்வாறு கலக்கச் செய்தபின், நாம் எப்படி சாம்பலைக் கொண்டு போய்க் கங்கையிலே கலந்தால், கங்கை, கடலில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும் என்பார்கள்.

நாம் ஒரு குடும்பத்தில் இருப்போர் அனைவருமே, இந்த தியானத்தினுடைய ஒளி அலைகளை, எல்லோரும் சேர்ந்து எடுத்து, இந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்களை எண்ணி, உயிராத்மாவை விண் செலுத்தும்போது, இது கங்கை.

அதைக் கொண்டு போய், பெருங்கடலான ஒளிக் கடலில் நாம் சேர்க்கின்றோம். அந்த ஒளிக் கடலில் நாம் சேர்க்கும் பொழுதுதான், இன்னொரு உடல் பெறும் நிலையை, மெய் ஒளியான சப்தரிஷி மண்டலத்துடன் கலந்தவுடன், அது பஸ்பமாக, ஜீவனுள்ள ஒளிச் சரீரம் பெறுகின்றது.

உயிர் எப்படி ஒளியாகத் தோன்றியதோ, இந்த உணர்வின் அலைகள் பிரிக்கப்பட்டு, அந்த உணர்வின் நிலையாகின்றது. சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றவுடன், அவர்கள் சமைத்த உயர்ந்த ஒளியின் உணர்வுகள், அதை ஈர்த்து அவர்கள் வளர்ச்சி பெறும் தன்மை பெறுகின்றார்கள்.

ஆக இந்த ஒளிச் சரீரம் பெறும் பொழுது, எந்த உணர்வின் தன்மையை அவர்கள் வளர்த்துக் கொண்டார்களோ, அந்த உணர்வின் சரீரம் நமக்குள் உண்டு. இவ்வாறு நாம் செய்து, உந்தித் தள்ளுவோமேயானால், சுலபத்திலே நாம் விண்ணை நோக்கி எண்ணும் பொழுது, அந்த விண்ணின் சப்தரிஷி மண்டல அலைகளை, நாம் சுலபமாகப் பெற முடியும்.

ஆக, சுலபமாகப் பெற்று, அந்த எண்ண ஓட்டத்தில் விட்டவுடன், நம்மைச் சேர்ந்தவர்கள் இறந்துவிட்டால், நாம் கூட்டுத் தியானம் செய்கின்றோம். இவ்வாறு செய்து, ஒவ்வொருவருடைய நிலைகள், நாம் பாசத்தால் வளர்த்துக் கொண்ட நிலைகள் கொண்டு, அந்த இறந்தோர் வீட்டிலே நாம் அனைவரும் சேர்ந்து, கூட்டு ஐக்கிய தியானம் இருந்து, அந்த உயிராத்மாக்கள், சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும் என்று, அந்தக் குடும்பத்தாருடன் சேர்ந்து இணைத்து, நாம் இதைச் சொல்லுவோமேயானால், இந்த உணர்வுகள் பெரும் நதியாகின்றது. அப்பொழுது, அந்த உயிராத்மாவை நாம் உந்தித்தள்ளி, உயிராத்மாவைப் புனிதம் பெறச் செய்யலாம். இப்படித்தான், அன்று மெய்ஞானிகள் அதைச் செய்தார்கள்.
  2 முன்னோர்களின் சாபங்களை நீக்கும் நிலை
      நம் மூதாதையர்களுடைய எண்ணங்களில், முன்பு சாபமிட்ட உணர்வுகள் கொண்ட சில குடும்பங்களில், ரொம்ப நலிந்து குடும்பப் பாசத்துடன் யாராவது இருந்தால், அந்த உணர்வின் தன்மை இதற்கு முன்னாடி, நான்கு தலைமுறைக்கு முன்னால், ஒருவருக்கொருவர் போரிட்டு, சாபமிட்டு, நான் எப்படி மூச்சுத் திணறி, என் குடும்பம் சின்னாபின்னமாச்சோ அதேமாதிரி, உன் குடும்பமே இப்படி ஆகும் என்று தன்னையறியாமலே சாபமிட்டிருந்தால், அந்த உணர்வுகள், நம் குடி வழி, இன்று நாம் தவறு செய்யவில்லை என்றாலும்கூட, இந்த உடலுக்குள் அது புகுந்து, ஆஸ்துமா போன்ற நோய்கள் அதிகமாக வந்துவிடும்.

      இதைப் போன்ற நிலையில் உள்ளது அனைத்துமே, எப்படி நம் உடலுக்குள் வந்து சேருகின்றதோ, இதைப் போன்றுதான் மெய் ஞானிகளுடைய அருள் சக்திகளை, நாம் கூட்டுக் குடும்ப தியானம் செய்து, வாரத்தில் ஒரு நாள் இந்த உயிராத்மாவை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்,

      இவ்வாறு, நம் மூதாதையர்களைச் சொல்லி விண் செலுத்தினால், அப்போது, சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய ஒளி அலைகளுடன் பட்டவுடனே, மனிதன் இன்னொரு உடல் பெறும் நிலையைத் தீண்டிக்கருகி, ஆனால், உணர்வின் தன்மை கொண்டு இயக்கக்கூடிய நிலைகள்,

      இப்பொழுது, நாம் எப்படி ஒளிச்சரீரம் பெற, இந்தச் சரீரத்திற்குள் இருந்து எண்ணுகின்றோமோ, இதைப்போல சப்தரிஷி மண்டலங்கஈலிருந்து வரக்கூடிய, அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை இவர்கள் சுவாசித்து, ஒளிச்சரீரம் பெறும் தகுதி பெறுகின்றார்கள்.

      அப்பொழுது, நாம் எண்ணும்போதெல்லாம் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து, சுலபமான நிலைகளிலிருந்து, பல சக்திகளை நாம் பெறமுடிகின்றது. அவ்வாறு நாம் பெற்றால், இந்த வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களை நீக்கி, நாம் இந்த உடலைவிட்டுச் சென்றால், நாம் சப்தரிஷி மண்டலுத்துடன் இணையலாம். இதுதான் அன்று மகரிஷிகள் காட்டிய நிலைகள்.

ஆகையினாலே, இன்று மனிதனாகப் பிறந்த நாம், இந்த உணர்வின் ஆற்றலை நாம் பெருக்குவதற்கு, ஒவ்வொரு நிமிடமும் மூதாதையர்களை விண்  செலுத்திவிட்டு, நாம் இந்தக் கூட்டுக் குடும்ம்ப தியானங்களிலே, மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று, நம் உடலில் வரக்கூடிய விஷத்தன்மையை நீக்கி, அந்த ஒளித்தன்மையைப் பெறுவதற்குண்டான நிலைகளை, நாம் மேற்கொள்ள வேண்டும்.
3. இராமேஸ்வரத்தின் உண்மைத் தத்துவம்                                                                                    
உடல் பற்றின் தன்மை கொண்டுதான், பல கோடிச் சரீரங்களைப் பெற்று, இன்று “கோடிக்கரையாக” (கடைசி உடல்) மனித உடலைப் பெற்றோம் என்பதனை இராமாயணம் தெளிவாகக் கூறுகின்றது..

இராமாயணத்தில் இராமேஸ்வரம், எண்ணத்தின் உணர்வின் தன்மையை உயிர் இயக்குகின்றது என்பதை உணர்த்தும் நிலையாக, இராமர் “தனுசுக்கோடிக்கு” வந்தபின், “பூஜைக்கு நேரமாகி விட்டது” என்று, அங்கிருக்கும் மணலைக் குவித்து, சிவலிங்கமாகச் செய்து, பூஜை செய்தார்.

ஏனென்றால், “நேரமாகிவிட்டது” என்றால், பூஜை செய்ய நேரமாகிவிட்டது என்று மற்றவர்கள் சொல்லுகின்றனர். ஆனால், “இந்த உடலில் காலதாமதமாகி விட்டது” என்பதுதான் பொருள்.

நமது உணர்வுகளை ஒருங்கிணைத்துச் சேர்க்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு, இராமர் மணலைக் குவித்து, சிவ பூஜை செய்தார். சிவலிங்கத்தைப் பூஜித்தார், சிவலிங்கமாக மாற்றினார் என்று காண்பித்தார்கள். எண்ணங்களைக் குவித்து உருவானதுதான், இராமேஸ்வரம்.

அனைத்துத் தீமைகளையும், விஷத்தையும், வென்றது துருவ நட்சத்திரம். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை, காலையில் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து, பிரபஞ்சத்தில் பரவச் செய்வதை, நமது பூமி, தனது துருவப் பகுதி வழி கவர்கின்றது.

இப்படிப் புவியில் படரும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை, மனிதர்களான நாம், நமது எண்ணம் கொண்டு நம்முள் பெற முடியும். ஆகவே, இதிலிருந்து நாம் இராமேஸ்வரம் – நமது எண்ணத்தால், துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை, நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

“தனுசுகோடி”, நமது எண்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் நிறுத்தி, துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நாம் நுகரும்போது, அதனின் உணர்வுகள் நமது உயிருடன் ஒன்றி, கடைசி நிலையாகப் பிறவி இல்லா நிலையை அடைகின்றோம்.

நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை, ஒளியாக மாறுகின்றது என்ற நிலையை அறிந்து, தியானித்து, இதனின் உணர்வின் எண்ணங்களை நமக்குள் வளர்க்க வேண்டும். இதனை நமது எண்ணங்கள் கொண்டு, நமக்குள் எப்படி வளர்க்க வேண்டும் என்பதைத்தான், இராமாயணம் நமக்குத் தெளிவாகக் கூறுகின்றது.

புழுவிலிருந்து மனிதராக வரும் வரையிலும், தன்னைக் காத்திடும் உணர்வுகளை நுகர்ந்தறிந்து, நுகர்ந்தறிந்த உணர்வுகளுக்கொப்ப, பரிணாம வளர்ச்சி அடைகின்றது.

ஆகவே, எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட உணர்வுகள், மனிதராகப் பிறக்கின்றது. தீமையிலிருந்து விடுபடவேண்டும், என்ற உணர்வை நுகர்ந்து, தீமையிலிருந்து விடுபடும் மனிதரின் உடலை, நமது உயிர் உருவாக்கியுள்ளது.

ஆனால், “தனுசுகோடி” என்பது உயிர் பல கோடித் தீமைகளை வென்று, தீமைகளையும், விஷங்களையும், வெல்லக்கூடிய சக்தி பெற்று, உணர்வை ஒளியாக மாற்றும் நிலை பெற்றது.
           
            நம் எண்ணத்தால் உருவாக்கப்பட்டதுதான், நமது உடல். இதைத்தான்,  ஞானிகள் இராமேஸ்வரம்என்று வைத்தார்கள். நாம் எதை எண்ணினோமோ, அதன் வழிப்படி, இந்த உடலான பரத்தை உருவாக்கியது உயிர். இதுதான் இராமேஸ்வரம். 

ஸ்தல புராணத்தை உருவாக்கி, இதே எண்ணத்தால் ஒளி என்ற உணர்வு பெற்ற, துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்வதற்கு, இராமேஸ்வரத்தை அமைத்தார்கள். அங்கு, அதிகாலை  4.00  மணியில் இருந்து  6.00  மணிக்குள், துருவ நட்சத்திரத்தைப் பார்க்கலாம் என்பதற்காகக் கோவிலை அமைத்தார்கள்.

அதன் உணர்வை, ஒரு மண்டலம் (48 நாட்கள்) வளர்த்துக் கொண்டபின், நம் குடும்பத்தில் நமது மூதாதையர்களையோ, உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்களையோ, விண் செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும், சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க முடியும்.

மூதாதையர்களின் உணர்வு நமக்குள் உண்டு. அதன் துணைகொண்டு, “எங்களுடன் வாழ்ந்து வளர்ந்த குலதெய்வமான உயிராத்மாக்கள், சப்தரிஷி மண்டலத்தில் கலந்து, உடலில் பெற்ற நஞ்சுகள் கரைந்து, பெருவீடு பெருநிலை அடைந்து, அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும்என்று, பிறவி இல்லா நிலை அடையச் செய்யும் இடம் அது.

சிறிது காலமே மனித உடலில் வாழ்கின்றோம். இந்த மனித உடலில், மனதைக் குவித்தல் வேண்டும். அதாவது, மனதில் எல்லாக் குடும்பங்களும் நல்லது பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். இதைத்தான், இராமேஸ்வரத்தில் இராமன் மணலைக் குவித்ததாக, இராமாயணத்தில் காட்டினார்கள். இராமேஸ்வரத்தில், மனிதனுடைய பொக்கிஷம் அத்தனையும் உண்டு.

27  நட்சத்திரங்களின் சத்தை, சூரியன்   எவ்வாறு பாதரசங்களாக மாற்றுகின்றதோ, அதே போன்று, 27  நட்சத்திரங்களின் சத்தை சூரியன் கவர்ந்து, இயக்க அணுவாக மாற்றியதை, ஜீவ அணுவாக்கி, இந்த  உடலை உருவாக்கியது உயிர். 

மனிதனானபின்,  27  நட்சத்திரத்தையும் சேர்த்து, முழுமை அடையும் பக்குவத்தைத்தான்,  இராமேஸ்வரத்தில் காட்டினார்கள். இராமேஸ்வரத்தில் 27 கிணறைக் காட்டி இருப்பார்கள். எது எது உணர்வுகள் ஊற்றெடுத்து, நமக்குள் ஒன்றாக்குகின்றது என்று, இராமேஸ்வரத்தில் காட்டப்பட்டது. நம் மனதைக் குவிக்கும் இடம், இராமேஸ்வரம்.

அங்கு நம் மூதாதையர்களை எண்ணி, “எங்களுடன் வாழ்ந்து வளர்ந்த மூதாதையர்கள், சப்தரிஷி மண்டலத்தில் கலந்து, உடலில் பெற்ற நஞ்சுகள் கரைந்து, துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழவேண்டும்என அவர்களை விண்செலுத்தும் இடம் அது. மனிதன் ஒருவன்தான், அதைப் பெறமுடியும். கடைசி முடிவு. 

அணுக்களாகச் சேர்த்து, சூரியனாகி, பிரபஞ்சமாகி, பிரபஞ்சத்தில் உயிரணுவாகி, உயிரணு தோன்றியபின், ஒளியின் உடலாவதுதான், இறுதி நிலை. ஆகையால், முதாதையர்களை முறைப்படி விண் செலுத்தினால், அவர்கள் பிறவி இல்லா நிலை அடைகின்றனர். 

அவர்கள் முன் சென்றால், அதை நாம் அனைவரும் எளிதில் பெற்று, நம் ஆன்மாவைப் புனிதப்படுத்தி, எளிதில், நாம் எல்லோரும், அங்கு சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்லலாம்.